“ரசவாதி’ படத்தில் ரொமான்ஸ் நிறைய இருக்கிறது; நானும் ரொமான்ஸ் செய்துள்ளேன்!” – நடிகர் அர்ஜூன் தாஸ்

தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். அவரது விசித்திரமான, வசீகரிக்கும் குரலே அவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்துள்ளது. கைதி படத்தில் அசத்தல் வில்லனாக அறிமுகமானவர், குறுகிய காலத்தில் இளம் நாயகனாக வளர்ந்து நிற்கிறார். அநீதி, போர் என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாத்திரங்களில் அசத்தி வருகிறார். விரைவில் அவரது நடிப்பில், மௌனகுரு சாந்தகுமார் இயக்கத்தில், ரசவாதி படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தனக்கு ஆதரவாக, தனக்கு ஊக்கமளித்துவரும் பத்திரிக்கை ஊடக நண்பர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்வினில்

நடிகர் அர்ஜூன் தாஸ் பேசும்பொழுது….

என்னுடைய இந்தத் திரைப்பயணத்தில் நீங்கள் எனக்கு மிகப்பெரும் உந்துதலாக இருந்துள்ளீர்கள், என் குரலைக் குறிப்பிட்டு பாராட்டி, தனித்தனியாக நான் செய்த எல்லாப் பாத்திரங்களின் நிறை குறைகளை பகிர்ந்து,  எனக்கு பெரும் ஊக்கமாக இருந்துள்ளீர்கள். என் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம் நீங்கள் தான்.  அதற்காக உங்கள் அனைவருக்கும் என்  நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய இந்தப்பயணத்தில் எனக்கு வாய்ப்பளித்த அனைத்து இயக்குநர்களும் எனக்காக சிறப்பான பாத்திரங்கள் தந்துள்ளார்கள்.  அதற்குக் காரணமும் நீங்கள் தான். அதற்கும் நன்றி என்றார்.

மேலும் பத்திரிக்கையாளர்களுடன் உரையாடியவர், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

“லோகேஷ் இயக்கும் எல்லாப்படத்திலும் நீங்கள் இருப்பீர்கள்,  ரஜினி சாரை வைத்து லோகேஷ் இயக்கும் புதிய படத்தில் நீங்கள் இருக்கிறீர்களா ?” 

லியோவிலேயே நான் இல்லையே சார், லோகேஷ் எப்போதும் எனக்கு சிறந்த நண்பர் தான், அவர் அழைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். ஆனால் இப்போதைக்கு அப்டேட் எதுவும் இல்லை. ரஜினி சார் படத்தில் இருக்கிறேனா? என்பதை அவர் தான் சொல்ல வேண்டும்.

“நீங்கள் முன்பு டப்பிங் செய்து கொண்டிருந்தீர்கள் ?  இப்போது டப்பிங்கை தொடர்கிறீர்களா ?”

இப்போதைக்கு நான் வாய்ஸ் டப்பிங் எதுவும் செய்யவில்லை. நடிப்பு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.  அதில் கவனம் செலுத்தி வருகிறேன், ஆனால் லோகேஷ் ஏதாவது காட்சிக்காக  கூப்பிட்டால் மறுக்க முடியாது, கண்டிப்பாக செய்வேன்.

“வில்லனாக புகழ் பெற்றீர்கள், இப்போது ஹீரோ ஆகிவிட்டீர்கள்.  மீண்டும் வில்லனாக கூப்பிட்டால் நடிப்பீர்களா ? “

இப்போதைக்கு நான் வில்லன் இல்லை. நடிப்பில் வில்லன் என  இப்போதைக்கு எதுவுமே வரவில்லை. தொடர்ந்து பல படங்கள் மெயின் பாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.  லோகேஷ் கூப்பிட்டால் வில்லனாகத்தான் கூப்பிடுவார்,  அவர் கூப்பிட்டால் கண்டிப்பாக  செய்வேன்.

“பல நல்ல இயக்குநர்களோடு வேலை பார்த்துள்ளீர்கள், எப்படி அவர்களை தேர்ந்தெடுக்கிறீர்கள்?”

