ஆறாம் வேற்றுமை – விமர்சனம்
கூனிக்காடு, கோட்டைக்காடு என்ற இரு மலைக் கிராமங்கள். இதில் கோட்டைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் நாயகி கோபிகா. தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் இவரை, அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறார் வன அதிகாரி சேரன் ராஜ்.
கோட்டைக்காடு கிராமத்திற்கு எதிர் மலையில் இருக்கிறது கூனிக்காடு. இங்கு வாழ்பவர்கள் அனைவரும் பேசத் தெரியாத காட்டு வாசிகள். இந்த ஊரில் தன் நண்பர்களுடன் வாழ்ந்து வருகிறார் நாயகன் அஜய்.
ஒரு நாள் கோட்டைக்காடுக்கு வரும் அஜய், அங்கு நாயகி கோபிகாவை பார்த்து காதல் வயப்படுகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்து வரும் நிலையில், ஊர் தலைவரான அழகுக்கு அவரை திருமணம் செய்வதற்கான சூழ்நிலை ஏற்படுகிறது.
இறுதியில் கோபிகா, நாயகன் அஜய்யுடன் இணைந்தாரா? ஊர் தலைவருடன் திருமணம் நடந்ததா? வன அதிகாரி சேரன் ராஜ், கோபிகாவை அடைந்தாரா? என்பதே மீதிக்கதை.
நாயகன் அஜய் இப்படத்தில் வசனங்கள் ஏதும் இல்லாமல், உடல் மொழியால் நடித்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார். காட்டு வாசிகள் போல் வேகமாக ஓடுவது, நடப்பது என அனைத்திலும் திறம்பட செய்திருக்கிறார். நாயகி கோபிகா பாவாடை தாவணியில் படம் முழுக்க அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியின் தோழியாக வரும் உமாஸ்ரீக்கு முக்கியமான கதாபாத்திரம். கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.
வசனம் பேசாமலே ஓரளவிற்கு ரசிக்க வைத்திருக்கிறார் யோகிபாபு. வன அதிகாரி சேரன் ராஜ், ஊர் தலைவர் அழகு ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
நாகரீகமான மலைவாழ் மக்கள், காட்டு வாசிகளான மலைவாழ் மக்கள் என இரண்டு கிராமங்களாக பிரித்து, அதில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஹரி கிருஷ்ணா. புகழ் பெற்ற படமான ‘அப்போகலிப்டோ’ பாணியில் இப்படத்தின் தோற்றம் இருந்தாலும், தமிழ் படங்களுக்குண்டான காதல், சென்டிமென்ட் என அனைத்தையும் வைத்து, மாறுபட்ட கோணத்தில் உருவாக்கி இருக்கிறார்.
கணேஷ் ராகவேந்திரா இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையை ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார். அறிவழகனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘ஆறாம் வேற்றுமை’ அழகு.