ஆயிரம் பொற்காசுகள் – விமர்சனம்
நடிப்பு: விதார்த், சரவணன், அருந்ததி நாயர், ஹலோ கந்தசாமி, ஜார்ஜ் மரியான், பாரதி கண்ணன், வெற்றிவேல் ராஜா, பவன் ராஜ், ஜிந்தா, கர்ணராஜா, ஜிந்தா கோபி, செம்மலர் அன்னம், ரிந்து ரவி, தமிழ்செல்வி மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: ரவி முருகையா
இசை: ஜோஹன் சிவனேஷ்
ஒளிப்பதிவு: பானு முருகன்
படத்தொகுப்பு: ராம் & சதீஷ்
தயாரிப்பு: ராமலிங்கம்
பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்
தஞ்சாவூர் கிராமம் ஒன்றில் வேலைவெட்டிக்குப் போகாமல், அரசு தரும் நியாயவிலைக் கடைப் பொருட்கள் தயவிலும், அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் வளர்க்கும் கோழிகளின் தயவிலும் வயிறுமுட்ட சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வருபவர் ஆனிமுத்து (பருத்திவீரன் சரவணன்). அவரது லட்சணம் இப்படியிருக்க, தன் மகன் அவரிடம் வளர்ந்தால் சரியாக இருக்கும் என்று தமிழ்நாதனை (விதார்த்) அவரிடம் விட்டுவிட்டுப் போகிறார் ஆனிமுத்துவின் சகோதரி (ரிந்து ரவி). தாய்மாமன் ஆனிமுத்துவும், மருமகன் தமிழ்நாதனும் உதவாக்கரைகளாக ஊர்சுற்றித் திரிகிறார்கள்.
வீட்டில் கழிவறை கட்டினால் ஊராட்சி நிர்வாகம் 12 ஆயிரம் ரூபாய் தரும் என்பதால், அதற்காக அவர்கள் தங்கள் வீட்டில் குழி தோண்டுகிறார்கள். அப்போது அந்த குழியில் சோழர் காலத்து பொற்காசுகள் தங்கப்புதையலாக கிடைக்கிறது. அரசிடம் ஒப்படைக்க வேண்டிய அந்த தங்கப்புதையலை ஒப்படைக்காமல், குழி தோண்டிய அரிச்சந்திரனையும் (ஜார்ஜ் மரியான்) சேர்த்து மூன்று பேரும் யாருக்கும் தெரியாமல் அதை தங்களுக்குள் பங்கு போட்டுக்கொள்ள நினைக்கிறார்கள்.
ஆனால், அந்த தகவலை ஊரில் உள்ளவர்கள் ஒவ்வொருவராக தெரிந்துகொண்டு அவர்களும் புதையலில் பங்கு கேட்கிறார்கள். இப்படி பங்குதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போக, இறுதியில் அந்த பொற்காசுகள் யாருக்கு கிடைத்தது? என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவையாக சொல்வது தான் ‘ஆயிரம் பொற்காசுகள்’ படத்தின் கதை.
ஆயிரம் பொற்காசுகள் ஒருவருக்குக் கிடைத்து, அது ஊர் முழுவதும் தெரிந்தால் என்ன நடக்கும் என்பதை லாஜிக் மீறாத நகைச்சுவையால் கலகலப்பாகத் தந்திருக்கிறார் இயக்குநர் ரவி முருகையா. கதையே காமெடிக்கான அனைத்தையும் கொண்டிருப்பதால், எளிதாகப் படத்தோடு ஒன்றவிட முடிகிறது.
வேலை வெட்டி இல்லாத ஆனைமுத்து, தமிழ், எதிர்வீட்டு மீன் வியாபாரி கோவிந்தன் (ஹலோ கந்தசாமி), போலீஸ் அதிகாரி முத்துப்பாண்டி (பாரதி கண்ணன்), நகை செய்பவர் (வெற்றிவேல் ராஜா), நாயகி பூங்கோதை (அருந்ததி நாயர்), அவரின் தோழி (செம்மலர் அன்னம்), வட இந்திய மனநோயாளி என இயக்குநர் தேர்வு செய்த கேரக்டர்களும் அவர்களுக்கான எழுத்தும் படத்துக்குக் கச்சிதமாகக் கைகொடுத்திருக்கின்றன. பெரிய வாய்ப்பு கிடைக்காத சின்ன நடிகர்களும் தங்கள் திறமைகளை நிரூபிப்பார்கள் என்பதற்கு இந்தப் படம் சாட்சி.
சமீப காலமாகச் சிறந்த படங்களைத் தேர்வு செய்து நடிக்கும் விதார்த், இதிலும் தனது இயல்பான நடிப்பால் ஈர்க்கிறார். வேலை வெட்டி இல்லாத சரவணன், டிவியை சத்தமாக வைத்துவிட்டு பண்ணும் ரகளைகள் சிரிப்பை வரவழைக்கின்றன. விதார்த்தைக் கண்டதுமே காதலிக்கத் தொடங்கும் அருந்ததி நாயர் கேரக்டர் கொஞ்சம் அதிகப்படிதான் என்றாலும் ரசிக்கும்படியாக இருக்கிறது. அம்மாவுக்குக் கடிதம் எழுதிவைத்துவிட்டு அவர், ஊரை விட்டு ஓட கிளம்புவதும் பிறகு காலையில் வந்து கடிதத்தை எடுத்துவைத்துவிட்டு அம்மாவுடன் படுத்துக்கொள்வதும் குபீர் ரகம். கிளைமாக்ஸில் புதையலைக் கைப்பற்ற ஊரே நடத்தும் துரத்தல், நகைச்சுவை நான்ஸ்டாப்.
பானுமுருகனின் ஒளிப்பதிவும் ஜோஹன் சிவனேஷின் இசையும் படத்துக்கு பலம் சேர்த்திருக்கின்றன. தொடக்கத்தில் புதையல் கிடைக்கும் வரை படம் மெதுவாக நகர்ந்தாலும் அதற்குப் பிறகு நடக்கும் களேபரங்கள் ரசிக்க வைக்கின்றன.
‘ஆயிரம் பொற்காசுகள்’ – நம்பிக்கையோடு போய் பார்த்து ரசித்து சிரித்துவிட்டு வரலாம்!