அச்சமின்றி – விமர்சனம்
பள்ளித் தேர்வுக்கான வினாத்தாளை ஜெராக்ஸ் எடுத்து, ஃபேக்ஸ் செய்து, முன்கூட்டியே கசியவிடும் மோசடிக்கும்பலை துரத்திப் பிடிக்கும் மாவட்ட ஆட்சியர் தலைவாசல் விஜய், வெடிகுண்டு வைத்து கொல்லப்படுகிறார்.
தரமான கல்வி கிடைக்கும் என்ற எண்ணத்தில் தனியார் பள்ளிக்கு அனுப்பப்பட்ட மாணவன், உயிரற்ற சடலமாகத் திரும்பி வருகிறான். வாய் பேச இயலாத அவனது அக்கா (போலீஸ் அதிகாரி சமுத்திரக்கனியின் காதலி) மர்மமான முறையில் இறக்கிறாள். இந்த மர்ம மரணம் குறித்து புலனாய்வு செய்யும் போலீஸ் அதிகாரி சமுத்திரக்கனியை, சக போலீஸ் அதிகாரியே என்கவுண்ட்டர் செய்து கொல்ல முயலுகிறார்.
தற்செயலாக ஒரு மணிபர்ஸை திருடும் பிக்பாக்கெட் திருடன் (நாயகன் விஜய் வசந்த்), அந்த பர்ஸில் உள்ள முக்கியமான ரகசிய பொருள் ஒன்றுக்காக ஒரு ரவுடி கும்பலால் துரத்தப்படுகிறான். அவனது காதலி (சிருஷ்டி டாங்கே), தன் வீட்டு வேலைக்காரப் பெண்ணின் மகளுக்கு ரீவேல்யூவேஷனுக்கு உதவப்போய், உயிர் அபாயச் சிக்கலில் மாட்டிக்கொள்கிறாள்.
அடுத்தடுத்து தொடர்ச்சியாக நிகழும் இந்த அதிபயங்கர சம்பவங்களுக்கு பின்னணியில் இருப்பது யார்? ஏன்? என்ற கேள்விகளுக்கு விறுவிறுப்புடன் விடை அளிக்கிறது மீதிக்கதை.
கல்வித் துறையில் நடக்கும் மோசடிகளையும் அவலங்களையும் மையமாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ப.ராஜபாண்டி. தனியார் பள்ளிகளின் லாப வெறி, அரசுப் பள்ளிகளிடம் காட்டப்படும் அலட்சியம் ஆகியவற்றை துணிச்சலாக அம்பலப்படுத்தியிருக்கிறார். பல்வேறு கதாபாத்திரங்கள், கிளைக் கதைகள், திருப்பங்கள் ஆகியவற்றுடன் ஆங்காங்கே காமெடியை தூவி சுவாரஸ்யமாக படத்தை நகர்த்திச் சென்று, யாருமே எதிர்பார்க்காத க்ளைமாக்ஸை வைத்து கைதட்டல் பெறுகிறார்.
மாவட்ட ஆட்சியர் படுகொலை மூலம் எடுத்த எடுப்பிலேயே எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இயக்குநர், கல்வி அமைச்சர் தொடர்பான காட்சிகள் மூலம் அந்த எதிர்பார்ப்பைக் கூட்டுகிறார். அடுத்தடுத்த கொலைகள், துரத்தல்கள், கல்வித் துறைப் பிரச்சனைகள் என்று படம் வேகமெடுக்கிறது. கொலைகளுக்கான பின்னணி குறித்த சஸ்பென்ஸ் காப்பாற்றப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் முன்வைக்கப்படும் வாதங்கள் கல்வித் துறை சார்ந்த பிரச்சனைகளின் பல்வேறு கோணங்களை எடுத்துரைக்கின்றன.
பிக்பாக்கெட் திருடனாக வரும் விஜய் வசந்த் தனது நகைச்சுவை கலந்த எதார்த்த நடிப்பில் அனைவரையும் கவர்கிறார். முதல் பாதியில் இவரது கதாபாத்திரம் நகைச்சுவையாக நகர்ந்தாலும், சமுத்திரகனியுடன் இணைந்த பிறகு ஆக்சனுக்கு மாறுகிறது. ஆக்சன் காட்சிகளில் ஆக்ரோஷமாக நடித்திருக்கிறார். தனக்கேற்ற சரியான கதையை தேர்வு செய்து, தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை முழுமையாக கொடுத்திருக்கிறார்.
சிருஷ்டி டாங்கே அழகு பதுமையாக படம் முழுக்க வலம் வந்திருக்கிறார். காதல் காட்சிகளில் மட்டுமில்லாது, செண்டிமெண்ட் காட்சிகளிலும் ரசிக்க வைக்கிறார். பரபரப்பான காட்சிகளில் தனது நடிப்பை சிறப்பாக செய்து, தனது கதாபாத்திரத்துக்கு நியாயம் வழங்கியிருக்கிறார்.
அப்பாவி அம்மாவாகவே திரையில் தோன்றிவரும் சரண்யா பொன்வண்ணனை மிடுக்கான பள்ளி முதல்வராகவும் ஈவிரக்கமற்ற பண முதலையாகவும் சித்தரித்திருக்கும் வித்தியாசம் கவனம் ஈர்க்கிறது. சரண்யாவின் நடிப்பு பாத்திரத்துக்கு மெருகேற்றுகிறது. வன்மத்தை மறைத்துக்கொண்டு இன்முகம் காட்டுவது, தேவைப்படும்போது சீறி எழுவது, நீதிமன்றத்தில் பதற்றப்படாமல் தன் தரப்பை முன்வைப்பது என்று சரண்யா வித்தியாசமான முத்திரை பதிக்கிறார்.
கல்வி அமைச்சரின் பாத்திரத்தின் மீது படம் முழுவதும் சந்தேகத்தின் நிழலைப் படியவிடுவது சுவாரஸ்யம். கல்வி அமைச்சராக வரும் ராதாரவியின் முதிர்ச்சியான நடிப்பும் அனுபவமும் அவர் பாத்திரத்துக்கு உயிர் கொடுக்கின்றன.
விறைப்பான காவல் துறை அதிகாரி என்பது சமுத்திரக்கனிக்குப் பழக்கமான வேடம் தான். அந்த விறைப்பைக் காதலில் சற்றே நெகிழ வைத்து வித்தியாசம் காட்டுகிறார் இயக்குநர்.
பிரேம்ஜி அமரனின் இசையில் எல்லா பாடல்களிலும் இளையராஜாவின் சாயல் இருக்கிறது. சுட்ட பழமாக இருந்தாலும் சுவையாக இருக்கிறது. பின்னணி இசையும் ரசிக்கும்படி இருக்கிறது. வெங்கடேஷின் ஒளிப்பதிவும் அருமையாக இருக்கிறது. சண்டைக் காட்சிகளில் எல்லாம் இவரது கேமரா சுழன்று படமாக்கியிருக்கிறது.
‘அச்சமின்றி’ – அவசியமான கருத்துப் புரட்சி!