நானாக தேர்ந்தெடுத்து எந்த இயக்குநருடனும் வேலை பார்க்கவில்லை. வசந்தபாலன் சார் முதல், அவர்களாக கூப்பிடுகிறார்கள். நான் நடிக்கிறேன் அவ்வளவு தான். எனக்கு மிகச் சிறந்த இயக்குநர்கள் அமைந்தது என் பாக்கியம். இப்போது தான், நிறைய கதைகள் கேட்டு வருகிறேன், எனக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். நல்ல கதாப்பாத்திரங்களில் நடித்து எல்லோரையும் மகிழ்விப்பேன்.

“ரசவாதி எப்படி வந்துள்ளது ? சாந்தகுமாருடன் வேலை பார்த்தது குறித்து கூறுங்கள் ?“

இயக்குநர் சாந்தகுமார் உடன்  வேலை பார்த்தது அட்டகாச அனுபவம். மௌனகுரு எனக்கு பிடித்த படம். அவர் கூப்பிட்டபோது சந்தோசமாக இருந்தது. கதை எனக்கு பிடித்திருந்தது. அவர் படத்தில் நடிப்பது உண்மையில் எனக்கு பெருமை. படத்தைப் பொறுத்தவரையில் ஒரு டாக்டர் ஓய்வுக்காக ஒரு இடத்திற்கு செல்கிறார், அங்கு என்ன நடக்கிறது என்பது தான் கதை. இதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது. படம் பார்த்து நீங்கள் சொல்லுங்கள்.

“லோகேஷிடம் உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்டதாக ஒரு பேட்டியில் கூறினீர்கள், இயக்குநர் ஆகும் எண்ணம் இருக்கிறதா?”

கமல் சாரை அவர் நடிப்பதை நேரில்  பார்க்க வேண்டும் என்பது என் ஆசை.  விக்ரமில் நான் இருப்பது எனக்கு தெரியாது, அதனால் உதவி இயக்குநராக வேலை பார்த்தால் அவரைப் பார்க்கலாம்,  அதனால் தான்  லோகேஷிடம்  கேட்டேன். ஆனால் அவர் என்னை நடிக்க வைத்தார், கமல் சார் நடிப்பதை நேரில் பார்த்தேன். இயக்குநர் ஆகும் எண்ணம் எல்லாம் எனக்கு இல்லை.

“தொடர்ந்து  நெகடிவ் அல்லது ஆக்சன் கதாப்பாத்திரங்களாக செய்கிறீர்களே, ரொமான்ஸ் எப்போது ?”  

ரசவாதி படத்தில் ரொமான்ஸ் நிறைய இருக்கிறது. நானும் ரொமான்ஸ் செய்துள்ளேன்,  அடுத்து மதுமிதா  மேடம் படத்திலும் ரொமான்ஸ் இருக்கிறது, பார்த்து விட்டு சொல்லுங்கள்.

“வில்லனாக வந்து ஹீரோவாக வளர்ந்துள்ளீர்கள் எப்படி இருக்கிறது இந்த அனுபவம் ?”

நான் வளர்ந்திருக்கிறேனா எனத் தெரியவில்லை. துபாயில்  தியேட்டரில் தமிழ்ப்படம் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு இங்கு வந்து, திரையில் நடிக்க முயற்சித்தேன். உங்கள் ஆதரவால் தான் எனக்கு வாய்ப்புகள் வருகிறது. எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை  சிறப்பாக செய்து வருகிறேன் என நினைக்கிறேன் அவ்வளவு தான். நான் பெரிதாக வளர்ந்ததாக நினைக்கவில்லை. இப்போது தான் என் பயணம் ஆரம்பித்துள்ளது. இன்னும் திரைப்பயணத்தில் நிறைய சாதிக்க வேண்டும் என நினைக்கிறேன்.

“திரைத்துறையில் ஆரம்ப காலகட்டங்களில் கஷ்டபட்டிருக்கிறீர்களா ?”

