“சாதி ஒழியும்போது இந்துமதம் தானாக ஒழிந்துவிடும்!” – ஆதவன் தீட்சண்யா
1.தலித்துகள் மீது தாக்குதலுக்கான நோக்கம் என்ன?
தலித்துகள் தமக்கு சமமானவர்கள் அல்ல என்கிற இழிநோக்கும், தமக்கு கட்டுப்பட்டவர்கள் என்கிற ஆதிக்க மனநிலையும் கொண்ட சாதி இந்துக்களால் அவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர்.
* கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கவனம் செலுத்தி முன்னேறுவது
* ஒடுக்குமுறைகளை எதிர்த்து அமைப்புரீதியாக திரள்வது
* சமூகரீதியாகவும் சட்டரீதியாகவும் சமவுரிமை கோருவது
– என தன்மதிப்போடு வாழ்வதற்கு தலித்துகள் மேற்கொள்ளும் எத்தனங்களை தடுப்பதற்காகவே தாக்கப்படுகின்றனர். இவ்வாறான எத்தனங்களை மேற்கொள்ளாத சாதிஇந்துக்களை அண்டியடங்கிய தலித்துகளும் இருக்கிறார்கள். அதேநிலையில் நீடிக்கச்செய்வதற்காக அவர்களும் கடும் சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாக்கப்படுகின்றனர். தலித்துகள் மீது எவ்வளவு கொடிய தாக்குதலை நடத்தினாலும் அதற்காக தண்டிக்கப்பட மாட்டோம் என்கிற தைரியம் இதற்கெல்லாம் பின்புலமாகவுள்ளது.
2.இன்றைய நவீன யுகத்தில் தலித்துகள் மீது தாக்குதல் மற்றும் புறக்கணிப்பு எத்தகைய வடிவங்களில் நடைபெறுகிறது?
நவீன கருவிகளும் தொழில்நுட்பங்களும் புழக்கத்திலிருப்பதை வைத்து இதை நவீன யுகம் என்று அழைத்துவிட முடியாது. நவீன கருவிகளையும் தொழில்நுட்பங்களையும் வைத்துக்கொண்டு காலத்தால் வெகுவாக பின்தங்கிய அல்லது எந்தக் காலத்திற்கும் ஒவ்வாத கருத்துகளை பரப்பி காப்பாற்றும் வேலைதான் இங்கு ஜோராக நடந்துவருகிறது.
தலித்துகள் மீதான தாக்குதலும் புறக்கணிப்பும் இன்று நேற்றல்ல, சாதியம் தோன்றிய காலம்தொட்டே நடந்து கொண்டுதானிருக்கின்றன. நாடு முழுவதும், நாடு கடந்து இந்துக்கள் உள்ள இடங்களிலும் இந்தத் தாக்குதலும் புறக்கணிப்பும் சில பொதுவான வடிவங்களைக் கொண்டிருக்கின்றன. கல்வியை மறுப்பது, வழிபாட்டுரிமையை பறிப்பது, பொதுவளங்களைப் பயன்படுத்துவதிலிருந்து தடுப்பது, நடமாட்டத்தையும் புழங்குவெளியையும் மட்டுப்படுத்துவது, அதிகார அமைப்புகளில் பங்கெடுக்கவிடாமல் செய்வது, நிலங்களையும் உற்பத்திப் பொருட்களையும் அபகரித்துக்கொள்வது, ஊரை எரிப்பது, உடைமைகளை கொள்ளையடிப்பது, மாட்டுத்தோலை உரித்தார்கள் என்று கல்லால் அடித்துக் கொல்வது, கட்டிவைத்து அடிப்பது, மாட்டுக்கறி உண்டிருப்பார்கள் என்கிற சந்தேகத்தின் பேரில் பெண்களை வன்புணர்வுக்கு ஆளாக்குவது என்பதெல்லாம் தொடர்ந்து வெளிப்பட்டுவரும் வன்கொடுமை வடிவங்கள்தான். இவையன்றி, அந்தந்த வட்டாரம் சார்ந்த- பார்ப்பனர்கள் உண்ட எச்சில் இலையில் தலித்துகளை விழுந்து புரளச்செய்யும் மடஸ்நானா போன்ற – தனித்த வடிவங்களையும் கொண்டிருக்கின்றன.
