ஆக்ஷன் – விமர்சனம்

விஷால் நடிப்பில் வெளியான தோல்விப்படங்களின் பட்டியலில் மற்றுமொன்றாய் சேர்ந்திருக்கிறது ‘ஆக்ஷன்’.
தமிழக முதலமைச்சராக இருக்கும் பழ.கருப்பையாவிற்கு ராம்கி, விஷால் என்று இரண்டு மகன்கள். இதில் விஷால் ராணுவ அதிகாரியாக இருக்கிறார். இவருடன் பணிபுரிந்து வரும் தமன்னா, விஷாலை ஒரு தலைபட்சமாக காதலித்து வருகிறார். ஆனால், விஷாலோ ராம்கியின் மனைவியான சாயாசிங்கின் தங்கை ஐஸ்வர்யா லட்சுமியை காதலிக்கிறார்.
ராம்கியை தன்னுடைய அரசியல் வாரிசாக நிறுத்துகிறார் பழ.கருப்பையா. தேர்தல் வரும் நிலையில், மத்தியில் இருக்கும் கட்சியுடன் கூட்டணி அமைக்க பேச்சு வார்த்தை நடத்துகின்றனர். இதற்காக அந்த கட்சி தலைவர் சென்னைக்கு வந்து ஒரு மேடையில் பேசும்போது, குண்டு வெடித்து இறக்கிறார்.
இவர் இறப்பதற்கு ராம்கி தான் காரணம் என்று பழி விழுகிறது. இந்த பழியை போக்க விஷால் களத்தில் இறங்குகிறார். இறுதியில் இதற்கு காரணமானவர்களை விஷால் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் விஷால், படத்தின் தலைப்புக்கு ஏற்றார்போல் ஆக்ஷனில் கலக்க முயற்சி செய்திருக்கிறார்.. படம் முழுவதும் ஓடுகிறார், தாவுகிறார், பறக்கிறார். மொத்த்த்தில் பரிதாபமாக வந்து போகிறார்.
இவருடன் படம் முழுவதும் பயணிக்கிறார் நடிகை தமன்னா. இதில் இவருக்கு நடிக்க அதிகம் வாய்ப்பு இருந்தபோதிலும் கவர்ச்சியால் தான் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். மற்றொரு நடிகையாக வரும் ஐஸ்வர்யா லட்சுமிக்கு பெரியதாக வாய்ப்பு இல்லை.
ஒரு சில இடங்களில் யோகிபாபுவின் காமெடி கைகொடுத்திருக்கிறது. பழ.கருப்பையா, ராம்கி, கபீர் சிங், சாயாசிங் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
சுந்தர்.சி-யின் வழக்கமான படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் இப்படம் உருவாகி இருக்கிறது. ஆக்ஷனுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இப்படம் பெரிய அளவில் கைக்கொடுக்கவில்லை என்றே சொல்லலாம். சுந்தர்.சி படங்களுக்கு சென்றால் காமெடி நிச்சயம் என்று எதிர்ப்பார்த்து செல்பவர்களுக்கு இந்த படம் ஏமாற்றம். லாஜிக் மீறல்கள், படத்தின் நீளம் ஆகியவற்றை கவனித்திருக்கலாம். சில காட்சிகள் கவர்ந்தாலும், பல காட்சிகள் சோர்வை ஏற்படுத்தி இருக்கிறது. கடைசி 30 நிமிட காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்கிறது.
ஹிப்ஹாப் ஆதியின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணியில் ஓரளவிற்கு ஸ்கோர் செய்திருக்கிறார். படத்திற்கு பெரிய பலம் டுலேவின் ஒளிப்பதிவு. வெளிநாட்டு இடங்கள் பலவற்றை அழகாக காண்பித்திருக்கிறார்.
‘ஆக்ஷன்’ – கொட்டாவி!