‘ஜெய்பீம்’: கபடத்தில் ஊறிய அதிகார வர்க்கத்தை கட்டிவைத்து உரித்திருக்கிறார் இயக்குநர்!
ஜெய்பீம்
இறுதிக் காட்சியில், போலீஸ் அடக்குமுறையால் கொடூரமாகப் பாதிக்கப்பட்ட இருளர் சமூகத்துக்கான சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்ற செய்தியை கால் மேல் கால் போட்டுக்கொண்டு சூர்யா படிப்பதைப் பார்த்து, அதே தோரணையில் இருளர் சமூகச் சிறுமி செய்தித் தாளைக் கையில் எடுத்துப் படிக்க முற்பட, சூர்யா பார்க்கிறார். என்ன சொல்வாரோ என்ற எண்ணத்தில் சிறுமி மெல்ல உள்வாங்குகிறார். சூர்யா தலையைசைத்து, பார்வையால் – அதே கம்பீரம் தொடரட்டும் என்று உணர்த்துகிறார். சிறுமியும் அதிகாரப்பூர்வமாக கால்மேல் கால் போட்டு அசத்தலாகப் படிக்கிறார். அதைத் தொடர்ந்து, எழுத்து – இயக்கம் த.செ. ஞானவேல் என்று திரையில் “டைட்டில்” ஒளிர்வது மிகப் பொருத்தமாக இருக்கிறது. ஜெய்பீம்.
முக்கியமான ஒரு சமூகப் பிரச்சினையை, சூர்யா போன்ற முன்னணி நடிகரை வைத்து, தேர்ந்த தரத்துடனும் பார்வைச் சுவை குன்றாமலும் தந்திருக்கிறார் இயக்குநர் ஞானவேல். எந்தவிதமான முன், பின் விசை இன்றி, தமிழின் முதல்வரிசை இயக்குநர்களில் அவர் பெயர் தன்னால் சேர்கிறது.
அதேபோல, இப்படியான ஒரு சிறந்த படைப்பில் நடித்ததுடன் தயாரிக்கவும் முன்வந்த சூர்யா ஒரு முன்னோடித் தடத்தை உருவாக்கியிருக்கிறார். முன்வரிசை நாயகர்கள் வெறுமனே “பில்ட்-அப்” அல்லது சமூகப் படங்கள் போன்ற பாசங்குப் படங்களில் தொடர்ந்து நடிப்பதில் அர்த்தமில்லை என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் சூர்யா.
அந்நாள் வழக்கறிஞரும் பின்னாள் நீதியரசருமான சந்துரு, பேராசிரியர் கல்யாணி உள்ளிட்ட தோழர்கள் 90’களில் நடத்திய சட்டப் போராட்டத்தையே திரை வடிவில் புதிய அடையாளத்துடன் அழுத்தமாகத் தந்திருக்கிறார் இயக்குநர். உண்மையில் அதிகார வர்க்கத்தால் ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கு நியாயம் கிடைக்கப் பங்களித்தவர்கள் அனைவரையும் இந்தப் படம் கௌரவித்திருக்கிறது.
படத்தின் தொடக்கக் காட்சிகள் லேசாக “நாடோடித் தென்றல்” சாயலை நினைவூட்டுகிறது. ஆரம்பக் காட்சிகளைத் தொடர்ந்து, திரைக் கதையில் சூர்யாவை இணைத்து முன்நகர்த்தும் இடத்தில் ஒருவித படபடப்பு தெரிகிறது. ஆனால் இவையெல்லாம் படத்தோடு பார்வையாளர்கள் பயணிப்பதில் குறுக்காக நிற்கவில்லை.
படம் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றிருக்கிறது. சிலவேளைகளில் இவ்வாறு பேசப்படும் படம், அந்தப் புள்ளியிலிருந்து தள்ளியோ அல்லது மிகத் தள்ளியோ இருக்கும். அவ்வாறின்றி, ஜெய்பீம் – நெருக்கமாக நிறைந்திருக்கிறது. சூர்யா (வழக்கறிஞர் சந்துரு), மணிகண்டன் (ராஜாக்கண்ணு) செங்கனி (லிஜோமோல் ஜோஸ்) உள்பட படைப்பில் இணைந்துள்ள அனைவரும் பெரும் பாராட்டுக்குரியவர்கள். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் தனித்துச் சொல்லப்பட வேண்டியவர்.
படத்தின் மையமான இருளர் சமூகத்து இளைஞர் ராஜாக்கண்ணு, போலீஸ் அடக்குமுறையில் உயிரிழந்த சேதி கேட்டு, பெண்கள் கூடி அழ, ஆண்கள் அவர்கள் மரபுப்படி, அதிகம் அதிராத தாளக் கருவியின் ஒலிக்கேற்ப சுற்றிவந்து ஆடுகிறார்கள். சட்டையில்லாமல் ஒரு பெரியவர், உள்ளுணர்வு ததும்ப கையை மேலும் கீழுமாக அசைத்து ஆடுகிறார். படம் முடிந்த பிறகும் அந்த ஆட்டம் நம் மனதுக்குள் தொடர்கிறது.
அழும் பெண்களில் ஒருவர் வெடித்தெழுந்து, “எம் புருஷன் செத்த சேதிய எப்போ சொல்லப் போறீங்க…” என்று கேட்கிறார்.
கபடத்தில் ஊறிய அதிகார வர்க்கத்தை கட்டிவைத்து உரித்திருக்கிறார் இயக்குநர்.
ஜெய்பீம்!
Elayaperumal Sugadev