‘மெய்யழகன்’ ஓர் அழகான கனவு – அதை ரசிக்கலாம்; வாழ முடியாது!

அப்பா ஒவ்வொரு முறை ஊருக்கு செல்லும்போதும் அதிகபட்சமாக ஓரிரு நாட்கள்தான் எங்களை வசிக்க அனுமதிப்பார். அதற்கு மேல் அடம் பிடித்தால் எங்களை விட்டுவிட்டு அவர் சென்னைக்கு திரும்பி விடுவார். ஏனெனில் அவருக்கு உறவுக்காரர்கள் கொடுத்த அனுபவம் அப்படி!

நகரத்தில் அதிகம் வளர்ந்த எனக்கு கிராமம் கொடுத்த பரப்புகளும் மனிதர்களும் வாழ்க்கைகளும் சுவாரஸ்யம் கொடுத்தது. வருடாந்திர விடுமுறைக்காக ஊருக்கு அம்மாவுடன் சென்றிருக்கிறேன். அங்குதான் சாதியத்தின் கூர்மையையும் நான் தெரிந்து கொண்டேன்.

கிராமத்து சுவாரஸ்யங்களுக்குள் மறைந்து கிடந்த சாதியத்தின் கோரத்தை அம்பலப்படுத்தி எனக்குக் காட்டியவர் அப்பா. பிறகு சொத்துடமை சார்ந்து நடந்த அபத்தங்கள், அவலட்சணங்கள், சிறுமைகள் போன்றவை என்னை குமைத்துப் போட்டது. ஒரு கட்டத்தில் அம்மாவும், அப்பாவும் நானும் ‘மெய்யழகன்’ படத்தில் வரும் அருண்மொழி குடும்பம் போல்தான் சென்னையில் தஞ்சம் கொண்டோம்.

கிராமங்களின் சொத்துடைமை வாழ்க்கையை விட நகரத்தின் உதிரி வாழ்க்கை ஒப்பீட்டளவில் மேம்பட்டதுதான். எனினும் கிராம வாழ்க்கையில் இருக்கும் நிதானமும் பிணக்கிருந்தாலும் ஒட்டி வாழும் தன்மையும் நகரத்து மனிதர்களுக்கு ஏக்கம் கொடுப்பவையே.

’மெய்யழகன்’ பட அருண்மொழி, நூற்றுக்கணக்கான கிளிகளுக்கு தினமும் உணவளிப்பவன். ஆனாலும் ஊர் சென்று ஒருநாள் ஊர் மனிதர்களை சகித்துக் கொள்ள மனம் ஒப்பவில்லை. அதை மீறி அங்கு செல்லும் அவனுக்கு அறிமுகமாகிறவன்தான் ’மெய்யழகன்’!

மெய்யழகன் பாத்திரம் வெகுளியாக காட்டப்படுகிறார். அதை கிராமத்து வெகுளித்தனம் என்கிற பூச்சில் நம் நகர மனங்கள் கைதட்டிக் கொள்ள முடியும். அதற்கு பின் இருப்பது நாம் இழந்த கிராமத்து வாழ்க்கைதாம். மற்றபடி அத்தகைய மனிதர்கள் இருப்பார்களா என்கிற கேள்வி அருண்மொழி போலவே நமக்கும் எழுகிறது.

‘கடைசி விவசாயி’ படம் போல ‘மெய்யழகன்’ ஓர் அழகான கனவு. அதை ரசிக்கலாம். வாழ முடியாது. அப்படி வாழ்ந்தவர்களைத்தான் அந்த கிராமங்கள் சென்னை போன்ற நகரங்களுக்கு விரட்டி அடித்திருக்கிறது.

இரவு நேர தஞ்சாவூர் தெருக்கள், வயல்வெளிகள், தோட்ட வீடுகள், அணைக்கட்டு போன்ற இடங்கள் நம் மனங்களுக்கு ரம்மியமான சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றன.

படத்தின் தொடக்கத்தில் மெய்யழகன் ஒரு போராட்டத்தில் கலந்து கொண்டு வருவதாக சொல்கிறான். இடையில் ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றிய ஒரு வசனமும் வருகிறது. பெரியார் படத்துடன் முருகன் படம் வீட்டில் மாட்டப்பட்டிருக்கிறது. கிராமத்தானுக்குள் முற்போக்கு அரசியலை வைத்து அழகு பார்க்க விரும்பும் இயக்குநரின் முயற்சி பாராட்டத்தக்கது.

