ஆதார் – விமர்சனம்

நடிப்பு: கருணாஸ், ரித்விகா, அருண் பாண்டியன், உமா ரியாஸ்கான், பிரபாகர், இனியா, திலீபன் மற்றும் பலர்

இயக்கம்: ராம்நாத் பழனிகுமார்

தயாரிப்பு: வெண்ணிலா கிரியேஷன்ஸ்

இசை: ஸ்ரீகாந்த் தேவா

ஒளிப்பதிவு: மகேஷ் முத்துசாமி

மக்கள் தொடர்பு: யுவராஜ்

பொங்கல் திருநாளை முன்னிட்டு பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று, அதிநவீன தற்காப்பு வசதிகள் கொண்ட புது மாடல் கார் ஒன்றை சந்தையில் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியுடன் படம் தொடங்குகிறது. அதன்பின், கதையின் நாயகனான கருணாஸின் பிரச்சனைக்கு கதை தாவுகிறது.  கட்டிடத் தொழிலாளியான கருணாஸ் கைக்குழந்தையைத் தூக்கிக்கொண்டு காவல் நிலையம் வருகிறார். பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தன் மனைவி ரித்திகா, குழந்தை பெற்றபின் காணவில்லை என்று புகார் செய்கிறார். ரித்திகா எங்கே போனார்? காவல்துறையினர் அவரை கண்டுபிடித்தார்களா? என்பது ’ஆதார்’ படத்தின் மீதிக்கதை.

0a1a

மனைவி மாயமானதால் கைக்குழந்தையுடன் கண்ணீரும் கம்பலையுமாய் அல்லாடும் உருக்கமான நாயகக் கதாபாத்திரத்தில் கருணாஸ் உணர்ச்சிப் பிழம்பாக நடித்திருக்கிறார். அவரது அற்புதமான நடிப்பு பல விருதுகளைப் பெற்றுத் தரும் என்பது உறுதி. பாராட்டுகள் கருணாஸ்.

கருணாஸின் மனைவியாக வரும் ரித்திகா, குறைந்த காட்சிகளே வந்தாலும், கதையின் முக்கியத் திருப்பங்களுக்குக் காரணமான கதாபாத்திரம் என்பதால் மனதில் நிற்கிறார். இனியாவுக்கு முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரம். தூள் கிளப்பியிருக்கிறார்.

போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் பிரபாகரும், உதவி கமிஷனராக வரும் உமா ரியாஸ்கானும் சேர்ந்து செய்யும் அடாவடித்தனங்கள் நெஞ்சை அதிர வைக்கின்றன. அருண் பாண்டியன், திலீபன் உள்ளிட்ட ஏனையோர் தத்தமது கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கிறார்கள்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவில் நடப்பதால், அதை உணர்த்தும் வகையிலான மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு அருமை. ஸ்ரீகாந்த்தேவாவின் இசையில் இயக்குனர் யுரேகா எழுதியுள்ள “தேன் மிட்டாய்… மாங்காத் துண்டு…” பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் தித்திப்பான ரகம்.

’ஜெய்பீம்’, ’விசாரணை’, ‘ரைட்டர்’ போன்ற படங்களை போல் காவல்துறையின் கொடூரமான பக்கங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் ஒரு கதையை அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராம்நாத் பழனிகுமார். அத்துடன், கார்ப்பரேட் முதலாளித்துவத்தின் ஏவல்நாயாக காவல்துறை எப்படி செயல்படுகிறது என்பதையும், இந்த கேடுகெட்ட சமூக அமைப்பில் இரும்புக்கு இருக்கும் மதிப்புகூட விளிம்பு நிலை மனிதர்களின் உயிருக்கு இல்லை என்பதையும் துணிச்சலோடு தோலுரித்துக் காட்டியதற்காக இயக்குனரை எத்தனை பாராட்டினாலும் தகும்.

’ஆதார்’ – நல்ல படம்; கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்!