’மாவீரன்’:  குறியீடுகளையும் சில வசனங்களையும் கொண்டு மக்களுக்கான அரசியலை அடையாளம் காட்டியிருக்கிறார் இயக்குநர்!

மாவீரன், நிறைவு!

சிவகார்த்திகேயனுக்கும் மடோன் அஷ்வினுக்கும் முதலில் நன்றிகள்.

சாமானியனாக இருக்கும் ஒருவன் மாவீரனாவதே படத்தின் கதை!

நகரமயமக்கல் என்கிற பெயரில் நடத்தப்படும் உழைக்கும் மக்களுக்கு எதிரான அரசியல்தான் மையக்கரு.

படத்தில் நாயகனின் காதுக்கு ஒரு குரல் கதை சொல்லிக்கொண்டே இருக்கிறது. கதையினூடாக சாமானியனான அவனை வீரனாக்குகிறது. மாவீரனாக்குகிறது. அந்தக் குரல் சொல்லும் கதை பெரும் வரலாற்றினூடாக கிளைத்தெடுக்கப்பட்ட கதை. அதிகாரத்துக்கு எதிராக மக்களின் பக்கம் இருந்து எழுதப்பட்ட கதை. அக்கதை புரிந்து வீரம் கொள்கிறவன் அணியும் சட்டையின் நிறம் ஒன்றுதான். சிகப்பு!

படத்தில் பல நிறங்களில் சட்டை அணிந்து வரும் நாயகன், முக்கியமான ஒரு தருணத்தில் சிவப்பு சட்டையில் வருகிறார். அங்கிருந்து படம் முடியும் வரை சிகப்புச் சட்டைதான்.

“உன்னை பைத்தியம்னு சொன்ன மக்கள்தானே.. எக்கேடாவது கெட்டுப் போகட்டும்னு விட்டுட்டு வாயா..!” என்றதும்,

“அப்படியெல்லாம் விட்டுட்டு வர முடியாதுண்ணா!” என சொல்லும்போதும் சிகப்புதான்.

சென்னையின் கேபி பார்க், தீவுத்திடல் என எல்லா வெளியேற்றங்களின்போதும் மக்களின் பக்கம் நின்ற / நிற்கிற சிகப்புதான்.

‘மொட்டத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சா?’ என்போருக்கு இயக்குநரின் இன்னொரு க்ளூ இருக்கிறது. சாமானியனாக இருக்கும் நாயகனைப் பற்றி குறைபட்டுக்கொள்ளும் போதெல்லாம் நாயகனின் தாய் சொல்வது ”கொடிய பிடிச்சுக்குனு மக்கள் மக்கள்னு போன மனுஷனுக்கு போய் மகனா பொறந்திருக்கியேடா!” என்றுதான்.

வில்லனின் கையாளிடம் மக்கள் சென்று உதவி கேட்கும்போது அவன் சொல்லும் வசனம், “மனு கொடுக்கும்போது அறிவு எங்கே போச்சு?”‘ என்பது. வில்லன் சொல்லும் ஒரு வசனம், “கேள்வி கேட்கறவன உயிரோட விட்டா வாழ முடியாது!” என்பது.

நகரமயமாக்கல் என்பது உலக வங்கிக்கு கார்ப்பரெட்டுகள் கொடுத்த ப்ராஜெக்ட். பூமியின் ஒது துண்டு நிலமும் சும்மா இருந்துவிடக் கூடாது, முதலாளிக்கு பயன்பட வேண்டும் என்பது மட்டும்தான் உலக வங்கி உருவாக்கப்பட்ட குறிக்கோள்.

90-களுக்கு பிற்பகுதியில் இந்தியாவிலும் கட்டவிழ்த்து விடப்பட்ட உலகமய குதிரை, ஓடும் இடமெல்லாம் முதலாளிகளுக்கும் முதலீடுகளுக்கும் தாரை வார்க்கப்படும் முறை தொடங்கியது. அந்த நிலங்களில் மக்கள் இருந்தால் என்ன செய்வது?

வெளியேற்றம்தான்.

‘நல்ல வீடு கட்டி தர்றோம்’, ‘மழைல ஆறு பொங்கி வீட்டுக்குள்ள வந்துடும்’, ‘ஆத்தை காப்பாத்தறோம்’ என விதவிதமாக காரணங்கள் சொல்லப்படும். பளபளப்பான திட்டங்களை உலக வங்கி போட்டுக் கொடுக்கும். அதை நம்மூர் அரசுகளும் செய்து தரும்.