கிராமத்து சமூக வாழ்வில் சைக்கிள் எந்தளவுக்கு மாற்றத்தை கொடுக்க முடியும் என்பதை சிறப்பாக வசனமாக்கி இருக்கிறார் இயக்குநர். நகரத்து மூச்சிரைப்பில், நாம் தவற விட்டு விட்டதாக நம்பும் கிராமத்து வாழ்வியலை காட்சிகள் ஆக்கியிருக்கிறார். அவற்றில் நம் மனமும் லயிக்கிறது.

மனித உறவுகளில் ஒரு சூட்சுமம் உண்டு. நெருக்கம் அதிகரிக்கையில் முரணும் வெறுப்பும் அதிகரிக்கும். தூரம் அதிகரிக்கையில் ஆர்வமும் நேயமும் பிறக்கும். வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த மக்களுக்கு பதறும் நாம்தான், வீட்டிலுள்ள முதியவர்களை பொருட்படுத்துவதில்லை. ஏதோவொரு நாட்டில் ஒரு மனிதர் விடும் கண்ணீரை பார்த்து கலங்கும் நாம்தான், நண்பர்களுக்கு எதிராக அரசியல் செய்கிறோம்.

மனித குலத்தின் நிலை இதுதான். தூரம் நிம்மதியும் நெருக்கம் துன்பத்தையும் தரும் வினோத உயிரினங்கள் நாம்!

தன்னுடைய பால்யகாலத்தை கழித்த ஊருக்கு சென்று பார்க்க வேண்டுமென என் தந்தை விரும்பினார். நாங்களும் அவரை அழைத்து சென்றோம். நிறைய மாறியிருந்தது. அப்பாவின் ஒன்றிரண்டு நண்பர்கள் பழைய விஷயங்களை அளவளாவியபடி சென்று கொண்டிருந்தார்கள். கடந்த காலத்தை மீட்டெடுக்கும் பரவசம் அச்சூழலில் நிறைந்திருந்தது.

மெய்யழகன் படத்தில் நேர்ந்திருப்பதும் அந்தப் பரவசம்தான். அதில் கூடுதலாக நாம் இழந்த (அல்லது அப்படி நாம் நம்புகிற) வாழ்க்கையின் நினைவுகளும் அடங்கியிருக்கிறது.

வாழ்க்கை என்பது மனிதர்களால் ஆனது அல்ல. மனிதர்கள் வாழ்ந்த இடங்களால் ஆனது. மெய்யழகன் அத்தகைய ஓர் இடத்துக்கு நம்மை அழைத்து செல்கிறது. இழப்பை குறிப்பிடுகிறது. சிறு பெருமூச்சை பெற்றுக் கொள்கிறது. இறுதியில் ‘நெல்லிக்காய் கடிச்சு தண்ணி குடிச்ச மாதிரி’ படம் நமக்குள் நிறைகிறது.

படமாக தங்கை செண்டிமெண்ட் போன்றவை கொடுமையாக இருந்தது. குறிப்பாக மெய்யழகனின் பெயர் தெரியாமல் அருண்மொழி பாத்திரம் அலைவது படம் முடிவதற்கு ஒரு ‘ட்ராமா’ தேவை என்பதற்காக திணிக்கப்பட்டது போல் இருந்தது.

ஓர் அன்பான கிராமத்தானின் பெயரை தெரிந்து கொள்ளாமல் பதறி ஓடி வெளியேறும் ஒரு நகரத்தானின் கதையாகவே படம் முடிந்திருக்கலாம்.

ஒரு பகல் நேர சாரல் மழையை வேடிக்கை பார்த்தபடி காபி குடிக்கும் அனுபவம்தான் ‘மெய்யழகன்’.

வேடிக்கை பார்க்க வீடு வேண்டும், அதில் முற்றம் வேண்டும், வேடிக்கை பார்க்குமளவுக்கு வேலைகள் நம் கழுத்துகளை நெறிக்காமல் இருக்க வேண்டும் போன்றவைதான் நம் வாழ்க்கைகள் கொண்டிருக்கும் யதார்த்தத்தின் சிக்கல்!

பழுப்பாகி போன புகைப்படத்தை பாதுகாத்து ஃப்ரேம் போட்டு வீட்டில் நினைவுக்கு மாட்டிக் கொள்ளலாம். அதற்குள் தொலைந்து போக முடியாது.

பழுப்பு, எதிர்காலத்துக்கான நிறம் அல்ல!

பொற்காலங்களை கடந்த காலங்களில் அடைய முடியாது!

-RAJASANGEETHAN