“நாம் அனைவருமே ஒரு மனச்சிதைவு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!”

உங்களுக்கு ஒன்று தெரியுமா?

நாம் அனைவருமே ஒரு மனச்சிதைவு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் அனைவருமே மனச்சிதைவின் புத்திரர்கள். மனச்சிதைவுகளுக்கு இடையேதான் வாழ்க்கையை தேடிக் கொண்டிருக்கிறோம். நேற்று கூட ஒரு தோழர் என்னிடம் கேட்டார், ‘பொருள்முதல்வாதம் பேசும் கம்யூனிசம் மன உணர்வுகளை என்னவாக புரிந்துகொள்கிறது?’ என. எத்தனை விளக்கம் கொடுத்தப்பின்னும் பொருளை சார்ந்தே உணர்வுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதை புரிந்துகொள்வது மிக கடினமாக இருந்தது தோழருக்கு. ஏனெனில் இன்றைய சமூகத்தின் social conditioning அப்படி உள்ளது.

தனி நபர் உணர்வை முதன்மைப்படுத்தி, அதில் லாபங்களை அறுவடை செய்து கொண்டிருக்கும் முதலாளித்துவம், தனி நபர் உணர்வுகள் ரணமாக்கப்படும்போது என்ன நிகழும் என்பதை யோசிப்பதில்லை. அது முதலாளித்துவத்தின் வேலையும் அல்ல. எதற்குமே பொறுப்பெடுத்துக் கொள்ளாமல் தன்னை வளர்த்தெடுக்க மட்டுமே அதற்கு தெரியும். ஆனால் இப்படி தனி நபர் உணர்வுகளை முதன்மையாக கருதும் சூழலில் பிறந்து வளர்ந்து, கம்யூனிசமும் அண்டாமல் வாழும் மனங்களில் எழும் கேள்விகளுக்கு என்ன பதில்கள்?

‘ஏன் என்னிடம் பணம் இல்லை?’

‘ஏன் என் வாழ்வில் நிம்மதி இல்லை?’

‘ஏன் இத்தனை தனிமையில் உழலுகிறேன்?’

‘என்னை புரிந்துகொள்ளவென ஒரு உயிர் கூட இவ்வுலகில் கிடையாதா?’

‘ஏன் என் நோய்க்கான மருந்துகளை வாங்குமளவுக்கான வருமானம் எனக்கு இல்லை?’

என பல கேள்விகள். யார் பதில் கொடுப்பார்?

யாரும் கிடையாது. நம் அரசுகளும் பணக்காரனுக்கு மட்டுமே வாய்ப்புகளை பெருக்குவதை நிர்வாகம் என செய்து கொண்டிருக்கையில் மனித குலத்தின் பெரும்பகுதியின் குரல்கள் கேட்கப்படுவதே இல்லை. உலகின் அந்த பகுதியில் இருந்து வரும் ஒருவன், தனக்குள் எழும் கேள்விகளுக்கு சித்தாந்த புரிதல்களற்று, பதில் சொல்லத் தொடங்குகையில் சமூகத்தின் ஆகப்பெரும் ஜோக்கர் ஆகிறான்.

இரும்பு குதிகால் புத்தகத்தில் ஒரு அத்தியாயம் உண்டு. அதல பாதாளத்து மக்கள் என ஒரு மக்கள் பிரிவை குறிப்பிடப்பட்டிருக்கும். அவர்களை பற்றி இப்படியான விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கும்.

