கட்டுக்கதைகளை கொண்டு அரசியல் பேசுவது மக்களுக்கு உதவாது!

பாஜக ஆட்சியேற்று நடந்த முதல் நாடாளுமன்ற அமர்வு இனி வரும் வருடங்களில் அரசியல் என்னவாக இருக்கப் போகிறது என்பதற்கான முத்தாய்ப்பாக இருக்கிறது.

மோடிக்கு இம்முறை ராகுல் காந்தி பெரும் சவாலாக இருந்தார். அடிக்கும் கிண்டல், சொல்கிற உடனடி பதில் என நிறையவே தேறியிருக்கிறார் ராகுல். அமித் ஷா, மோடி, ராஜ்நாத் சிங் ஆகியோர் பேயறைந்தது போல் அமர்ந்திருந்த காட்சியும் நடந்தேறியது.

ஆனால் ராகுல் இம்முறை பேச எடுத்துக் கொண்ட விஷயங்கள் சரிதானா என்கிற கேள்வி எழாமல் இல்லை.

சிவன் படத்தை எடுத்து காட்டுகிறார். சிவன் அஹிம்சை போதிப்பவர் என்கிறார். இம்சிக்க முடியாத இடப்பக்கத்தில்தான் திரிசூலத்தை வைத்திருக்கிறாரென சொல்கிறார். இஸ்லாம், கிறித்துவம், சீக்கியம் உள்ளிட்ட எல்லா மதங்களும் அகிம்சையை போதிக்கின்றன என்றார். எல்லா கடவுளரும் ‘பாதுகாக்கும்’ சமிக்ஞையாக உள்ளங்கையை காண்பிக்கும் முத்திரையைக் கொண்டிருப்பதாக சொல்கிறார். காங்கிரஸின் சின்னமும் கூட அதே முத்திரைதான் என்கிறார்.

பாஜக இம்சையை விரும்பும் கட்சி என்பதால் அது இந்து கட்சி இல்லை என்கிறார். உடனே மோடி எழுந்து இந்துக்களை ராகுல் வன்முறையாளர்களாக சித்தரிக்கிறார் என்க, மோடி ஒன்றும் இந்து மதப் பிரதிநிதி அல்ல என ராகுல் வாதிடுகிறார். கடவுளுடன் பேசுவதாக சொல்லும் மோடிக்கு, கடவுள்தான் பணமதிப்புநீக்கம் செய்ய சொல்லி சொன்னாரா எனக் கேட்கிறார். ராமர் பிறந்த இடமான அயோத்தி மோடியை வீழ்த்தியிருக்கிறது என்கிறார். ஸ்ரீராமரே பாஜகவை விரும்பவில்லை என்கிறார். இவை எல்லாவற்றுக்கும் இடையில்தான் மணிப்பூர், வேலையின்மை போன்ற பிரச்சினைகளை பேசுகிறார்.

Post Truth அரசியலுக்கு உண்மைகள் தேவையில்லை. உணர்வுப்பூர்வமாகவும் மக்களின் நம்பிக்கைகள் சார்ந்தும் உண்மைக்கு புறம்பாகவும் பேசப்படும் அரசியல் அது. அமெரிக்காவில் ட்ரம்பின் காலத்தில் தலைவிரித்தாடிய இந்த அரசியல், இந்தியாவுக்கு பெரியளவில் அறிமுகமானது பாஜகவின் ஆட்சிக்காலத்தில்தான்.

அடிப்படையில் Post Truth Politics என்பது முழுமையற்ற, பரிசோதிக்கப்படாத, தனித் தகவல்களை எடுத்து தங்களுக்கு தேவைப்படுகிற கதையாடலை கட்டமைக்கும் விதம்.

’எந்தவொரு தனி விஷயமும், தனி அல்ல, ஒரு பெரும் தொடர்ச்சியின் உள்ளடக்கம்தான்’ என்கிற வரலாற்று இயக்கத்திலிருந்து உண்மையை புரிந்து கொள்ளும் அணுகுமுறை ஒன்று இருந்தது. அந்த அணுகுமுறைக்கு பெயர் மார்க்சியம். அதை பெருங்கதையாடல் என்பார்கள். அதை உடைப்பதற்கென மேற்குலகம் உருவாக்கிய பின்நவீனத்துவ சிந்தனைகளில் ஒன்றுதான் இந்த Post Truth!

நீட், மணிப்பூர் போன்ற சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளை பேசுவதற்கு சிவனோ இயேசுவோ அல்லாவோ உதவ மாட்டார்கள். மேலும் ‘உங்களை விட, நாங்கள்தான் சிறந்த இந்துக்கள்’ என்கிற கதையாடலும் உதவாது. அது மேலும் பாஜகவின் வசம் நம் தலைகளைக் கொண்டு சென்று வைக்கவே உதவும்.

கட்டுக்கதைகளை கொண்டு அரசியல் பேசுவது மக்களுக்கு உதவாது. இங்கு நடப்பது ரணியன் – பிரகலாதன் கதையும் அல்ல.

முழு உண்மையே உண்மையான தீர்வு! Post Truth அல்லாமல் Truth-ஐ பேசுவதுதான் தீர்வுக்கு வழி வகுக்கும்.

உண்மையை பேச வேண்டுமெனில் நமக்கென சித்தாந்தம் வழி இயக்கப்படும் ஓர் அரசியல் இருக்க வேண்டும். அது இல்லையெனில் தனித் தகவல், தனி சம்பவங்கள் சார்ந்த அரசியலைதான் முன்னெடுக்க வேண்டியிருக்கும். அந்த அரசியலை கோர்க்க கட்டுக்கதையைதான் நாட வேண்டியிருக்கும்.

உண்மையில் இந்த நாடாளுமன்ற அமர்வில் சிறப்பான உரை வழங்கியவர்கள் ஆ.ராசாவும் மணிப்பூரை சேர்ந்த பேராசிரியர் பிமோல் அகோய்ஜாமும்தான்.

வாய்ப்பிருந்தால் அவர்களின் உரைகளை பாருங்கள். இந்திய துணைக்கண்டத்தின் முழு உண்மைகளை கொண்ட உரைகள் அவை.

RAJASANGEETHAN