ரஜினிக்கு ஒரு ரசிகன் கேள்வி: “எது புதிய இந்தியா? யாருக்கான புதிய இந்தியா? சொல்லு தலைவா?”

என் பள்ளி பருவத்தில் வீட்டிற்கு தெரியாமல், தாங்கள் நடித்த (ரஜினி) படத்திற்கு சென்று அப்பாவிடம் அடி வாங்கியபோது தங்கள் மீது இருந்த ஒரு முரட்டுத்தனமான அன்பு இப்போதும் என்னுள் உண்டு தலைவா!

பிரதமர்  500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாத அறிவிப்பினை வெளியிட்ட அடுத்த சில நிமிடங்களில் திரை உலகம் வாழ்த்துச் சொல்ல ஆரம்பித்தது. அதில் நீங்கள் ஒரு படி மேலே சென்று “புதிய இந்தியா பிறந்தது” என்று சொல்லி இருப்பதுதான் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. எது புதிய இந்தியா? யாருக்கான புதிய இந்தியா? சொல்லு தலைவா!

எது புதிய இந்தியா தலைவா?

வெளிநாடுகளில் இருந்து 85 லட்சம் கோடிகள் கருப்புப் பணத்தை மீட்டு அனைத்து இந்தியர்களுடைய  வங்கிக் கணக்கிலும்  பிரதமர் வரவு வைத்து விட்டாரா, என்ன? புதிய இந்தியா பிறந்தது என்கிறீர்கள். கார்பரேட்களின் வாரக்கடன் ஆறு லட்சம் கோடிகள் பெறப்பட்டு அல்லது பெற முடியாத பட்சத்தில் அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நீங்கள் கொடுத்த ஒரு கோடியுடன்  நாட்டின் நதிநீர் இணைப்புத் திட்டத்தை பிரதமர் முன்மொழித்தாரா என்ன?

புதிய இந்தியா பிறந்தது என்கிறீர்கள். 50 நாட்கள், 15 லட்சம் கோடிகள் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ஒரே இரவில் சாமானியனை, கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் முதல் தென்கோடி அண்ணாச்சி வரை, கடும் மன உளைச்சலுக்கு ஆட்படுத்தினாரே வளர்ச்சியின் நாயகன், அதனால் தான் புதிய இந்தியா பிறந்தது என்கிறீர்களா?

பண முதலைகள் எல்லாம் கருப்புப் பணத்தை வீட்டில் பதுங்கி வைத்திருப்பார்களா என்ன ரஜினி சார்? இது தேசாய்களின்  காலம் அல்ல, சுவிஸ் வங்கிகளின் காலமும் அல்ல, இது பனாமா வங்கிகளின் காலம். பிரதமர் பண முதலைகள் வசம் உள்ள தங்கம், கண்டெய்னர்கள், நிலம், பேங்க் லாக்கர் முதலீடுகள் அனைத்தையும் நாட்டுடைமை ஆக்கினாரா என்ன?

புதிய இந்தியா பிறந்தது என்கிறீர்கள். காவிரிப் பிரச்சனையில் இதயம் அற்றுப்போன மத்திய ஆட்சியாளர்களின் இதயம் காவேரி பாசன விவசாயிகளுக்காக துடிக்க ஆரம்பித்து விட்டதா என்ன?

புதிய இந்தியா பிறந்தது என்கிறீர்கள். அம்பானிகள் எல்லாம் தங்களிடம் உள்ள ரூ.500, ரூ.1000-ஐ எடுத்துக்கொண்டு இன்று கால் கடுக்க வரிசையில் நின்று பணம் பெற்று வருகிறார்களே, அதை தான் புதிய இந்தியா பிறந்தது என்கிறீர்களா? குறைந்தபட்சம் நாட்டில் அனைவருக்கும் வங்கி கணக்கு, ஆதார் எண், பான் எண்னை  உறுதி செய்துவிட்டு திட்டத்தை அறிவித்து உள்ளாரா பிரதமர்?

புதிய இந்தியா பிறந்தது என்கிறீர்கள்? திரை உலகின்  உச்ச நட்சத்திரங்கள் (நீ இல்லை தலைவா), கடவுள் பாதி மிருகம் பாதி போல பாதி பிளாக் பாதி ஒயிட் பெறுகிறார்கள். அந்த கருப்புப் பணம் முழுவதும் (மதுரை செல்லூர் சினிமா பினான்சியர்கள் மற்றும் உங்களின் பாலிவுட் நண்பர்கள் உட்பட அனைவரது கருப்புப் பணமும்) அரசால் பறிமுதல் செய்யப்பட்டு விட்டதா என்ன?

யாரை திருப்திப்படுத்த பழைய இந்தியா, புதிய இந்தியா என்று உளறுகிறாய் தலைவா?

பிரதமர்கள் வருவார்கள், போவார்கள். தேசம் இதுவரை 14 பிரதமர்களை கண்டு இருக்கிறது. ஆனால் தேசம் கண்ட ஒரே சூப்பர் ஸ்டார் நீ தான் தலைவா !

உங்கள் படத்திற்கு (தளபதி) டிக்கெட் வாங்க காலையிலே 6 மணிக்கு வரிசையில் நின்றபோது,  ஒரு ரசிகனாக எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. நேற்று நானும் என் வயதான தகப்பனாரும் 4000 ரூபாய்க்காக 3 மணி நேரம் நின்றது எரிச்சலை தந்தது தலைவா.

நீ சினிமாவில் என்ன வசனம் வேண்டுமானாலும் பேசு தலைவா, நாங்கள் ரசிப்போம் ஆனால் பொது தளங்களில் பேசும்போது ஒரு சாமானியனாய் கேள்விகள் கேட்போம். அளந்து பேசுங்கள். நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள் எல்லாம் பேசுவதற்கு வல்லுநர்கள் இருக்கிறார்கள். புதிய இந்தியா பற்றி எல்லாம் நீஙகள் பேச வேண்டாம். நிறைவாக பேசுங்கள்.

திரையில் மட்டும் அல்ல, நினைவிலும் நீ தான் ஹீரோ என்று நினைக்கிறேன் தலைவா!

– இரா. காஜா பந்தா நவாஸ்