‘அதல பாதாளத்து மக்கள், படு பரிதாப நிலையில் இருக்கிறார்கள். அவர்களை பொறுத்தவரையில், சாதாரணமான பள்ளி கல்வியும் இல்லாமல் போனது. அவர்கள் அனைவரும் மிக கீழான, இழிவான நிலையில் சீழ் வடியும் புண்களைபோல் நாற்றமடிக்கும் அழுக்கு குடிசைப்பகுதிகளில் கால்நடைகளைப் போல் வாழ்கிறார்கள். அவர்கள்தான் கூலி அடிமைகள். அவர்கள் விரும்பிய வேலை செய்யும் உரிமையை இழந்தவர்கள். ஓரிடத்திலிருந்து வேறு இடத்துக்கு செல்லும் உரிமை இழந்தார்கள். ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது. ஆயுதங்களை ஏந்தக் கூடாது என்ற சட்ட இறுக்கங்களுக்குள் வாழ்பவர்கள். அவர்கள் அனைவரும் கொட்டடிகளில் மாடுகளை போல் அடைத்து வைத்து வேலை வாங்கப் படுகிறார்கள். இப்படி ஒரு நிலை தான் அடித்தட்டு மக்களிடம் நிலவுகிறது. முழு உண்மையைக் கூற வேண்டுமானால், அந்தத் தொழிலாளர்களின் அழுக்குக் குடியிருப்பு பகுதிகளில்தான் நரக பாதாள உலகின் மகாமிருகத்தின் கர்ஜனை தெறிக்கிறது. அந்த மிருகத்தை கண்டுதான் சிலராட்சி அரசாங்கம் அவ்வளவு அச்சப்படுகிறது. ஆனால், அவர்களே படைத்ததுதான் அது. அவர்களை கண்டிப்பாக தன் கோரைப் பற்களால் கவ்வி கடித்து குதற தனது சமயத்தை எதிர்நோக்கி காத்திருந்தது அந்த மிருகம்.’

ஜோக்கரிடமும் ஜோக்கரை போன்ற மக்களிடமும் பணக்காரர்கள் பேசும் philanthropy அல்லது வள்ளல்தன்மை கேலிச்சிரிப்பை கொடுக்கிறது. வறியவர்களிடம் அவர்கள் காட்டும் இரக்கம் கோபத்தை வரவழைக்கிறது. உங்களின் இரக்கத்தில் நாங்கள் எனன் வாழ வேண்டும் என்கிற கேள்வி உதிக்கத் தொடங்கி, ஒன்று சேர்ந்து, கோஷமாகி வளர்ந்து ‘எங்கள் இரக்கத்தில்தான் நீ வாழ்கிறாய்!’ என முழுமை பெற்று துப்பாக்கி தோட்டாவை துப்பி ரத்தம் குடிக்கிறது.

படத்தில் ஒரு வசனம் உண்டு. “ஏன் எல்லாரும் இவ்ளோ rude-ஆ இருக்கீங்க… ஒருத்தர்கிட்ட ஒருத்தர் இவ்ளோ வெறுப்ப காட்டுறீங்க… ஆறுதலா ஒரு வார்த்தை கூட ஏன் பேச மாட்டேங்கறீங்க?”

இன்று சுற்றி பாருங்கள். உங்களுக்கு அருகே நேர்ந்த தற்கொலைகளை பற்றி விசாரித்து பாருங்கள். இந்த வசனம் அச்சம்பவங்களுக்கு பின் நிச்சயம் இருக்கும்.

நம் சக மனிதர்களிடம் இருந்து பிரித்து நம்மை ஓட வைப்பது எது? நம் சக மனிதனை நமக்கு எதிரியாக மாற்றுவது எது? கூட்டு வாழ்வில் பரிணாமம் கொண்ட நம்மை நம் இயல்புக்கு மீறி தனியாக ஆக்குவது எது?

எல்லா கேள்விகளும் ஒன்று திரளும் காலத்தில் நின்று கொண்டிருக்கிறோம்.

முதலாளித்துவமும் அரசுகளும் காலாவதி ஆகும் சுழலை கண்டு கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு தேவை ஒரு மிகப்பெரிய மக்கள் தொகை அழிப்பு. அவற்றுக்கு வழி கோலும் வகையிலான படங்களை ஜோக்கர் போலவும் தானோஸ் போலவும் கொடுத்து நம் சிந்தனையை தூண்டலாம். ஆனால் அவற்றுக்குள்ளும் புகுந்து சித்தாந்தம் தேடுபவர்களே சமூகத்தின் இன்றைய அத்தியாவசியத் தேவை.

