பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் திடீர் மரணம்

காக்க காக்க,வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா, வட சென்னை,பிகில் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 48.

திருவான்மையூரில் வசித்து வந்த டேனியல் பாலாஜி, நெஞ்சுவலி ஏற்பட்டதும்  கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

டேனியல் பாலாஜியின் உடல், அவர் பிறந்து வளர்ந்த சென்னை புரசைவாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. திரையுலகினர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இவரது இயற்பெயர் பாலாஜி. பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ‘சித்தி’ எனும் தொடர் மூலமாக நடிகராக அறிமுகமான இவர், அந்த தொடரில் ‘டேனியல்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றதால் டேனியல் பாலாஜி என அழைக்கப்படலானார்.

2003 ஆம் ஆண்டு வெளியான ’ஏப்ரல் மாதத்தில்’ என்ற திரைப்படம் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார். காக்க காக்க, வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட அந்தகால வெற்றி திரைப்படங்கள் பலவற்றிலும் நடித்திருக்கிறார். இருந்தபோதிலும் சில வருடங்களுக்கு முன்பு வெளியாகிய வடசென்னை திரைப்படத்தில் இடம் பெற்று இருந்த இவரது தம்பி என்னும் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இவர் தமிழ் அல்லாத சில மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

டேனியல் பாலாஜி தனது சொந்த செலவில் சென்னை ஆவடியில் அங்காள பரமேஸ்வரி என்ற அம்மன் ஆலயம் ஒன்றையும் கட்டியுள்ளார்.

டேனியல் பாலாஜியின் அம்மாவும், மறைந்த நடிகர் முரளியின் அம்மாவும் உடன்பிறந்த சகோதரிகள் என்பது குறிப்பிடத் தகுந்தது.