தமிழ் திரையுலகில் ஹீரோவாக அடியெடுத்து வைக்கும் இன்னொரு சூர்யா!
தமிழ் திரையுலகில் ஏற்கெனவே இரண்டு சூர்யாக்கள் பிரபலமாக இருக்கிறார்கள். ஒருவர் பிரபலமான நடிகர் சூர்யா (நடிகர் சிவகுமாரின் மகன்). இன்னொருவர் வெற்றிப்பட இயக்குனரும் முன்னணி நடிகருமான எஸ்.ஜே.சூர்யா. இவர்கள் தவிர தற்போது இன்னொரு சூர்யா தமிழ் திரையுலகுக்குள் அடியெடுத்து வைக்கிறார். அவர் ஏ.எல்.சூர்யா.
யூடியூபில் மிகவும் பாப்புலரானவர் இந்த ஏ.எல்.சூர்யா. ‘பி பாசிட்டிவ்’ என்ற யூடியூப் சேனல் மூலம் மக்களுக்கு வெற்றிக்கு வழி காட்டும் சுமார் 200 தன்னம்பிக்கை உரைகளை இவர் நிகழ்த்தியிருக்கிறார். உள்நாட்டினர் மட்டுமின்றி, வெளிநாட்டில் உள்ளவர்களும் லட்சக்கணக்கில் இவரை பின்தொடர்கிறார்கள். பலன் அடைகிறார்கள்.
“வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு பணம் அல்ல, மனம் தான் தேவை” என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கும் ஏ.எல்.சூர்யா, ‘ஆழ்மனமும் அதன் அபரிமித ரகசியங்களும்’, கோடிக்கணக்கான ரூபாயை ஆழ்மனதை இயக்கி அடைவது எப்படி’, ‘பேராற்றல் படைத்தவர்களே எழுந்திருங்கள்’, ‘பணமே பணமே ஓடோடி வா’, என்பன போன்ற சுயவளர்ச்சிக்கான நூல்களையும் எழுதியிருக்கிறார்.
தமிழ் திரையுலக பிரபலங்கள் பலருடன் பல ஆண்டுகளாக நெருக்கமான தொடர்பில் இருந்து வருபவர் ஏ.எல்.சூர்யா. அந்த பிரபலங்களோடு தனக்கு ஏற்பட்ட இனிமையான, கசப்பான, சுவாரஸ்யமான அனுபவங்களை அவர் கற்பனை கலந்து ‘அனிதா பத்மா பிருந்தா’ என்ற தலைப்பில் நாவலாக எழுதியிருக்கிறார்.
560 பக்கங்கள் கொண்ட இந்த நாவலை அவரே தனது ’பீ பாஸிட்டிவ்’ நிறுவனத்தின் மூலம் வெளியிட்டிருக்கிறார். பரபரப்பாக விற்பனையாகி வரும் இந்த நாவலை இப்போது திரைப்படமாக எடுக்கவும் தயாராகிவிட்டார். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம், தயாரிப்பு என்று அனைத்து முக்கியப் பொறுப்புகளையும் ஏற்றிருப்பதோடு அவரே இதில் ஹீரோவாகவும் நடிக்க இருக்கிறார்.
“ஹீரோ ஆகும் ஆசை வந்தது எப்படி?” என்று கேட்டால், “இது என் ஆசை இல்லை. பிரபஞ்சம் எனக்கு இட்ட கட்டளை” என்கிறார். இது பற்றி அவரே விளக்குகிறார்: “பின்னால் நடக்கவிருப்பது முன்கூட்டியே எனக்கு இண்ட்யூஷனாக – உள்ளுணர்வாக – கனவாக தெரிந்துவிடும். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாத காலத்தில் ஒருநாள் கனவில் நான் கேமராமுன் ஒளிவெள்ளத்தில் நடித்துக்கொண்டிருப்பதாக ஒரு காட்சி தோன்றியது. இது பிரபஞ்சத்தின் கட்டளை; பின்னாளில் நடக்கப்போகும் ஒன்றின் முன்கூட்டிய வெளிப்பாடு என்பது எனக்குத் தெரியுமாதலால் நானே ஹீரோவாக நடிக்க தீர்மானித்துவிட்டேன்” என்கிறார்.
எப்படியோ, அந்த பிரபஞ்ச சக்தி வெற்றிப்பட நாயகனாக ஏ.எல்.சூர்யாவை உயர்த்தினால் சரி.