ஒரு தனி மனிதனின் வாழ்க்கையிலிருந்து அத்தனை பொறுப்புகளையும் அரசு உதறிக் கொள்ளுமானால், ஒரு தனி மனிதனின் வர்க்க நலன் சார்ந்து அரசு செயல்படுமானால், பிறகு அங்கு அதல பாதாளத்து மக்களே வெளிவருவார்கள். அவர்களின் வருகை சாதாரணமாக இருக்காது. இரும்பு குதிகால் புத்தக பத்தி சொல்வது போல்,

‘கிழிந்த ஆடைகளை அணிந்த ஆண், பெண், குழந்தைகள், வயோதிகர்கள் அடங்கிய மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, தங்கள் முகத்தில் கனிவு என்ற ஒன்றை அழித்துவிட்ட்டு பிசாசுகளைப் போல் பயங்கரமாக மாறி, பூமியே அதிரும்படி கால்களை அடித்து மிதித்து செல்கிறார்கள். அந்த மக்களில் சில குரங்குகள் இருக்கின்றன, புலிகள் இருக்கின்றன, ரோமங்கள் நிறைந்த கரடிகள் இருக்கின்றன, தங்களின் ரத்தத்தை உறிஞ்சி எடுத்த இந்த சமூக வாழ்வை தூக்கி எறிந்த முகங்கள் இருக்கின்றன. நீதிநெறி கட்டுப்பாட்டை கைவிட்டுவிட்டு கண்டபடி மேய்ந்த யானைகள் இருக்கின்றன. நலிந்தவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் பெரும் தலைமுடியும், தாடியுமாக, பிரம்மாண்டம் கொண்டு மரணத்தின் முகவர்களாக இருந்தனர். மக்கிப் போன இளைஞர்கள், பேய்முகத்தினர், அழகற்றவர்கள். விகாரமானவர்கள், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், பிச்சைக்காரர்கள் என பெரும் கூட்டத்தினர் அவர்கள். சமூகம் கழிந்துவிட்ட அழுக்கு, இந்த நகரம் கழித்து விடப்பட்ட அழுக்கு. இங்கே நடு நகரத்தில் பெரும் பிரவாகம் எடுத்து மிதக்கிறது. இது ஆக்ரோஷமடைந்து, பெரும் கூச்சலிட்டபடி, நெரித்து மிதித்து தள்ளி ஓடும் பெரும் அரக்கக்கும்பல்!’

இவை எதுவும் கதைகள் அல்ல. வெறும் படமும் அல்ல. இன்று நாம் வாழ்ந்திருக்கும் தன்மையும் சூழலும் இவைதாம். அதை புரிந்ததால்தான் ஹாலிவுட்டில் ஒரு காமிக்ஸ் கதாபாத்திரத்தை கொண்டு கூட மனிதச்சமூகம் எட்டியிருக்கும் விளிம்பை சொல்லி வடிகால் தேடிக் கொள்ள முயலுகிறார்கள்.

ஆனால் ஜோக்கர் படத்தின் இறுதிக்காட்சியில் வரும் வசனம் போல,

“சமூகத்தால புறக்கணிக்கப்பட்ட ஒருத்தன் அதனாலேயே மன பேதலிப்பும் அடைஞ்சான்னா, அவன்கிட்ட இருந்து என்ன கிடைக்கும்?”

“உங்களுக்கு கெடச்சிருக்க வேண்டியது கெடைக்கும்!”

ஏனெனில் நாம் அனைவருமே ஒரு மனச்சிதைவு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் அனைவருமே மனச்சிதைவின் புத்திரர்கள். மனச்சிதைவுகளுக்கு இடையேதான் வாழ்க்கையை தேடிக் கொண்டிருக்கிறோம்.

RAJASANGEETHAN