‘வினோதய சித்தம்’ – இத்தனை பாராட்டுகளுக்கு தகுதியானதா?
நாம் சில ஓட்டல்களில் சாப்பாடு வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது “கெட்டுப் போயிருச்சோ” என யோசிப்போமே, சாப்பிட்டு முடித்த பின்னரும் சில மணிநேரங்களுக்கு ஏப்பமாக வந்து கொண்டிருக்குமே அப்படியொரு அனுபவம் இப்படத்தை பார்ப்பது. Bruce Almightyயில் இருந்து, “அறை என் 305இல் கடவுளில்” இருந்து வேறு சில படங்கள் வரை நினைவுக்கு வருகின்றன. ஆனால் அந்த படங்களில் இல்லாத பிற்போக்கான கருத்துகள் இப்படத்தில் அதிகமாக வருகின்றன:
1) தனிமனித முயற்சி இரண்டாம் பட்சமானது. எது நடக்க வேண்டுமோ அது நடந்தே ஆகும் என்பது இப்படம் அளிக்கும் சேதி. யார் நடத்தி வைக்கிறார்? “நாங்கள்” என காலன் பாத்திரத்தில் வரும் சமுத்திரக்கனி சொல்லுகிறார். யார் இந்த “நாங்கள்”? காலனும் காலனுக்கு மேல் இருக்கும் தெய்வங்களுமா? அப்படித்தான் தோன்றுகிறது.
2) சரி நம் வாழ்க்கையை காலனும் கடவுளுமாக திட்டமிட்டு நடத்துகிறார்கள் என்றால் எந்த கணக்குப்படி? சமுத்திரக்கனி நம்முடைய கர்ம வினைகளின் கணக்கு வம்சாவழியாக தொகுக்கப்பட்டு வருகிறது, அதன் விளைவை நாம் அனுபவித்தே ஆக வேண்டும் என்கிறார். இது எவ்வளவு ஆபத்தான சிந்தனை எனப் புரிகிறதா? இப்படி சொல்லித் தான் நம் சமூகத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்தி வருகிறார்கள். எல்லா அநீதிகளுக்கும் முட்டுக் கொடுக்கிறார்கள். பாவ, புண்ணியம் குறித்த மூட நம்பிக்கைகள் நம்முடைய சமூகத்தில் பொதுமக்களிடையே பரவி உள்ளது உண்மை தான். ஆனால் ஒரு சினிமா இக்கருத்துக்களை ஒன்று ஆழமாக பரிசீலிக்க வேண்டும் (Ship of Theseus படத்தில் போல) அல்லது பேசாமல் விட்டுவிட வேண்டும். மீண்டும் அதே சீரழிவான நம்பிக்கைகளை அதை ஏதோ ஒரு முக்கியமான தத்துவக் கருத்து என்பதைப் போல வலியுறுத்துவது சமூகத்துக்கு கேடானது.
3) அடுத்து, இட ஒதுக்கீட்டை மறைமுகமாக கிண்டலடிக்கிறார். அது மிக நுட்பமான ஒரு சாடலாக உள்ளது. தம்பி ராமையா இளைஞராக நேர்முகத்தில் தன்னுடன் போட்டியிட்ட ஒரு புத்திசாலியான திறமையான பிராமண இளைஞரை ஏமாற்றி அவ்வேலையை பெறுகிறார். அதன் பிறகு அவருடைய மகன் பல வருடங்களுக்குப் பிறகு இவருடைய நிறுவனத்துக்கே வந்து இவருக்கு மேலதிகாரியாகி விடுகிறார், “விதி வலியது” என சமுத்திரக்கனி அவருக்கு புரிய வைக்கிறார். மறைமுகமாக, தமிழகத்தில் புத்திசாலி பிராமணர்களை இவ்வாறு விரட்டி அவர்கள் பெற வேண்டிய பதவிகளை தாழ்த்தப்பட்டவர்கள் பெற்று விட்டார்கள் எனும் கருத்து இதனுள் வருகிறது.
