இந்தியன் 2: இந்தியன் 1-ன் அற்புதத்தை நினைவூட்டி ஏங்க வைத்தது தான் மிச்சம்!

“லஞ்சம் வாங்குற எல்லாரையும் இந்தியன் தாத்தா கொல்றாரு. சிம்பிள் விஷயம்தான்… ஆனா எப்படி கொல்வாரு? ஆளாளுக்கு புதுப் புது ஐடியா யோசிச்சி சொன்னோம். ஷங்கர் சார் ஒத்துக்கல. ‘புதுசா இருக்கணும். ஆனா யதார்த்தமா இருக்கணும்’னு சொல்லி விரட்டிக்கிட்டே இருப்பார். எங்கெங்கயோ கேட்டோம். நிறைய ரிசர்ச் பண்ணோம். கிட்டத்தட்ட ரெண்டு மாசத்துக்கு மேல இந்த ஒரு விஷயத்துக்காக மட்டுமே போராடுனோம். அவ்ளோ மெனக்கெட்டு கெடச்சதுதான் வர்மக்கலைல கொலைங்கற கான்சப்ட்!”

இந்தியன் 1 படத்தில் பணிபுரிந்த ஓர் இயக்குநர், ஷங்கருடன் பணியாற்றிய அனுபவங்களை ஒருமுறை விவரிக்கும்போது குறிப்பிட்ட விஷயம் இது.

இந்தியன் 2-வில் இது இல்லை!

ஷங்கர் மற்றும் சுஜாதாவின் அரசியலில் எப்போதும் உடன்பட்டதில்லை. ஆனால் திரை ஆக்கமாக வெகுஜன சினிமாவில் வணிக வெற்றி கொண்டு வருவதில் இருவரும் திறன் வாய்ந்தவர்கள். ஆக்கத்துக்கு ஷங்கர், திரைக்கதைக்கு சுஜாதா! இந்த கூட்டு நிகழ்த்திய மேஜிக்கின் உச்சம்தான் இந்தியன் 1.

அதிகார மட்டங்களில் நடக்கும் லஞ்ச ஊழல், நேரடியாக மக்கள் பார்த்தறிந்தது என்பதாலும், அதை சினிமா சுவாரஸ்யத்துடன் சுஜாதா திரைக்கதை ஆக்கி இருந்ததாலும் இந்தியன் 1 பெரும் வெற்றியை ஈட்டியது.

வர்மக்கலை, இந்தியன் 1 படத்தின் USP. விரலை சுழற்றி கமல் எதிரிகளை வீழ்த்துவதும் அதற்கு உள்ளபடியே ஒரு கலை இருப்பதும் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

வழக்கமான ‘இரு பெண் கொள்ளி நாயகனாக’ கமல், அதற்குள் இருக்கும் சுஜாதாவின் குறும்புத்தனம் என்பதைத் தாண்டி சேனாபதி பாத்திர வார்ப்பில் ஒரு நல்ல மெனக்கெடல் இருந்தது.

விவசாய வர்க்கப் பின்னணியிலிருந்து எழும் சுதந்திரப் போராட்ட வீரனாக சேனாபதி இருந்தான். அவனுக்கென ஓர் அற்புதமான காதலி!

பொம்மலாட்ட பொம்மையைச் சுட்டு, ‘இந்தியன அடிக்கிறது ஆங்கிலேய பொம்மையா இருந்தாலும் பார்த்துக்கிட்டு இருக்க மாட்டேன்’ என வசனம் வைத்து சேனாபதியின் தேசப்பற்றை உணர்த்திக் காட்டியிருப்பார் சுஜாதா.

சுதந்திரப் போராட்ட வீரர்களை தற்காலம் எப்படி நடத்துகிறது என்கிற குத்தலும் காட்சிகளில் வரும். தியாகி பென்சனுக்கு பரிந்துரை கேட்டு வரும் பாத்திரமாக நடித்து உதவி கேட்கும் நெடுமுடி வேணுவை எள்ளி நிராகரிக்கும் கோபம் சேனாபதியிடமிருந்து அல்ல, அவரது மனைவியிடமிருந்து வெளிப்படும் அளவுக்கு அந்தக் காலத்து நேர்மையை பாத்திரங்களில் பூசியிருப்பார் சுஜாதா.