நானும் நிறைய ரிஜக்சனை சந்தித்துள்ளேன். நிறைய பேர் என் வாய்ஸ் எனக்கு மைனஸ் என சொல்லியிருக்கிறார்கள், இப்போது அது ப்ளஸாக மாறியுள்ளது. இது எல்லார் வாழ்விலும் நடக்கும், திரைத்துறை அப்படித்தான்.  ஒவ்வொரு நாளும் திரைத்துறையில் நிறைய கற்றுக்கொண்டு வருகிறேன்.

“நடிகராக இருப்பது மகிழ்ச்சியா ? இல்லை வேறு துறையில் விருப்பம் உள்ளதா? “

நடிகராக இருப்பது தான் எனக்கு மகிழ்ச்சி. திரைத்துறையில் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது, கண்டிப்பாக இது தான் எனக்கு சந்தோசம்.

“ஏன் உங்கள் படங்கள் அதிகம் வருவதில்லை ?”

ஒரு நேரத்தில் ஒரு படம் தான் செய்கிறேன் அது என் பழக்கம். கடந்த வருடம் நிறைய நடித்திருக்கிறேன்.  இந்த வருடம் நிறையப் படங்கள் தொடர்ந்து வரும்.

“உங்கள் நண்பர் லோகேஷ் நடிகர் ஆகிவிட்டாரே? தொடர்ந்து நடிப்பாரா ?”

அந்த ஆல்பம் சாங் வரும் முன்னரே என்னிடம் காட்டினார். உண்மைய சொல்லு மச்சி, எப்படி இருக்கிறது எனக்கேட்டார். நடிப்பதில் அவர் நெர்வஸாக இருந்தார். மாஸ்டரில் நடிக்கவே அவர் நிறையத் தயங்கினார். தொடர்ந்து நடிப்பது பற்றி அவரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். ஆனால் அவர் நடிப்பாரா எனத் தெரியவில்லை. நடித்தால் எனக்கு மகிழ்ச்சி.

“லோகேஷ் பற்றி அதிகம் பேசுகிறீர்களே ஏன்?”

அவரிடம் தான் இந்த என் நடிப்பு ஜர்னி ஆரம்பித்தது. கைதி தான் நான் இந்த மேடையில் இருக்கக் காரணம், அவர் எனக்கு நிறைய வாய்ப்புகள் தந்துள்ளார். அவர் எனக்கு மிகச்சிறந்த மெண்டார். எனக்கு வாய்ப்பு தரும் இயக்குநர்கள் தான் என் மெண்டார். விக்னேஷ் சாரும் என் மெண்டார் தான்.  லோகேஷுடன் அதிகம் வேலை செய்ததால் அவரைப் பற்றி அதிகம் சொல்கிறேன். என் திரைப்பயணம் முழுக்க அவர் இருக்கிறார் என்பது தான் காரணம்.

“கைதி 2 வருகிறதா ?”

கைதி 2 இருக்கிறது என லோகேஷும் சொல்லியிருக்கிறார். கார்த்தி சாரும் சொல்லியிருக்கிறார். விக்ரமில் உயிருடன் வந்ததால் நான் இருப்பேன் என நினைக்கிறேன்.

“என்ன மாதிரியான பாத்திரங்கள் நடிக்க ஆசை ?”

எனக்கு அப்படி வித்தியாசமாக எந்த ஆசையும் இல்லை.  வரும் கதாப்பாத்திரங்களில் எனக்கு செட் ஆகும் பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன்.  தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து மக்களை மகிழ்விக்க வேண்டும் அவ்வளவு தான்.

“உங்களுடைய அடுத்தடுத்த படங்கள் பற்றி? “

மதுமிதா  மேடம் உடன்  ஒரு படம் செய்கிறேன். அதற்கடுத்து, விஷால் வெங்கட்டுடன் ஒரு படம் செய்கிறேன். இன்னும் சில படங்கள் பேச்சு வார்த்தையில் இருக்கிறது. இப்போது ரசவாதம் வெளியாகவுள்ளது. படம் பார்த்து உங்கள்  ஆதரவைத் தாருங்கள் நன்றி.