தலித்துகளின் வாழிடங்களில் குடியேறி வசிப்பதை 100 சதவீதம் தவிர்ப்பது, உலகின் எந்த மொழியில் வெளியாகிற அரசியல் அறிவியல் பொருளாதாரம் தத்துவம் சார்ந்த நூல்களையும் உடனுக்குடனே படித்துவிடக்கூடியவர்கள்கூட இன்னமும் அம்பேத்கர் நூல்களை படிக்காமல் ஒதுக்கி வைத்திருப்பது, அம்பேத்கரைப் பற்றி பேசுவதற்கு தலித்துகளையே அழைப்பது (“உங்க ஆளைப் பற்றி நீயே வந்து பேசிவிட்டுப் போ” என்பது போல), அமைப்புகளில் துணை இணை உதவி என்கிற நிலையைத் தாண்டி வேறு பொறுப்புகளுக்கு வராமல் பார்த்துக் கொள்வது என தீண்டாமை பலவடிவங்களைக் கொண்டிருக்கிறது. ஒரு வடிவத்தை ஒழித்தால் அதனிலும் நுட்பமும் மூர்க்கமுமான மற்றொரு வடிவம் வெளியாகி ஒடுக்குகிறது.
- சாதியத்திற்கு எதிராக வெஞ்சமர் புரிந்த பெரியார் பிறந்த மண்ணில் சாதிய சக்திகள் தங்கள் தாக்குதல்களை வெளிப்படையாக நடத்துவதற்கான துணிச்சல் எவ்வாறு வந்தது?
சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களை அணிதிரட்டுவது எளிதானது. ஆனால் வன்கொடுமையை நிகழ்த்துகிறவர்களை மனிதர்களாக்குவதற்கான ஒரு பெரியார் தன் காலத்தில் சாதியத்தை ஒழித்துவிடவில்லை, அதன் ஒடுக்குமுறையையும் பாரபட்சத்தையும் பார்ப்பன மேலாதிக்கத்தையும் தனது முன்னுவமையற்ற போராட்டங்களால் கட்டுக்குள் நிறுத்தினார். பார்ப்பரனரல்லாத சாதியினரின் புழங்குவெளியை விரிவுபடுத்தினார். அவர்களது உள்ளக ஆற்றலை வெளிப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளை திறந்துவிட்டார். அதேவேளையில் பார்ப்பனரல்லாதார் என்கிற அடையாளத்தின் கீழ் திரண்டவர்களிடம் புரையோடிக் கிடந்த சாதியவாதத்தை அம்பலப்படுத்தி அவர்களை மனிதர்களாக்குவதற்கான போராட்டத்தை தன்னால் இயன்றமட்டிலும் நடத்திப் பார்த்தவர் பெரியார். ஒரு தனிமனிதர் தான் மேற்கொண்ட லட்சியங்களுக்காக தன் ஆயுட்காலத்தில் செய்யத்தகுந்தது எவ்வளவோ அவ்வளவையும் செய்துவிட்டே அவர் மறைந்தார்.
பெரியாரின் கருத்தியல் வாரிசாக தம்மை அறிவித்துக்கொண்ட பலரும் அவரிருந்தபோதே சாதியத்தை எதிர்த்தப் போராட்டத்தை முன்னெடுக்காதது மட்டுமல்ல, சாதியச்சக்திகளோடு சமரசமும் செய்து கொண்டார்கள். பெரியாரது கருத்தியல் மற்றும் களப்போராட்டங்களால் உந்துதல் பெற்று பல்வேறு சாதிகளிலிருந்தும் உருவாகிவந்த சாதியெதிர்ப்பு – பகுத்தறிவுச்சக்திகளை ஒருங்கிணைப்பதற்கு பதிலாக, வாக்காளர்கள் என்கிற பெரும்பான்மையின் பின்தங்கிய உணர்வுகளோடு – அதாவது சாதி மதம் கடவுள் மூடநம்பிக்கை பெண்ணடிமைத்தனம் போன்றவற்றை கடைபிடிக்கிறவர்களோடு தம்மை இணைத்துக்கொண்டார்கள். ஏற்கனவே சாதியம் கொடுத்திருந்த அதிகாரத்தின் பெயரால் பார்ப்பனர்களைப்போலவே வன்கொடுமைகளை நிகழ்த்திவந்த பார்ப்பனரல்லாத சாதிஇந்துக்கள் கைக்கு அரசியல் அதிகாரத்தையும் கொண்டு சேர்ப்பது திராவிடக்கட்சிகளின் நிகழ்ச்சிநிரலில் இல்லையென்றாலும் நடப்பில் அதுவே