தேவயானியின் கணவர் ராஜகுமாரனை கலாய்க்கும் பிரபல இயக்குனர்கள்!
விஜய் மில்டன் இயக்கத்தில், அவரது சகோதரர் பாரத் சீனி தயாரித்துள்ள படம் ‘கடுகு’. இதில் நடிகர் பரத், இயக்குனர் ராஜகுமாரன், தயாரிப்பாளர் பாரத் சீனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
இரண்டரை நிமிடம் ஓடக் கூடிய இந்த படத்தின் டீஸரில், முதல் ஒன்றரை நிமிடம் பிரபல இயக்குனர்கள் சுசீந்திரன், லிங்குசாமி, பாண்டிராஜ், வெங்கட்பிரபு, பாலாஜி சக்திவேல் ஆகியோர் நையாண்டியான யோசனைகளை கூற, அதன் பிறகு ஆரம்பமாகிறது கடுகு படத்தின் டீசர்.
கோலி சோடா படத்திற்கு பின் என்ன பண்ணலாம் என்று கடுகு படத்தின் விஜய் மில்டன் கேட்க, அதற்கு சுசீந்திரன் “இறுதிச்சுற்று மாதிரி ஒரு கதை இருக்குன்னு சொன்னீங்களே…” என்றும், இயக்குனர் பாண்டிராஜ் “பேசமா கோலி சோடா பார்ட் 2 வே பண்ணிடுங்க” என்றும் சொல்கின்றனர்.
அதனை தொடர்ந்து இயக்குனர் விஜய் மில்டன் கடுகு படத்தின் கதையை நடிகர் பாரத்திடமும், நடிகை சுபிக்ஷாவிடமும் கூறுகிறார் “ஒரு பத்து பேர் உள்ள பஸ் ஸ்டாண்ட்ல, உன்ன மாதிரி ஒரு பையனையும், அவங்கள மாதிரி உள்ள ஒரு பெண்ணையும் தான் நோட் பண்ணுவாங்க. ஆனா மூணாவதா மக்கள் நோட் பண்ண கூடிய ஆள் யாரு?” என்று கேட்கிறார்.
யார் அந்த மூன்றாவது நபர் என்ற ஆர்வம் பார்வையாளர்களின் மனதில் அலைந்து ஓட, அந்த இடத்தில் என்ட்ரி கொடுக்கிறார் நடிகரும், இயக்குனருமான ராஜகுமாரன்.
“இயக்குனர் ராஜகுமாரனையா நடிக்க வைக்க போறீங்க?” என்று இயக்குனர் லிங்குசாமி ஆச்சரியத்துடன் கேட்க, இயக்குனர் வெங்கட் பிரபுவோ “அப்படி என்றால் கடுகு படம் அதிரடியா? இல்ல திகில் படமா?” என்று சந்தேகத்துடன் கேட்கிறார்.
அதனை தொடர்ந்து ராஜகுமாரனை விஜய் மில்டனும் அவரது கடுகு படக்குழுவினரும் கதை சொல்ல அணுகுகின்றனர். ஆனால் ராஜகுமாரனோ “நல்ல யோசிச்சீங்களா? நான் தான் நடிக்கனுமா” என்று நையாண்டியாக கேட்கிறார்.
“அவர் நடிப்பதில் அவருக்கே சந்தேகமா???” என்று இயக்குனர் பாண்டிராஜ் விஜய் மில்டனிடம் கேட்க, “அவரை வச்சி முதலில் ஒரு டீசர் எடுப்போம். அது நல்ல ஹிட் ஆச்சுன்னா அப்படியே தொடர்ந்து போவோம்” என்று இயக்குனர் பாலாஜி சக்திவேலும், இயக்குனர் லிங்குசாமியும் கூறுகின்றனர்.
அப்போது ஆரம்பமாகும் கடுகு படத்தின் டீசரானது “இந்த உலகத்துல கெட்டவங்கள விட மோசமானவங்க யாருன்னா….” என்ற வார்த்தைகளோடு துவங்கி, “தப்பு நடக்கும் போது ஏன்னு தட்டி கேக்காத நல்லவங்க தான்….” என்ற வார்த்தைகளோடு முடிவடைகிறது.
புலி வேஷம் போட்டிருக்கும் ராஜ குமாரனின் கெட்டப் கடுகு டீசரின் ஆரம்பத்தில் கம்பீரகமாகவும், இறுதியில் அவர் பார்க்கும் பார்வை அனைவரையும் சிரிக்க வைக்கும் விதத்திலும் உள்ளது.
கடுகு டீசரை கண்ட இயக்குனர் வெங்கட் பிரபு “விஜய் மில்டனின் கதை களம் எப்போதுமே சற்று வித்தியாசமானது தான்.
அதை நிரூபிக்கும் வண்ணமாக அமைந்திருக்கிறது இந்த கடுகு படத்தின் டீசர்” என்றார்.
இயக்குனர் லிங்குசாமி கடுகு டீசரை பார்த்த பிறகு, ” இந்த அளவிற்கு கடுகு டீசர் என்னை சிரிக்க வைத்து விடும் என்பதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
கண்டிப்பாக விஜய் மில்டனுக்கு இந்த கடுகு திரைப்படம் அடுத்த ஒரு மைல் கல்லாக அமையும். கடுகு படக்குழுவினருக்கும், விஜய் மில்டனுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்” என்று கூறினார்.
இப்படி பெரும்பாலான திரையுலக நட்சத்திரங்கள் விஜய் மில்டனின் கடுகு டீசருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இயக்குனர் கௌதம் மேனன் தனது டிவிட்டர் பக்கத்தில் “மிகவும் இயல்பாகவும், எதார்த்தமாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது. கடுகு – விஜய் மில்டனின் ஒரு தைரியமான முயற்சி” என்று எழுதி இருக்கிறார்.