’ரத்தசாட்சி’ – நக்சல்பாரி கதை என்ற அரச முலாமுடன் வெளிவந்திருக்கும் படம்!
‘ரத்தசாட்சி’ படத்துக்கான ட்ரெயிலர் வந்தபோது அதிகம் கொண்டாடப்பட்டது. அதற்குக் காரணம் இச்சமூகத்தில் அரச எதிர்ப்பு மேலும் மேலும் கூர்மையாகிக்கொண்டு வருவதைச் சொல்லலாம். எனினும் கதை ஜெயமோகன் என்பதால் ட்ரெயிலரைக் கொண்டாடுவதை தவிர்த்தேன். பிறகு ‘விட்னஸ்’ படம் வந்தது. அரசின் லட்சணத்தை தெளிவாக விளக்கியதோடு மட்டுமின்றி மக்கள்நலனுக்காக இயங்கும் இடதுசாரிகளையும் படம் அடிக்கோடிட்டு காட்டியிருந்தது. அதற்குப் பிறகு இந்தப் படம்
நக்சல்பாரி தவறு, மாவோயிசம் தவறு, ஆயுத வழிமுறை தவறு என்றெல்லாம் அரசவாதம் தன் குரல்களை மிமிக் செய்து பேசுவது வளமை. இப்படத்திலும் அது தெளிவாக வெளிப்படுகிறது. இப்படம் நக்சலைட் இயக்கத்துக்கு ஆதரவாக எடுக்கப்பட்டு புரிதலின்மையில் பிசகிப்போன படம் கூட அல்ல. இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் பாடல்களில் கூட தெளிவாக உயிர் வேட்டை, உயிர் குடிக்கும் போட்டி போன்ற வார்த்தைகளே பயன்படுத்தப்படுகிறது. சித்தாந்தப்பூர்வமான வரிகளோ நக்சலைட் இயக்கத்தின் வரலாற்று பின்னணியுடன் கூடிய வார்த்தைகளோ இடம் பெறவில்லை. எனவே தெளிவாகவே இது நக்சலைட் இயக்கத்துக்கும் இடதுசாரி பாரம்பரியத்துக்கும் எதிராகவே எடுக்கப்பட்டிருக்கிறது.
எது சரி, எது தவறு என சொல்லும் காலத்தில் நாம் இல்லை. குறிப்பாக ஒரு போக்கு சரியா, தவறா என்று பேசுவதைக் காட்டிலும் அந்தப் போக்கு ஏன் அவசியப்பட்டது என்பதை ஆராய்வதே பொறுப்புள்ள கலைக்கான அடையாளம்.
மாவோயிசப் போக்கு தவறு என சொல்வோர் சல்வார் ஜுடும் செய்யும் அட்டூழியத்தைப் பேச மாட்டார்கள். நியாம்கிரியை அழிக்க முனைந்த வேதாந்தா எப்படி பாஜகவின் பெரும் நன்கொடையாளராக இருக்கிறது என்பதை பற்றி பேச மாட்டார்கள். நக்சல்பாரிகளால் மக்கள் வேட்டையாடப்பட்டனர் எனக் கண்ணீர் விடுபவர்கள் தூத்துக்குடி அறவழிப் போராட்டத்தில் ஏன் தோட்டாக்கள் பறந்ததென பேச மாட்டார்கள்.
ஆயுதம், பிரசாரம், தேர்தல், களம், நாடாளுமன்றம் எனப் பல போக்குகள் இடதுசாரியத்தில் உலகம் முழுக்க உண்டு. சுவாரஸ்யமாக எல்லா போக்குகளும் வெற்றி பெற்ற வரலாறுகள் தனித்தனியே உண்டு. இன்றுமே தொடரச் செய்கிறது.
இவை எதையும் பேசாமல் ரத்தசாட்சி பச்சையான அரசவாதத்தை பேசுகிறது. அரசுக்கு அறவழிப் போராட்டம் பிடிக்கும். எத்தனை வருடம் போராடினாலும் எருமை மாடு போல சுரணையே இன்றி அரசு இருப்பதற்கு அறவழிப் போராட்டம் நல்ல வழி. எத்தனை உயிர் போனாலும் அதற்குக் கவலையில்லை.
அரசுக்கு ராணுவம் உண்டு. மக்களுக்கு?
இக்கேள்வியிலிருந்துதான் ஆயுதவழி அரசியல் இடதுசாரியத்தில் தொடங்கியது. சோவியத் புரட்சியை சிலாகிக்கும் நாம் அங்கு செஞ்சேனை ஆற்றிய முக்கிய பங்கை பேசுவதில்லை. நேபாளத்தில் ஜனநாயகம் பிறக்கவே ஆயுதம் தரிக்க வேண்டியிருந்தது. எனவே ஆயுதத்தை பொத்தாம் பொதுவாக நிராகரிப்பதோ அறவழிப் போராட்டத்தை முற்றுமுழுதும் ஏற்பதோ எந்த வரலாற்றுப் போக்கின் சிறப்பை தீர்மானிப்பதற்கும் உசிதமான நடைமுறை இல்லை.