நிகழ்ந்தது. கிட்டத்தட்ட இதேகாலகட்டத்தில்தான் இந்தியா முழுமையிலும்கூட இந்த நிலை ஏற்பட்டது. ஊராட்சிமன்ற உறுப்பினர் தொடங்கி மத்திய மாநில அமைச்சரவை வரையான அதிகாரமையங்கள் அனைத்தையும் ஓரளவுக்கு அரசு இயந்திரத்தையும் கைப்பற்றியுள்ள அவர்கள் நடத்தும் தாக்குதலை பெரியாரின் ஆவி வந்து தடுக்கும் என்று எதிர்பார்த்திருக்க முடியாது. எனினும் இன்னமும் ஒருபகுதி பெரியாரியவாதிகள் சாதியத்திற்கு எதிரான போராட்டத்தை தொடரவே செய்கிறார்கள். ஆனால், இங்கு கவனப்படுத்த வேண்டியது என்னவென்றால் சாதியத்தை எதிர்ப்பது, மறுப்பது, ஒழிப்பது என்பதெல்லாம் வெறுமனே பெரியாரியத்தின் நிகழ்ச்சிநிரல் மட்டுமல்ல என்பதுதான்.
- அரசாங்கமும் அரசு இயந்திரமும் சாதி ஆதிக்கச்சக்திகளுக்கு எந்த வகையில் துணைபோகின்றன?
இரண்டுமே தலித்தல்லாதாரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. எனவே அவை ஊரும் சேரியும் நிரந்தரமாக பிரிந்திருப்பதை உறுதிசெய்கின்றன. தலித்துகளின் வாழிடத்தில் அரசு சார்ந்த அலுவலகமோ தொழிற்சாலையோ கல்விக்கூடமோ வணிகவளாகமோ குறைந்தபட்சம் டாஸ்மாக் கூட வந்துவிடாமல் பார்த்துக்கொள்கின்றன. தலித்துகள் வன்கொடுமைக்கு ஆளாகும் போது அப்பட்டமாக வன்கொடுமையாளர்களுக்கு ஆதரவாக தத்தமது அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றன. தலித்துகளுக்கு சட்டப்பூர்வமாக உள்ள இட ஒதுக்கீடு, கட்டுமான ஒப்பந்தங்கள், பெட்ரோல் நிலையங்கள், மானியங்கள் உள்ளிட்ட உரிமைகள் நடப்புண்மையாக மாறுவதைத் தடுக்கின்றன. தலித்துகளுக்குரிய பஞ்சமி நிலங்களை வகைமாற்றம் செய்தும் மோசடிகள் மூலமாக அபகரிப்பதற்கும் துணைபுரிகின்றன. துணைத்திட்டத்தின் மூலம் அவர்களுக்கென ஒதுக்கப்படும் பல்லாயிரம் கோடி ரூபாய்களை செலவழிக்காமலே திருப்பி அனுப்புகின்றன அல்லது தலித்துகளுக்கு தொடர்பற்ற திட்டங்களுக்கு திருப்பிவிடுகின்றன.
- தமிழகத்தில் சாதி வெறி இயக்கமாவதை எப்படி எதிர்கொள்வது?
தங்களது சாதியினரால் தலைமை தாங்கப்படக்கூடிய இந்த இயக்கமாவது தமது ஜனநாயக உரிமைகளை வென்றெடுத்து கண்ணியமான வாழ்க்கையை அமைத்துக்கொடுத்துவிடாதா என்கிற ஏக்கத்துடன் தான் சாமானிய மக்கள் சாதிய அமைப்புகளுக்குள் அணிதிரள்கிறார்கள். ஆனால் சாதிய அமைப்புகளோ இவர்களது சக்தியை இந்த விருப்பார்வங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான போராட்டங்களை நோக்கித் திருப்பாமல் சாதிப்பெருமை என்னும் கற்பிதத்திற்குள் மூழ்கடிக்கின்றன. அன்னாடங்காய்ச்சியான எதார்த்தம் ஆண்ட பரம்பரை, மேல்சாதி என்பதான கற்பிதத்தால் மறைக்கப்பட்டு சாதியுணர்வு சாதி வெறியாக்கப்படுகிறது. தமது குலப்பெருமை மற்றும் சாதித்தூய்மையைப் பாதுகாப்பதை விடவும் உயர்வானது எதுவுமில்லை என்று உசுப்பேற்றப்படுகிற இவர்களுக்கு தலித்துகளைத் தவிர வேறெவரும் எதிரியாக காட்டப்படுவதில்லை.
