நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்று பாதிப்பால் மரணம்
கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.. பாதிக்கப்பட்ட பலர் சிகிச்சை பலனின்றி ஆயிரக்கணக்கில் உயிரிழப்பது அன்றாட செய்தியாகி வருகிறது. பிரபல திரைத்துறையினரும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இந்த பட்டியலில் நடிகர் நிதிஷ் வீரா தற்போது இணைந்திருப்பது பெருந்துயரம்.
விஜயகாந்த் நடித்த ‘வல்லரசு’ படம் மூலம் நடிகரானவர் நிதிஷ் வீரா. தனுஷின் ’புதுப்பேட்டை’ படத்திலும் நடித்திருக்கிறார். சுசீந்திரன் இயக்கிய ’வெண்ணிலா கபடி குழு’ படம் மூலம் பிரபலமானார். பா.ரஞ்சித் இயக்கிய ‘காலா’ படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்தார் வீரா. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ’அசுரன்’ படத்திலும் நிதிஷ் வீரா நடித்திருந்தார். மேலும் அண்மையில் மரணம் அடைந்த எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய ’லாபம்’ படத்திலும் நடித்துள்ளார்.
நிதிஷ் வீரா சில தினங்களுக்குமுன் கொரோனா தொற்றுக்கு ஆளானார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணம் அடைந்தார் அவருக்கு வயது 45.
நிதிஷ் வீராவின் சொந்த ஊர் மதுரை. அவருக்கு 8 வயதிலும், 7 வயதிலும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
அருண்ராஜா காமராஜ் மனைவி:
நடிகரும், பாடலாசிரியரும், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்த ‘கனா’ படத்தின் இயக்குனருமான அருண்ராஜா காமராஜ், தற்போது ‘ஆர்ட்டிகிள் 15’ என்ற இந்திப்படத்தின் தமிழ் ரீமேக்கை உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்கி வருகிறார்.
அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா (வயது 38). சில தினங்களுக்குமுன் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து கொரோனாவுக்காக சிகிச்சை பெற்றுவந்த சிந்துஜா, சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மரணமடைந்தார்.