4) இந்த காலன் எனும் பாத்திரம் பௌத்தத்தில் காலம் எனும் சூன்யம் என ஒரு கருத்தமைவாகத் தோன்றி, அதில் இருந்து பின்னர் வைதீக மதத்தால் கடன்பெறப்பட்டு அவமரியாதைக்குரிய ஒரு கரிய உப தெய்வமாக மாற்றப்பட்டது. பூர்வ பௌத்தர்களான தலித்துகளை அவமதிக்கும் நோக்கிலே வைதீகர்கள் காலனை எருமை மீது அமர்ந்து வருகிற கொடியவனாக காட்டினர். ஆனால் பௌத்தத்தில் காலம் என்பது நமது இருப்பு எவ்வளவு சாராம்சமற்றது எனக் காட்டுகிற ஒன்று, காலத்தினுள் ஒரு நேர்கோட்டு போக்கை நாம் கற்பனை பண்ணி நாமாக சுயாதீனமாக ஒவ்வொன்றையும் செய்கிறோம் என ஒரு தவறான நம்பிக்கையை கொண்டிருக்கிறோம் என பௌத்தம் பேசியது. இந்த தத்துவ சாரத்தை விட்டுவிட்டு வைதீகத்துக்குள் இக்கருத்து கடத்தப்பட்டு வந்த பின் இன்று நாம் மனிதனுக்கு செயலூக்கம் தேவையில்லை, நடப்பவை எல்லாம் நன்மைக்கே என மேம்போக்காக தவறாக புரிந்து கொள்கிறோம். புத்தர் என்றுமே சமுத்திரக்கனியைப் போல எல்லாம் மேலே இருப்பவன் பார்த்துக்குவான் என சொல்லியதில்லை. சமுத்திரக்கனி போன்றவர்களின் பிரச்சனை நான் இங்கு பேசுவது எதையும் அவர் கேள்விப்பட்டிருக்கவே மாட்டார், ஆனாலும் தன்னை ஒரு மாபெரும் சிந்தனையாளர் என நம்பிக் கொண்டிருப்பார் என்பதே. தமிழ் சினிமாவில் காலனை சரியாக பௌத்தத்தின் படி விளங்கிக் கொண்டு “காலா” என ஆழமாக சித்தரித்தவர் ரஞ்சித் மட்டுமே. ஏனென்றால் அவருக்கு வாசிப்புப் பழக்கம் உண்டு.
5) இவ்வளவு பிரச்சனை இருந்தாலும் இப்படம் மக்களால் ரசிக்கப்பட ஒரு காரணம் ஒருவர் ஆணவத்துடன் தனக்குத் தெரிந்ததே உலகம் என நம்பிக் கொண்டிருக்க மற்றவர்களின் புரிதல், கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கையில் அது எப்படி முழுக்க வேறொன்றாக இருக்கிறது என காட்டியதே. இந்த திருப்பங்கள் ரொம்ப குழந்தைத்தனமாக சில நேரம் இருந்தாலும் ஒரு தயிர் வடை சாப்பிட்ட ரசனையான அனுபவம் தருகின்றன. நமக்கு அவ்வப்போது தயிர் வடைகளும் தேவைப்படுகின்றனவே.
6)கதை துவங்கும் போது தம்பி ராமையாவுக்கு இருந்த அகந்தை, குறுகிய மனப்பான்மை படம் முடியும் போது மறைந்து அவர் மனிதர்களை அன்பாகவும் மரியாதையுடனும் நடத்த கற்கிறார். இந்த வடிவ ஒழுங்கு பெரிதாக எங்கும் பிசிறாமல் திரைக்கதையை எழுதி இருக்கிறார்கள், படத்தையும் எடுத்திருக்கிறார்கள். முக்கியமாக தனி நகைச்சுவை டிராக், பாடல்கள் இல்லாமல் கதையை ஒரே போக்கில் சொல்லியிருப்பதையும் பாராட்டலாம். தமிழில் எனக்குத் தெரிந்து மிகச்சில படங்கள் தாம் இப்படி வந்துள்ளன.
7)இன்னும் சற்று முயன்றிருந்தால் கூடுதல் நெருக்கடிகளை பாத்திரங்களுக்கு கொடுத்து, அவர்களுடைய வாழ்க்கையில் சிக்கல்களை அதிகப்படுத்தி அதில் இருந்து இறுதியில் வெளிவருவதைக் காட்டி படத்தை சுவாரஸ்யமாக்கி இருக்கலாம். ஆனால் சமுத்திரக்கனி ஒரு மேடை நாடகம் போலவே திட்டமிட்டிருப்பதால், எளிய நீதிக்கதையாக, சீரியலுக்கான அத்தனை சங்கதிகளுடனும் உருவாக்கி இருப்பதால் பத்து வயது குழந்தையின் மூளைத்திறன் கொண்டோரும் பார்க்கும்படித்தான் வந்திருக்கிறது.
8)இன்னொரு தனித்துவம் ஒட்டுமொத்தமாக இப்படத்தில் யாருமே நடிக்கவில்லை என்பது. சுத்தமாக நடிப்பே வராதவர்களாக தேர்ந்தெடுத்து சொதப்ப வைத்திருக்கிறார் சமுத்திரக்கனி. தம்பி ராமையா மிக மட்டமாக, மிகையாக நடித்திருக்கிறார் என்றால் சமுத்திரக்கனியின் முகத்தில் உணர்ச்சிகளே தெரியவில்லை. ஒருவேளை காலன் இப்படித்தான் இருக்க வேண்டும் என நினைத்து விட்டார் போல. இப்படி மொத்தமாக எல்லாரும் சொதப்புவதால் யாரும் குறிப்பிட்டு மோசமாக நடிக்கவில்லை, எல்லாரும் நடிக்கிறார்கள் போல என நமக்கு ஒரு தனியான ஏமாற்றம் வராது. இது ஒரு நல்ல உத்தி.
9)வினோதய சித்தம் என்பதெல்லாம் அதிகம், இது ஒரு ‘பழமையான சித்தம்’ எனலாம். ஆனால் ‘லிப்டை’ விட மேலான படம் தான்.
Abilash Chandran