காதலும் கம்யூனிசமும் கண்ணீரும் கலந்த ஒரு திரைக் காவியம் ‘வாழை!’

வேம்பு, சிவனணைந்தப் பெருமாளின் அக்கா. (திவ்யா துரைசாமி). கனி, வேம்பை காதலிக்கும் கலையரசன்.

ஒருநாள் வாழைத்தார் சுமந்து வரும்போது, சிவனணைந்தன் தன் அக்காள் வேம்புவிடம் சொல்வான், “அக்கா, நீ கனி அண்ணனைக் கட்டிக்க.” வெட்கத்தில் சிவப்பாள் வேம்பு. ஏற்கனவே தன் நெஞ்சில் “வே” என்று பச்சை குத்தியிருப்பான் கனி.

மருதாணி பறித்து வரும் தம்பியிடம், கொஞ்சம் மருதாணியை கனியிடம் தந்துவிட்டு வரச் சொல்வாள் வேம்பு. அவனோ, சிபிஎம் சின்னம் பொறித்த பேட்ஜ்-ம் எடுத்துப் போறேன், என்பான்.

ஏன், என்ற கேள்விக்கு, “நம்ம அப்பா நமக்காக விட்டுட்டுப் போனது அது தானே?. நான் ஸ்டிரைக் நடந்த அன்னிக்கே, இதைக் கனி அண்ணனிடம் கொடுக்கனும்னு நெனச்சேன் என்பான், வேம்புவின் தம்பி சிவனணைந்தன். அதே போல் கொண்டுபோய்க் கொடுப்பான்.

அந்த காதலின் சின்னமாக வந்த மருதாணிக் குவியலின் மேல், கம்யூனிச சின்னத்தை வைத்து காதல் பொங்க கலையரசன் பார்த்துக் கொண்டிருப்பான்.

இந்த இடத்தில் நாம் சேர்த்துப் பார்க்க வேண்டிய காட்சி, சிவனணைந்தன், வேம்புவின் அம்மா, தன் கையில் அரிவாள் சுத்தியல் நட்சத்திரத்தைப் பச்சை குத்தியிருப்பாள். அதைத் தன் பிள்ளைகளிடம் காட்டி, “உங்க அப்பா, கட்சி கட்சினு அலைஞ்சிட்டு ஒண்ணுமே இல்லாம நம்மள விட்டுட்டுப் போனாலும் உங்கப்பாவா நெனச்சி இந்த சின்னத்தோட தான் நான் வாழ்ந்துட்டிருக்கேன். போராடிட்டு இருக்கேன்” என்பாள்.

கலையரசன் நெஞ்சில் வேம்பு, வேம்புவின் அம்மா நெஞ்சில் அவளது அப்பா வேலுச்சாமியின் நினைவாக, அரிவாள் சுத்தியல் நட்சத்திரம், கேள்வி கேட்க துணிந்துவிட்ட கலையரசனிடம் தனது போராளி அப்பாவின் கம்யூனிஸ்ட் சின்னத்தை சேர்க்க நினைக்கும் சிவனணைந்தன்.

இப்போது நினைத்துப் பாருங்கள். காதலையும் வாழ்க்கைப் போராட்டத்தையும் கம்யூனிசத்தோடு கலந்து, இத்தனை கலை நேர்த்தியோடு வெறெப்படிச் சொல்வதாம். நம்மிடம் பத்துக்கோடி என்ன, பத்தாயிரம் கோடி கொடுத்தாலும் இத்தனை காதலுடன் கலந்த கம்யூனிசக் காவியம் படைக்க முடியுமா என்பது சந்தேகமே.

கதையைச் சொல்லக்கூடாது என்று தான் நினைத்தேன். ஆனால், ’வாழை’ படத்தில் வரும் இந்தக் கதையை, இந்தக் காவிய நயத்தை நம்மைத் தவிர வேறு யார் சொல்ல முடியும். மிக்க நன்றியும் அன்பும் தோழர் மாரி செல்வராஜ்…!

-சக்தி சூர்யா

(முகநூல் பதிவு)