அறத்தை மீறியது நயன்தாரா தரப்பு தான்…!
எனக்கு நிஜமாகவே ஒரு விஷயம் புரியவில்லை. ‘நானும் ரௌடிதான்’ படத்தின் தயாரிப்பாளர் தனுஷ். எனவே படத்தின் உரிமம் அவர் வசம்தான் இருக்கிறது. அதில் இருந்து காட்சி மற்றும் இசைத்துணுக்குகளை நயன்தாராவின் நெட்பிளிக்ஸ் ஆவணப் படத்தில் பயன்படுத்த அவர் தனுஷிடம் அனுமதி கேட்கிறார். தனுஷ் அனுமதி மறுக்கிறார். மீறி பயன்படுத்துகிறார்கள். அதை டிரெய்லரில் பார்த்துவிட்டு அவர் லீகல் நோட்டீஸ் அனுப்புகிறார்.
இதில் தனுஷ்ஷிடம் என்ன தவறு இருக்கிறது என்பது புரியவில்லை.
‘அலைபாயுதே’ படத்தில் மாதவன் பைக் ஓட்டும் துவக்கக்காட்சியில் Backstreet Boys இசைக் குழுவின் பாடலை பயன்படுத்த மணிரத்னம் உத்தேசித்து இருந்தார். அதற்கு அனுமதி கோரியபோது அந்த இசைக்குழு ஒரு கோடி ரூபாய் கேட்டனர். சும்மா 20-30 செகண்ட் வரும் பாடல் துணுக்குக்கு ஒரு கோடியா என்று அதிர்ந்து அதைப் பயன்படுத்தாமல் விட்டார். அதற்குப் பதிலாகத்தான் அதே சாயலில் ‘என்றென்றும் புன்னகை’ எனும் குறும்பாடலை ரஹ்மான் உருவாக்கிக் கொடுத்தார்.
அதற்குப்பின் பல வருடங்கள் கழித்து – ரஹ்மான் ஆஸ்கார் புகழடைந்த பின் – வேறொரு ஹாலிவுட் படத்துக்கு ‘தக தைய்ய தைய்யா’ பாடலைப் பயன்படுத்த அனுமதி கேட்டு அவர்கள் மணிரத்னத்தை அணுகினர். பழைய அனுபவத்தின் நினைவில் அவர்களிடம் அதே ‘ஒரு கோடி’ கேட்டார். அவர்களும் தயங்காமல் கொடுத்து பயன்படுத்தி இருக்கிறார்கள்.
போலவே, ‘மஞ்சும்மேல் பாய்ஸ்’ படத்தில் ‘கண்மணி அன்போடு’ பாடலுக்காக தயாரிப்புக் குழுவிடம் அனுமதி வாங்கி இருந்தாலும், இளையராஜா வருத்தமுற்றதால் அவருக்கும் ஓரளவு பணம் கொடுத்து செட்டில் செய்தது படத்தரப்பு.
இப்படித்தான் காப்பிரைட் வேலை செய்கிறது. செய்ய வேண்டும். ‘சட்டப்படி உன் தரப்பில் நியாயம் இருக்கிறது; அறத்தின்படி நியாயம் இல்லை’ என்று அந்தக் கடிதத்தில் நயன்தாரா விளாசுகிறார். தனது ஆவணப்படத்தை நெட்பிளிக்ஸ்சுக்கு இலவசமாக அவர் கொடுக்கவில்லை. அதற்கு கோடிகளில் வாங்கியதாகத்தான் தகவல். எனவே அங்கே நடப்பது ஒரு வணிகப் பரிமாற்றம். அதில் அறம் பற்றிய பேச்சு எங்கிருந்து வருகிறது?
அறம் என்றால் என்ன? ஒருவருக்கு சொந்தமான பொருளை அவர் அனுமதியுடன் உரிய பணம் கொடுத்துப் பயன்படுத்துவதுதான் அறம் எனப்படும். அதை விற்பதற்கு அவர் விரும்பாத பட்சத்தில் – அதற்கு ஆயிரம் நியாய அநியாய காரணங்கள் இருந்தாலும் – அந்தப் பொருளை நாம் தொடாமல் இருப்பதுதான் அறம்.
அந்த அறத்தை மீறியது நயன்தாரா தரப்புதான். அது தாண்டி தனிப்பட்ட வணிகம் சார்ந்த ஒரு பஞ்சாயத்தை பொதுவெளிக்குக் கொண்டு வந்து அதில் அனுதாபம் தேடியது அடுத்த அறம் மீறிய செயல்.
அப்படியெல்லாம் அறத்தை மீறி விட்டு அப்புறம் ‘கடவுள் பார்த்துக்குவார்’ என்று எழுதுவதெல்லாம் வேற லெவல்.
அறத்தை மீறி இருப்பது நீங்கள்தான் மேடம். எனவே, கடவுள் என்று ஒருவர் இருந்தால் அவர் உங்களைத்தான் பார்த்துக்கப் போகிறார்!
– ஸ்ரீதர் சுப்ரமணியம்