திரையரங்கு கட்டணம் ரூ.300 வரை உயரும் அபாயம்! ஆதாயம், பாதிப்பு யார் யாருக்கு?

திரை அரங்குகளில் நுழைவுக் கட்டணம் ரூ.300 வரை உயரும் என தோன்றுகிறது. நகரங்களில் சத்யம் போன்ற திரை அரங்குகளில் இந்த கட்டணம் செலுத்த மக்களுக்கு தயக்கம் இருக்காது. குறிப்பாக, முதல் வாரம் உச்சநட்சத்திரம் நடித்த திரைப்படம் வெளிவரும்போது, போதைக்கடைக்கு ஏங்கும் திருவாளர் குடிமகனைப்போலத் தான் ரசிகர்களில் பலரது மனப்பான்மையும். எனவே விலை ஏற்றத்தால் உச்சநட்சத்திரம் மற்றும் உயர்ரக திரை அரங்குகள் உள்ள வளாகத்திற்கு பிரச்சனை இல்லை ..

இந்த விலை உயர்வைப் பயன்படுத்தி, இதே முதல் நாள் முதல் காட்சி போதையைப் பயன்படுத்தி, ரசிகர்களை சுரண்டப்போகும் மட்டமான திரை அரங்குகளும், அந்த அறுவடைக்கு காத்திருக்கும் திரை உலகமும்தான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

இதே நேரத்தில் இந்த கட்டண உயர்வை சாதிக்க திரை அரங்கு உரிமையாளர்கள் கூட்டமைப்பு தேர்ந்தெடுத்த பாதை நீதி மன்றமும் சட்டமும்தான. இதே வழியைப் பயன்படுத்தி திரைப்பட ரசிகர்கள் என்னும் நுகர்வோர், திரை அரங்குகளில் வசூலிக்கும் வாகன நிறுத்த கட்டணம், அசுரக் கொள்ளை அடிக்கும் பாப்கார்ன், பகல் கொள்ளை அடிக்கும் குடிநீர், எம்ஆர்பி என்கிற வார்த்தை தோற்றுப்போகும் பல வகை உணவுப் பொட்டலங்கள், வியாதிக்கு வழி வகுக்கும் கழிப்பிடங்கள், ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் சுற்றுச்சூழல் அமைப்புகள், ஆபத்துக்கு வெளியே வர முடியாத அவசர வழிகள் ( சினிமாட்டோகிரோஃப் சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் பல திரை அரங்குகள் மூடப்படும்)… போன்ற பல விஷயங்களுக்கு தீர்வு காண முடியும்.

தேவை ஒரு நல்ல வக்கீல், ஒரு சேவை மனப்பான்மை உள்ள ஒரு திரைப்பட ரசிகர், அவருக்கு ஆதரவு தரும் ஒரு பொதுநல அமைப்பு.

இப்படி எதுவும் நடக்காமல் 300 க்கும் 350க்கும் டிக்கட் விற்றால் நிகழக்கூடிய ஆபத்துகளில் முக்கியமானது –

உயரப்போகும் உச்சநட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பளம், பாதாளத்திற்கு விழப் போகும் தயாரிப்பாளர்களின் – முதலீட்டாளர்களின் நஷ்டம்…!

– வெங்கட் சுபா

தமிழ் திரைத்துறை