ஸ்டெர்லைட் ஆலைக்கு வக்காலத்து வாங்கும் ஜக்கி வாசுதேவுக்கு நடிகர் சித்தார்த் பதிலடி!

கோவை அருகே ‘ஈஷா அறக்கட்டளை’க்காக சாமியார் ஜக்கி வாசுதேவ் பல்வேறு விதிகளை மீறி சட்டவிரோதமாக வனப்பகுதிக்குள் கட்டிடங்கள் கட்டியிருக்கிறார். இந்த கட்டிடங்களை இடிக்க வேண்டும் என்று வெள்ளியங்கிரி மலை பழங்குடியின பாதுகாப்பு அமைப்பு வற்புறுத்தி வருகிறது. மேலும், மேற்குத் தொடர்ச்சி மலையில் காட்டு யானைகள் நடமாடும் ‘எலிபெண்ட் காரிடார்’ பகுதியில் அவர் பல்வேறு கட்டிடங்கள் கட்டி வருவதை எதிர்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட சமூக விரோதியான ஜக்கி வாசுதேவ், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவும், அந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று போராடிய மக்களுக்கு எதிராகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். “தாமிரம் உருக்கும் தொழிலில் நான் நிபுணன் இல்லை. ஆனால், இந்தியாவில் தாமிரத்தின் பயன்பாடு அதிகம் என்பதால், அதன் தேவையும் அதிகம் என்பது மட்டும் எனக்குத் தெரியும். நாம் சொந்தமாக தாமிரம் உற்பத்தி செய்யாமல் இருந்தால், சீனா போன்ற வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியதிருக்கும். சுற்றுச்சுழல் விதிமுறை மீறல்கள் குறித்து சட்டப்பூர்வமாகவே அணுக வேண்டும். மிகப் பெரிய தொழில்களை அடித்துக் கொல்வது என்பது பொருளாதார தற்கொலை ஆகும்’’ என்று விஷம் கக்கியிருந்தார் அவர்.

ஜக்கி வாசுதேவின் இந்த விஷக்கருத்துக்கு அதிரடியாய் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “முதல்வரால் வெட்கக்கேடு தான். யோகாவைத் தவிர வேறு எதைப் பற்றியும் பிரதமர் பேச மாட்டார். தாமிர உருக்காலையின் பயன்களைப் பட்டியலிடுவதற்கு இது சிறந்த நேரம் இல்லை சத்குரு. மக்கள் காவல் துறையினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். குடிமக்களைச் சுடுவது கொலை. அந்தக் கொலையைப் பற்றி இப்போது பேசுங்கள்” என்று காட்டமாக குறிப்பிட்டுள்ளார் சித்தார்த்.

ஜக்கி வாசுதேவ் போலவே, அவருக்கு முன்பாக பாபா ராம்தேவ் என்ற சமூக விரோதியும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவும், தூத்துக்குடி மக்களுக்கு எதிராகவும் விஷமக் கருத்தை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத் தகுந்தது.