மக்கள் இறுதியில் so called நகரமயமாக்கலில் விளைந்த அந்த நகரத்துக்குள்ளேயே இருக்க மாட்டார்கள். இவற்றுக்குள் பார்ப்பனியம், சாதி, கட்சி அரசியல் யாவும் தத்தம் பங்குகளை எடுத்துக் கொள்ளும்.

குறியீடுகளையும் சில வசனங்களையும் கொண்டு மக்களுக்கான அரசியல் எது என்பதை படத்தில் அடையாளம் காட்டியிருக்கிறார் இயக்குநர். என் கணக்கு சரியாக இருந்தால் கட்சி கம்யூனிஸ்ட்டுகள் இப்படத்தை திட்டுவார்கள். அது மட்டும் நடந்தால் படம் சரியாக அரசியலை பேசி இருக்கிறது எனப் பொருள்.

சிலர் இதில் கையாளப்பட்டிருக்கும் Fantasy மற்றும் மசாலா தன்மைகளை முன்வைத்தும் நிராகரிக்கலாம். ஆனால் படம் கமர்ஷியலினூடாக நகைச்சுவையுடன் அற்புதமாக Eviction அரசியலை வெகுஜன மக்களுக்கு கடத்தியிருக்கிறது.

கீறல் விழும் கட்டடத்தில் ஒரு காட்சியில் நாயகனின் வீட்டில் அக்கம்பக்கத்தார் உட்கார்ந்திருப்பார்கள். அப்போது வரும் யோகிபாபு “எந்த தைரியத்துல இத்தன பேரு ஒண்ணா உட்கார்ந்திருக்கிறீங்க?” எனக் கேட்கும்போதெல்லாம் நாம் சிரிக்கும் சிரிப்பு நமக்கு வாய்த்திருக்கும் அரசியல்களை கண்டு சிரிக்கும் சிரிப்புதான்.

ஒரு எம்ஜிஆராக, ஒரு சினிமா நாயகனாக, ஓர் அசகாய சூரனாக நாயகனை மாற்ற நிறைய வாய்ப்புகளைக் கொண்ட களம். ஆனால் இயக்குநர் தெளிவாகவே அதை தவிர்த்திருக்கிறார். பட இறுதி வரை சினிமா நாயகனுக்கான இலக்கணத்தை பட நாயகன் தொடுவது ஓரிரு இடங்களில் மட்டும்தான். மற்றபடி பயந்தவனாக, சாமானியனாக, இயலாமை கொண்டவனாகவே நாயக பாத்திரம் அமைக்கப்பட்டிருக்கிறது.

சிவகார்த்திகேயன் நிச்சயமாக திரையுலகில் முக்கியமான இடத்தை எட்டிவிட்டார். குழந்தைகள் தொடங்கி, தாத்தா பாட்டிகள் வரை திரையரங்கில் நிறைந்திருந்தனர். எல்லாருக்கும் உவப்பான நடிகராகி இருக்கிறார் சிவகார்த்திகேயன். நகைச்சுவை காட்சிகளுக்கு குழந்தைகள் விழுந்து விழுந்து சிரிக்கின்றன. அந்தக் குழந்தைகளிடம் இப்படத்தை பொருத்தி யதார்த்தத்தை புரிய வைக்கும் வாய்ப்பை அற்புதமாக கையளித்திருக்கிறது இப்படம். அதை விடுத்துவிட்டு ‘கட்சி திட்டத்தை ஏன் படமாக எடுக்கவில்லை’, ‘மார்க்சியமே வெல்லும் என நாயகன் ஏன் முஷ்டியை மடக்கவில்லை’ என்றெல்லாம் பேசினால், வழக்கம்போல் நஷ்டம் நமக்குத்தான்.

எல்லாம் சரி. அசரீரி போல் கேட்கும் குரல் யாருடைய குரல்? கடவுளா? கடவுளை போதிக்கும் படத்தை கொண்டாடினால் மார்க்ஸ் கண்ணை குத்துவாரே?

படத்தில் ஒரு கட்டத்தில் அந்தக் குரல் நின்றுவிடுகிறது. அது சொல்லும் கதையும் நின்றுபோகிறது. அந்தத் தருணத்தில் வில்லனின் கையாள் சொல்கிறான், ”அந்தக் கதையெல்லாம் இனிமே நடக்காது. உங்களல்லாம் காப்பாத்த யாரும் கிடையாது” என.

கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வசனம் ஒரு குரலை, ஒரு ஆளுமையை, ஒரு சித்தாந்தத்தை, ஒரு நிறத்தைக் குறிப்பிட்டுதான் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இடதுசாரி, மார்க்ஸ், கம்யூனிசம், சிகப்பு!

வாழ்த்துகள் Madonne Ashwin!

RAJASANGEETHAN