நெடுமுடி வேணுவை வீழ்த்தி சேனாபதி திரும்பிப் பார்க்கையில் நடப்பதை அறிந்து அடுத்தக் கட்டத்துக்கு நகரும் யத்தனிப்பில், சுகன்யா பாத்திரம் கொடியில் காயப் போட்டிருக்கும் துணியை எடுத்து கிளம்பத் தயாராகும். அதை பார்த்து ஒரு சிறு புன்னகையை சேனாபதி உதிர்ப்பான். தலைமறைவாக வாழுதலை பற்றி ஏற்கனவே பரிச்சயப்பட்டவர்கள் இருவரும் என்பதை சூசகமாக அக்காட்சி உணர்த்தி செல்லும்.

சந்துருவுக்கும் சேனாதிபதிக்கும் இடையிலான மோதல், இரு தலைமுறைகளுக்கான மோதல். ‘நேர்மை நேர்மைன்னு சொல்லி பொண்ண சாவக் கொடுத்த பிழைக்க தெரியாதவர்’ என்கிற சந்துருவின் தலைமுறையும், நியாயத்துக்காக மகளென்ன மகனையும் பறிகொடுக்க துணியும் லட்சியவாத தலைமுறைக்குமான மோதலாக அது வரிக்கப்பட்டிருக்கும்.

அந்த மோதலின் உச்சம்தான் சுஜாதாவின் அந்த வசனம்!

“குழந்தையில அவனக் கொஞ்சும்போது மீசைக் குத்துதுன்னு அழுவான். அவனுக்கு வலிக்குதேன்னு மீசைய இழந்த சேனாபதி, இன்னைக்கு அவனையே இழக்க தயாராகிட்டேன். உன்ன விட என் இழப்புதான்மா பெருசு!”

இதோடு வசனம் முடியாது.

“மிருகத்துக்கு இரக்கம் காட்டுறியே அவனால செத்துப் போன குழந்தைகளுக்கு இரக்கம் காட்ட மாட்டியா” என சேனாபதி கேட்க, மனிஷா பாத்திரம் பதிலுக்கு “புத்திக்கு தெரியுது, மனசுக்கு தெரிய மாட்டேங்குதே!” என்க, சேனாபதி சொல்வான், “எனக்கு மனசும் புத்தியும் ஒண்ணு” என.

சந்துரு பாத்திரத்தை கொல்ல முயலுகையில், “நான் திருந்திட்டேன்பா. காத்திருந்து உங்களுக்கு பொறந்த புள்ள. என்னை கொல்லாதீங்க!” எனக் கெஞ்ச, சேனாபதி பதிலுக்கு “இன்ஸ்பெக்டருக்கு டிவி லஞ்சம். பெத்த அப்பன் எனக்கு பாசமா?” என சுருங்க என்றாலும் சுளீரென அந்த உரையாடலை முடிப்பார்.

இந்தியன் பாத்திரத்துக்கே விளக்கம் கொடுக்கும் நேரலை காட்சியில் “எல்லா நாட்டுலயும்தான் லஞ்சம் இருக்கு!” என நிழல்கள் ரவி சொல்ல, “அங்கெல்லாம் ஒரு வேலைய தப்பா செய்ய லஞ்சம் வாங்குவாங்க. ஆனா இங்க, ஒரு வேலைய செய்யவே லஞ்சம் வாங்குறீங்களேடா!” என்பான் சேனாபதி. அப்போதும் உணராமல் “உங்களுக்கு எவ்ளோ பணம் வேணாலும் கொடுக்கறேன். விட்டுடுங்க!” என ரவி சொல்ல, “உங்கள கொல்றதுல தப்பே இல்லடா!” எனக் கத்தியை பாய்ச்சுவான் சேனாபதி.

