‘ஆறாது சினம்’ விமர்சனம்
‘மௌனகுரு’, ‘டிமாண்டி காலனி’ என தரமான படங்களில் நடித்த அருள்நிதி, ‘ஈரம்’, ‘வல்லினம்’ என தரமான படங்களை இயக்கிய அறிவழகன் – இந்த இருவரின் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தான் ‘ஆறாது சினம்’.
போலீஸ் அதிகாரியாக வரும் அருள்நிதி படத்தின் ஆரம்பத்திலேயே மிரட்டல் என்கவுண்டருடன் அறிமுகமாகிறார். ஆனால், ஒரு சில காரணங்களால் அந்த என்கவுண்டர் கைவிடப்பட, வில்லனால் அவர் குடும்பத்தை இழக்கிறார். இதன்பிறகு வாழ்க்கையை ஏதோ கடமைக்கு வாழ்வது போல், வெறும் குடியுடன் மட்டும்தான் அருள்நிதி வாழ்கிறார்.
இத்தருணத்தில் இவர் வாழ்க்கையில் மீண்டும் ஒரு கடமை வர, அரைமனதுடன் அந்த வழக்கை விசாரிக்க சம்மதிக்கிறார். தொடர்ந்து தேனி, சிவகங்கை பகுதிகளில் ஒரு சிலர் கொலை செய்யப்பட, யார் இந்த கொலையை செய்கிறார்கள் என அருள்நிதி தேடுகிறார்.
இந்த கொலைகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்க, கொலையாளி ஒரு சீரியல் கில்லர் என தெரிய வருகிறது. அரைமனதுடன் புலனாய்வுக்குள் வந்த அருள்நிதி, விஷயம் அறிந்து சீரியஸ் ஆகிறார். சின்னச் சின்ன தடயங்களாக தேடி கிளைமாக்ஸில் வில்லனை நெருங்கும் தருணத்தில் அருள்நிதிக்கு ஒரு தடை வர, யார் அந்த கொலைகளை செய்பவர்? எதற்காக இப்படியெல்லாம் செய்கிறார்? என்பதை கடைசி வரை சஸ்பென்ஸாக வைத்து விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.
அருள்நிதி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் கச்சிதம். குடிநோயாளியாக இருந்துகொண்டு பழைய நினைவுகளில் தவிப்பதும், தன்னை புதுப்பித்துக்கொள்ள முடியாமல் திணறுவதும், பாசத்துக்காக பரிதவிப்பதுமாக மனிதர் அசாதாரணமாக அண்டர்ப்ளே செய்திருக்கிறார். இதேபோல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் நலமும், வளமும் சேரும்.
சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் ஐஸ்வர்யா ராஜேஷ் கவனிக்க வைக்கிறார். இயக்குநர் கௌரவ் நாராயணன் வில்லன் கதாபாத்திரத்துகுரிய வேலையை செய்து முடிக்கிறார். ராதாரவி, துளசி, ரோபோ சங்கர், சார்லி, போஸ் வெங்கட், அனுபமா, ஆர்.என்.ஆர்.மனோகர், ஐஸ்வர்யா தத்தா, ரித்திகா ஆகியோர் பொருத்தமான தேர்வு.
அரவிந்த் சிங் காமிரா என்கவுன்டர் ஏரியாவில் ஆரம்பித்து தமிழகத்தின் முக்கிய நகரங்கள் வரை எல்லா இடங்களிலும் பயணித்திருக்கிறது. அதனாலேயே என்னவோ குற்றவாளியை நெருங்கும்போது நமக்கும் பதற்றத்தைக் கடத்தியுள்ளார்.
தமனின் இசையும், பின்னணியும் படத்துக்கு பெரும் பலம். “தனிமையே தனிமையே” பாடல் ரசிக்க வைக்கிறது. திருக்குறளில் கள்ளுண்ணாமை அதிகாரத்தில் உள்ள குறள்களை பாடலாகப் பயன்படுத்தியவிதம் அருமை.
உளவியலை உள்ளடக்கிய க்ரைம் – த்ரில்லர் படமான ‘மெமரீஸ்’ மலையாளப் படத்தை தமிழில் கொடுக்க முனைந்ததற்காக இயக்குநர் அறிவழகனை பாராட்டலாம்.
குடியின் பிரச்சினைகளை பிரச்சாரமாக பதிவு செய்யாமல், கதைக்குள் நகர்த்திய விதத்திலும், குடி நோயாளி அதிலிருந்து மீண்டு வெளிவருவதை அழுத்தமாக பதிவு செய்த விதத்திலும், க்ரைம் த்ரில்லர் படத்துக்கான எல்லா அம்சங்களையும் உள்ளடக்கிய விதத்திலும் ‘ஆறாது சினம்’ கவனிக்க வைக்கிறது.
‘ஆறாது சினம்’ – தோற்காது!