“எனக்கு பேய் என்றாலே ரொம்ப பயம்”: பேய் படம் தயாரிக்கும் இயக்குனர் அட்லீ பேச்சு!
‘ராஜா ராணி’, ‘தெறி’ வெற்றிப் படங்களுக்கு பிறகு விஜய்யை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் அட்லீ. தீபாவளி வெளியீடு என அறிவித்துவிட்டு பரபரப்பாக படப்பிடிப்பு பணிகளில் இருந்த அட்லீ, திடீரென செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
“கடந்த 6 வருடங்களாக என் இயக்குனர் பயணத்தில் சகோதரனாக, குடும்பத்தில் ஒருவராக என்னை ஆதரித்த, என்னை ஆளாக்கிய பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி. உதவி இயக்குனராக இருந்த எனக்கு முதல் பட வாய்ப்பை அளித்த ஏ.ஆர்.முருகதாஸ் மாதிரி, தன் உதவியாளர்களுக்கு முதல் வாய்ப்பைக் கொடுத்து வளர்த்து விடும் என் குருநாதர் ஷங்கர் மாதிரி, நான் வளர்ந்த சினிமாவுக்கு நானும் ஒரு பங்காக இருந்து நல்ல கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட பட நிறுவனம் தான் ‘ஏ ஃபார் ஆப்பிள்’.
எனது நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தில் கமல்ஹாசனின் உதவியாளரான என் நண்பன் ஐக்-ஐ ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தின் கதையைக் கேட்டு அறிமுகப்படுத்துகிறேன். ஐக் எம்.ஆர்.ராதவின் பேரன், ரொம்ப திறமைசாலி. எனக்கு பேய் என்றாலே ரொம்ப பயம். அவர் பேய் கதையை வந்து சொன்ன உடனே தயாரிக்க முடிவெடுத்து விட்டேன்.
அடுத்து என் நண்பனும், என்னுடன் 10 ஆண்டுகளாக பயணித்து வருபவனுமான சூர்யா பாலகுமாரன் இயக்கும் படத்தை இரண்டாவது தயாரிப்பாகவும், என் டீமில் சிறந்த திரைக்கதையாளனாக இருக்கும் அசோக் இயக்கும் படத்தை மூன்றாவது தயாரிப்பாகவும் தயாரிக்க இருக்கிறேன். இந்த இரண்டு படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் மாதம் வெளியிடப்படும்.
நான் இயக்கும் ‘தளபதி 61’ படவேலைகள் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது” என்றார் அட்லீ.