அரசியல், பாத்திர வார்ப்பு, சிந்தனை, தலைமுறை இடைவெளி, உறவு என எல்லா விஷயங்களையும் மோத விட்டு conflict ஏற்படுத்தி காட்சிகளில் drama உருவாக்கி திரைக்கதை எழுதியிருப்பார் சுஜாதா.

மட்டுமின்றி நடிகர் தேர்வு உள்ளிட்ட எல்லாமும் கச்சிதமாக அப்படத்தில் அமைந்திருந்தது. ஒரு பேட்டியில் வீட்டில் சேனாபதியை சிறைப்படுத்திய காட்சி குறித்து விவரித்திருந்தார் நெடுமுடி வேணு.

“‘இன்னைக்கு நைட் எங்க வீட்டுல நீங்க கெஸ்ட்’னு கை கொடுக்கும்போது திரும்ப கை எடுத்து ‘உங்களுக்கு வர்மக்கல தெரியும். கை கொடுக்க மாட்டேன்’னு வசனம் வரும். ஷங்கர் கிட்ட அந்த வசனம் வேணாம்னு சொன்னேன். அவரு குழம்புனார். டேக்ல அந்த டயலாக்க அப்படியே நான் ஆக்‌ஷன்ல பண்ணினேன். ஓகே சொல்லிட்டாரு!”

பேசுவதல்ல, நடிப்பதுதான் நடிகனுடைய வேலை என்பதை உணர்ந்ததால் நெடுமுடி வேணுவும் அளப்பறிய பங்களித்திருப்பார் அப்படத்துக்கு.

மேலும் படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் காரணம் இருக்கும், Back story இருக்கும், Brilliance இருக்கும், அவற்றுக்கான உழைப்பு இருக்கும்.

மொத்த காவல்துறையும் சேனாபதியைத் தேடி மோப்பம் பிடித்து அலையும்போது அவர் ‘Mortuary’ வேன் பயன்படுத்தி தப்பிப்பது, நிழல்கள் ரவி கொலையின் நேரலையை தடுக்க முயற்சிக்கும்போது, அந்த கேசட் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டு relay ஆகிறது எனத் தெரிய வருவது, நேதாஜியின் காணொளியில் கமல் ஒட்ட வைக்கப்பட்டது என இந்தியன் படத்தில் பல நுட்பமான அற்புத விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

Last but not the least, ஏ.ஆர்.ரஹ்மான்!

சுதந்திரம் பெற்று நாடே கொண்டாடும்போது, காதலியை தேடி ஓடி வந்து நிற்கையில் ஒலிக்கும் அந்த humming, அதற்கேற்ப கமலுக்கு zoom போகும் ஒளிப்பதிவு, மொத்தமாக தனக்குள் காதலியை உள்வாங்குவது போல் கமல்

காதலியை அணைக்கும் அணைப்பு, பாடல் ஒலிக்கத் துவங்கும் இடம் என மொத்த சினிமா கலைகளும் மிக அழகாக ஒருங்கிணைந்த ‘கப்பலேறி போயாச்சு’ பாடலின் அத்தருணம்!

இவை எதுவும் இந்தியன் 2-வில் இல்லை.

மேக்கப் தொடங்கி, கமலின் குரல் வரை எல்லாவற்றிலும் அலட்சியம் விரவிக் கிடக்கிறது.

படம் வருதற்கு ஆன தாமதமா, கமலின் கால்ஷீட் குறைவாக இருந்ததாலா, பிற பாத்திரங்களை அதிக காட்சிகளுக்கு பயன்படுத்தியதா, படத்தை இரண்டாக பிரிக்க வேண்டுமென அவசர கதியில் எடுக்கப்பட்ட முடிவாலா எது காரணமென தெரியவில்லை. எதுவுமே இந்தியன் 2-வில் சரியில்லை.

காட்சிக் கோர்ப்பிலும் திரைக்கதையிலும் வசன நுட்பத்திலும் சுஜாதாவின் இழப்பு அப்பட்டமாக தெரிகிறது.