சாதி இயக்கங்கள் உங்களுக்கு எதையும் செய்யப்போவதில்லை என்று பிரசங்கம் அல்லது உபதேசம் செய்வதனால் இம்மக்கள் அவற்றிலிருந்து விடுபட்டுவிட மாட்டார்கள். அவர்கள் தமது இயல்பான வாழ்வை நடத்திச் செல்வதற்குத் தேவையான உடனடி மற்றும் தொலைநோக்குத் திட்டங்களை முன்வைத்து அதற்காக ஓர் அணிதிரட்டலை வேறெந்த அமைப்பும் சக்தியாக நடத்தாதவரை அவர்கள் சாதிய இயக்கங்களில் அணிதிரண்டு சாதிவெறியர்களாக மாறிக்கொண்டுதானிருப்பார்கள்.
- தலித் மக்களின் விடுதலைக்கான தீர்வு எது? அதை நோக்கிய போராட்டம் எத்தகையது?
சாதியொழிப்புதான். சாதியத்திலிருந்து ஒட்டுமொத்த சமூகமும் விடுபடாமல் தலித்துகள் மட்டும் தம்மைத்தாமே விடுவித்துக்கொள்ள முடியாது. ஆனால் தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்தால் கூட சாதி இந்துக்களின் ஆதரவை இழந்துவிடுவோம் என்று நடுங்கிச்சாகிற அமைப்புகள் மலிந்து கிடக்கும் இச்சமூகத்தில் சாதியொழிப்பு என்பது அதன் முழுப்பொருளில் இன்று யாருடைய அல்லது எந்த அமைப்பினுடைய நிகழ்ச்சிநிரலிலாவது இருக்கிறதா?
சாதியை மட்டும் தனியாக ஒழித்துவிடவும் முடியாது. ஏனென்றால் அது, இங்கு நிலம், சொத்து, தொழில், வணிகம், மதம், அதிகாரம், பண்பாடு ஆகியவை வழிவழியாக யாருடைய கையில் இருக்கவேண்டும் அல்லது இருக்கக்கூடாது என்பதை தீர்மானிப்பதாக இருக்கிறது. ‘இந்த வழிவழியாக’ என்பதை உறுதிப்படுத்தவே சாதியம் அகமணமுறையை கைக்கொண்டிருக்கிறது. எனவே சாதியை ஒழிப்பது என்றால் அதனோடு தொடர்புடைய அனைத்தையும் ஒழிப்பதே என்று விளங்கிக்கொண்டோமானால், அதற்கோர் தொடக்கமாக அகமணமுறையை ஒழித்துக்கட்ட வேண்டியிருக்கும். இதை தனிநபர்கள் தமது சொந்தவாழ்விலிருந்து தொடங்கலாம். இயக்கங்கள் தமது உறுப்பினர்களின் வாழ்முறையாக மாற்றலாம். அரசாங்கம் ஒரு சட்டத்தின் மூலம் குடிமக்களிடையே இதை சாத்தியப்படுத்தலாம். ஆனால் அப்படியொரு சட்டத்தினை நிறைவேற்றும் அரசியல் விருப்புறுதி கொண்ட ஓர் அரசாங்கத்திற்காக காத்திருக்கப் போகிறோமா அல்லது இருக்கின்ற அரசாங்கத்தையே அதுநோக்கி நெட்டித்தள்ளும் போராட்டங்களை முன்னெடுக்கப்போகிறோமா என்பது நம்முடைய அரசியல் விருப்புறுதி சார்ந்தது.
(இந்துமதம் பற்றி எதுவுமே சொல்லவில்லையே என்கிற கேள்வி எழலாம். சாதி ஒழியும் போது இந்துமதம் தானாக ஒழிந்துவிடும். சாதிய சமூகத்தில் நீங்கள் எத்தனை மதங்களுக்கு மாறினாலும் அங்கெல்லாமும் சாதியாகவே அடையாளம் காணப்படுவீர்கள்.)
– ஆதவன் தீட்சண்யா
Courtesy: maattru.com