மகள் முன்னிலையில் நடிகர் திலீப் திருமணம்: காவ்யா மாதவனை மணந்தார்!
பிரபல மலையாள நடிகர் திலீப்பும் (வயது 48), பிரபல மலையாள நடிகை காவ்யா மாதவனும் (32) இன்று கொச்சியில் திருமணம் செய்துகொண்டார்கள். இந்த இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும்.
இதற்கு முன்பு 1998-ல் நடிகை மஞ்சு வாரியரை திருமணம் செய்த திலீப், 2015-ல் அவரை விவாகரத்து செய்தார். அதேபோல, தொழிலதிபர் நிஸ்சால் சந்திராவை 2009-ல் திருமணம் செய்த காவ்யா, அடுத்த வருடமே அவரை விவாகரத்து செய்தார்.
திலீப்பும் காவ்யாவும் 21 படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் காதலிப்பதாக நீண்டநாட்களாக ஊடகங்கள் கிசுகிசு வெளியிட்டபோதிலும், அதை இருவருமே மறுத்து வந்தார்கள். இந்நிலையில் இன்று இருவரும் திடீரென திருமணம் செய்துகொண்டுள்ளார்கள்.
இத்திருமணத்தில் நடிகர்கள் மம்முட்டி, ஜெயராம், நடிகை மீரா ஜாஸ்மின், மேனகா உள்ளிட்ட பல திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டார்கள்.
காவ்யாவுடன் கிசுகிசுக்கப்பட்டபோது, “என்னுடைய திருமணம் என் மகள் மீனாட்சியின் சம்மதத்தைப் பொறுத்தது” என திலீப் கூறியிருந்தார். இந்நிலையில் மகளின் சம்மதத்துடன், மகளின் முன்னிலையில் காவ்யாவை திருமணம் செய்துள்ளார் திலீப்.
திலீப் – காவ்யா திருமணம் குறித்து திலீப் மகள் மீனாட்சி செய்தியாளர்களிடம் கூறுகையில், “என் அப்பாவை திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்தினேன். அவர் இந்த முடிவை எடுக்க நானும் காரணம். அவருடைய முக்கியமான நாளை காண்பதில் எனக்கும் மகிழ்ச்சி” என்றார்.
“இந்தத் திருமணத்துக்கு என் மகளின் சம்மதம் உண்டு. இரு குடும்பத்தினரின் சம்மதத்துடனே இந்தத் திருமணம் நடைபெற்றுள்ளது. பலமுறை என்னுடன் காவ்யா கிசுகிசுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நான் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்வது சரியாக இருக்காது” என்றார் திலீப்.
இந்த திருமணத்துக்கு வந்திருந்த பலரும் மணமக்களுக்கு வாழ்த்துக்களையும், மீனாட்சிக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தார்கள்.