சேனாபதிக்கென முதல் படத்தில் வரலாறு, அரசியல், உடை, நடை என பார்த்து பார்த்து உருவாக்கப்பட்டிருந்த பாத்திர வார்ப்பு, இரண்டாம் படத்தில் துளியும் இல்லை. Unicycle-ல் ஓட்டவிட்டும், Yacht-ல் கொலை செய்ய விட்டும், Gravity இல்லாத வெளிக்குள் சுற்ற விட்டும், Selfie எடுத்து Live வீடியோ போடவிட்டும் சேனாபதி பாத்திரத்தை உருக்குலைத்திருக்கிறார்கள்.

இவற்றுக்கு பதிலாக, பேசாமல் சேனாபதியை கொன்றிருக்கலாம் இவர்கள்.

Come Back Indian என அழைக்கும் மக்களே Go Back Indian என இந்தியன் தாத்தாவை விரட்டுகிறார்கள் என்கிற one line எத்தனை அற்புதமான களம்? தத்துவமாகவும் கால மாற்றமாகவும் சிந்தனை மாற்றமாகவும் அணுகி எத்தனை அற்புதமாக விளையாடியிருக்கக் கூடிய களம்? எல்லாம் கோட்டை விடப்பட்டிருக்கிறது.

இதில் இந்த சித்தார்த் வேறு, விறைப்பாக தோளெல்லாம் இறுக்கிக் கொண்டு நடந்தால்தான் நேர்மையான பாத்திரம் என யாரோ சொல்லி விட்டார்கள் போல. நடிப்பும் அதிகம், பேச்சும் அதிகம்.

இந்தியன் தாத்தா, தற்காலச் சூழலுக்கான அரசியல் என சொல்வது சுத்த பேத்தலான அரசியல்.

சுஜாதா திருட்டுத்தன அரசியலை முன் வைத்தாலும் அந்த பாத்திர வார்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய சாமர்த்தியத்துடன்தான் அதை செய்வார். இத்தனை பேத்தலாக செய்திருக்க மாட்டார். நேதாஜியை பின்பற்றுபவர் வந்து ‘வீட்டை முதலில் சுத்தம் செய்ங்க’ என காந்தியம் பேசுவாரா? ‘Internet-ல போடுங்க… Hashtag போடுங்க’ என களப் போராட்டத்தை உதிர்த்து விட்டு பேசுவாரா? இந்தியன் 2-வில் சேனாபதி பேசுகிறார்.

India against corruption-க்கு பிறகு அன்னா ஹசாரே பேசும் வீரவசனம் எல்லாம் எத்தனை காமெடியாக தெரிந்ததோ அது போல இருக்கிறது சேனாபதி வசனங்கள். இதில் லேகியம் விற்பது போல, வர்மக்கலை விளக்கம் வேறு.

படத்தில் உருப்படியாக கிடைத்தது ஒரே ஒரு வசனம்தான். “தேர்தல்ங்கறது change-க்காக நடக்கறது கிடையாது; Exchange-காகத்தான் நடக்குது!” என ஒரு வசனம்!

அடுத்து இந்தியன் 3-ல் சேனாபதியின் அப்பா கதையை சொல்லப் போகிறார்களாம். சேனாபதிக்கே இன்னொரு பிளாஷ்பேக் வைத்து INA Trials-ம் அதற்குப் பின் நடந்த சுதந்திரப் போராட்டம் குறித்து எடுக்கலாம். கேட்க மாட்டார்களே!

வசனம் ஜெயமோகனாம். சார், வெண்முரசையே தொடர்ந்து எழுதுங்க சார். ப்ளீஸ்!

மொத்தத்தில் இந்தப் படம் இந்தியன் 1-ன் அற்புதத்தை நினைவூட்டி ஏங்க வைத்ததுதான் மிச்சம். அடுத்து இவர்கள் இந்தியன் 3 ரிலீஸ் செய்யாமல் இந்தியன் 1-ஐ ரீரிலீஸ் செய்தால் கூட ஓடும்.

எது எப்படியோ நான் இப்போது இந்தியன் 1 பார்க்கப் போகிறேன்!

RAJASANGEETHAN