நிற்க.
’ரத்தசாட்சி’ படம் இதையெல்லாம் பேசுமளவுக்கு ‘ஒர்த்’தா எனக் கேட்டால் நிச்சயமாக இல்லை. ‘அறுவடையைக் கைப்பற்றுவோம்’ என விளைச்சலை மக்களுக்கு நக்சல்பாரிகள் பகிர்ந்து கொடுத்த வரலாறு இருக்க, இதில் வரும் நக்சல்பாரி வயலை எரிக்கிறார். உடன் இருந்த தோழரை போலீஸ் கொன்றதற்கு பழிவாங்கும் உணர்ச்சியில் போலீஸை கொல்கிறார். உணர்ச்சி வசப்படாமல் அறிவு வசப்படுவதே இடதுசாரியம். அதிலும் அப்பு போன்ற தோழரை குறிப்பதாக சொல்லி எடுக்கப்படும் படத்தில் அவர் பெயர் கொண்ட பாத்திரம் உணர்ச்சி வசப்பட்டு கோபத்தில் கொலை புரிவதாக காட்டுவதெல்லாம் பேரபத்தம். நக்சலைட் இயக்கம் ‘அழித்தொழிப்பு’ முறையை கையிலெடுத்த காரணம் பழியுணர்ச்சி மற்றும் கோபம் என சுருக்கி காண்பிக்க முயலும் திருட்டுத்தனத்தின் விளைவு அது.
ஒரு பக்கத்தில் ஒரு ‘நல்ல காவலர்’ இருக்கிறார். வார்த்தை விரயம்தான்! இந்த அமைப்பு கொண்டிருக்கும் குரூரம் ஒருவனை நக்சலைட்டாகவே மாற்றும் எனப் பேசும் கதாபாத்திரம் அது. மறுபக்கத்தில் ‘ஆயுதம் தூக்கி காட்டுக்குள்ள இருக்கறது தப்பான வழி’ எனப் பேசுகிற நக்சலைட்!
நக்சல்களை விட்டு நக்சலைட் வெளியேறுகிறார். அவரை போலீஸ் கொன்ற பிறகு காக்கிச்சட்டையை தீயில் போட்டுவிட்டு காவலர் வேலையிலிருந்து இவர் விலகுகிறார். அதுவரை அந்த நக்சலைட்டை தேடும் படலத்தில் இருந்த அந்தக் காவலர், நக்சலைட் கிடைத்ததும் கூடிக் கும்மியாட்டம் ஆடுவார்கள் என நினைத்திருந்தார் போலும். நல்லவேளை நடுவே எங்கும் அந்த நக்சலைட்டும் இந்தக் காவலரும் ‘பம்பாய்’ பட இறுதி போல கைகோர்த்து ‘மனதோடு மனதிங்கு மகிழ்ந்தாடும்போது’ என ஆடவில்லை.
ஜெயமோகனுக்கு ஒரு தேவை உண்டு. அது சார்ந்த நோக்கமும் உண்டு. அவருடைய கலை நடவடிக்கை என்பது அரசவாதம். Conformity என சொல்லலாம். இருக்கும் அமைப்பையும் அரசையும் மதபீடங்களையும் கேள்வி கேட்காமல் தொடர்வதை உறுதிபடுத்துவதற்கான இலக்கியம் படைப்பதே அவரின் வேலை, நோக்கம், விருப்பம், இடப்பட்ட கட்டளை! இருக்கும் அமைப்பை மாற்றப் போராடும் இடதுசாரி அவருக்கு உவப்பில்லாதவனாகவே இருப்பான். எனவே அவனை discredit செய்வதும் அவனது போராட்டத்தையும் சித்தாந்தத்தையும் திரித்து அவதூறாக்குவதும்தான் அவரின் கலைப்பணியின் ஆன்மா என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
ரபீக் இஸ்மாயிலுக்கு ஏன் இந்த அவசியம் ஏற்பட்டது என்பதுதான் புரியவில்லை.
திரைக்கதையாகவும் சுவாரஸ்யம் இல்லை. காட்சிகளும் ஈர்க்கவில்லை. இடதுசாரிகளை திட்டும் சினிமாக்களாக இருந்து சினிமாக்கலைக்கேனும் நியாயம் செய்யும் பல படங்கள் உண்டு. இப்படம் அதிலும் ஜெயிக்கவில்லை.
இதே நேரத்தில் இன்னொரு படம் வெளியாகி இருக்கிறது. விட்னஸ்! படம் கொண்டிருக்கும் இடதுசாரிய பார்வைக்காக கூட வேண்டாம்; கலையாக அப்படம் நிகழ்த்தும் அற்புதத்துக்கேனும் இப்படத்தின் இயக்குநர் அப்படத்தைப் பார்க்க வேண்டும்.
மற்றபடி ’ரத்தசாட்சி’, மக்களிடம் நேரும் இடதுசாரிய சாய்மானத்தை காயடிக்க அரசகவி கொண்டு எழுதப்பட்ட அரசதுதி மட்டுமே!
-RAJASANGEETHAN