சில சொற்ப பிழைகள் இருப்பினும் ’கங்குவா’ திரையரங்குகளில் கொண்டாட வேண்டிய திரைப்படம் தான்!

கங்குவா உண்மையில் எப்படியான படம்:
குறிஞ்சித் திணையை 3D காட்சி அமைப்புடன் இருந்த இடத்திலிருந்தே மெய்மறந்து ரசித்தால் எவ்வளவு இனிமையாக இருக்கும்! அப்படியான உணர்வைக் கொடுத்திருக்கிறது கங்குவா! குறிஞ்சித் தேன் சுவையை, நாமொட்டுகளில் அல்லாமல் கண்களுக்குள் காட்சிச் சுவையைப் படரவிட்டிருக்கிறது கங்குவா! காடுகளையும் காடுகள் சார்ந்த இடங்களையும் திரையில் ரசிக்க விரும்புபவர்களுக்குக் கங்குவா ஒரு விருந்து தான்!
சில திரைப்படங்களை Theatrical experienceகாகவே திரையரங்குகளில் பார்ப்பது கட்டாயம். ‘லப்பர் பந்து’ போன்ற திரைப்படங்களை ரசிகர்களின் ஆரவாரத்துடன் பார்த்து ரசிப்பது ஒரு வகை! கங்குவா போன்ற திரைப்படங்கள் காட்சி அமைப்பிறக்கவும், அதன் ஒலி வடிவத்திற்காகவும் திரையரங்குகளில் தவறாமல் பார்க்க வேண்டிய ரகம்!
தீவுகளின் அழகை வெவ்வேறு வடிவங்களில் காலச்சூழல்களில் அழகாகக் காட்டியிருக்கிறார்கள்! பனி சூழந்த காட்டில் நடக்கும் பெண் போர் அட்டகாசம்! பெருங்கடலில் கப்பல்கள் மிதக்கும் போது கிடைக்கும் இரவின் நிழல் பேரழகு! CGI என்று ஸ்கீரினில் தெரிவிக்கப்பட்ட முதலை சண்டைக் காட்சி தத்ரூபம்!
நிறைய மெனக்கெட்டிருக்கிறார்கள்!
திரைப்படங்களை அதிகம் ரசிபப்தால், சிறு வயது முதலே படம் பார்ப்பதற்கு முன்பு யாருடைய திரைப்பட விமர்சனங்களையும் நிச்சயம் கேட்கவே மாட்டேன்! ஒரு திரைப்படத்தை ரசிப்பதென்பது அவரவர் வாழ்க்கையை அவரவர் அனுபவிப்பதைப் போல! நாம் எப்படி வாழ்க்கை உள்வாங்கிக்கொள்கிறோம் என்பதில் தான் அதன் ரசனை இருக்கிறது. ‘நான் என் வாழ்வை ரசிப்பதைப் போலத் தான் நீயும் உன் வாழ்வையும் ரசிக்க வேண்டும்…’ என்று உங்களிடம் ஒருவர் கூறினால், நமக்கு அவர் மீது எவ்வளவு வெறுப்பு ஏற்படுமோ அப்படித்தான திரை விமர்சகர்களையும் நான் பார்க்கிறேன்!
கங்குவா படத்திற்கு இவ்வளவு நெகடிவ் விமர்சனங்களை எதிர்பார்க்கவில்லை! ‘படம் சுத்தமா நல்லாவே இல்லை…’ என சமூக வலைத்தள முழக்கங்கள், எனது செவித் திரைகளிலிருந்து குருதியை வரவழைத்த பிறகு நேற்று இரவு தான் கங்குவாவைப் பார்த்தேன்! வெளியில் பேசிக்கொள்வதைப் போல, தேவி ஸ்ரீபிரசாத்தின் இசை காதுகளுக்கான இரைச்சல் இல்லை! காட்சி அமைப்புக்குத் தேவையான… தேவைப்படும் இசை தான்!
போர்க்காட்சிகளில் ஆக்ரோஷமான இசையைக் கொடுக்காமல், மெலொடியா வாசித்துக்கொண்டிருக்க முடியும்! மேலும் பழங்குடியினரின் வீரத்தையும் தன்மானத்தையும் காட்டும் போது அப்படியான இசை திரைப்படத்திற்கு நிச்சயம் தேவை தான்!
எவ்வளவோ இரைச்சலுடன் கூடிய ஆங்கிலப் படங்களை ‘Wow awesome theatrical Sound experience’ என்று ரசித்த நாம், தமிழில் இப்படியான ஒரு திரைப்படத்தை இவ்வளவு தூற்றுவது சரியில்லை! பல இடங்களில் காட்சிக்கான BGM பட்டையைக் கிளப்புகிறது. கேமிரா கோணத்தை 3D பார்வையில் தூரத்தில் இருந்து பக்கத்தில் போகும் போது ஒவ்வொரு தருணத்திலும் இசையை வேறு விதத்தில் கொணர்ந்திருக்கிறார் தேவி ஸ்ரீபிரசாத்! கூர்மையாகப் படத்தைக் கவனித்துப் பாருங்கள்… இசை இத்திரைப்படத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பது உங்களுக்குப் புரியும்!
வெளியில் பேசிக்கொள்வதைப் போல பெரிய சொதப்பல் எல்லாம் படத்தில் இல்லை. சில சொற்பப் பிழைகள் இருப்பினும் இது திரையரங்குகளில் கொண்டாட வேண்டிய திரைப்படம் தான்! தொடக்கத்தில் கோவா பகுதி காட்சிகளைக் கொஞ்சம் கூர்மைப்படுத்திக்கொண்டால், அந்தக் குறையும் மறைந்துவிடும்! ஆனால் முழுமையான கதைக்குக் கோவா காட்சிகளும் தேவை தான் என படத்தை ரசிப்பவர்களுக்குப் புரியும்.
சூரியாவின் நடிப்பு அட்டகாசம்! பழங்குடி வீரனுக்கு உரிய உடல்மொழியும், சிறுவனிடம் காட்டும் முகபாவனைகளும், சண்டைக்காட்சிகளில் முகத் தசைகளின் துடிப்பும் என அதகளப்படுத்தி இருக்கிறார் சூர்யா! சண்டைக்காட்சிகள் அனைத்தும் அருமையான வடிவமைப்பு! காடு தான்… அக்காட்டின் வெவ்வேறு பரிமாணங்களை வெவ்வேறு சண்டைக்காட்சியுடன் நமக்குக் கடத்தியிருப்பது மிகச் சிறப்பு!
பழங்குடியினர் பேசும் மொழியும், ஆயுதங்களும், இனக்குழுக்களை வித்தியாசப்படுத்த காட்டிய சில நுணுக்கமான விஷயங்களுக்குப் பின் நல்ல உழைப்பு இருக்கிறது! ‘சிறுத்தை சிவாவின் திரைக்கதையே சரியில்லை…’ எனும் பொய்யான பரப்புரையையும் நம்ப வேண்டாம்! சிறப்பாகவே திரைப்படத்துக்குக் கட்டமைப்பைக் கொடுத்திருக்கிறார் சிவா. சிறுவனின் நடிப்பும் அருமை!
நாவல்களைப் படிக்கும் போது நமது மனக்கண்ணில் காட்சிகள் விரியுமல்லவா, அப்படியான காட்சிக்கடத்தலைப் பார்வையளர்களுக்குப் பரிசளித்திருக்கிறது இந்த Novel முயற்சி! இரண்டாம் பாகத்துக்காக காத்திருக்கிறேன்… மீண்டும் ஒரு முறை கூட மகளுடன் செல்லலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன்!
ஆயிரத்தில் ஒருவனையும், அன்பே சிவம் திரைப்படத்தையும் வெளியான காலங்களில் கொண்டாடத் தவறியதோடு தூற்றவும் செய்துவிட்டு, பிறகு ‘Cult movies’ என சப்பைக்கட்டு கட்டும் நபர்களின் விமர்சனங்களுக்குச் செவி மடுக்காமல், திரையரங்குகளில் குடும்பத்தோடு கட்டாயம் பாருங்கள்! OTTயில் பார்த்துக்கொள்ளலாம் என்று காத்திருந்தால், திரையரங்கத்தில் பார்த்திருக்கலாமே என்று நிச்சயம் வருத்தப்படுவீர்கள்!
கங்குவா… உண்மையில் நெருப்பு தான்!…
–மருத்துவர் வி.விக்ரம்குமார் MD(S)