சிவகார்த்திகேயன் பிரச்சனை: ரஜினி, கமலுடன் கலந்தாலோசிக்க நடிகர் சங்கம் முடிவு!
நடிகர் சிவகார்த்திகேயன் பிரச்சனை தொடர்பாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அனைவரிடமும் கலந்து ஆலோசித்து பொதுவான ஒரு முடிவு எடுக்க நடிகர் சங்கம் திட்டமிட்டுள்ளது.
‘ரெமோ’ படத்தின் நன்றி விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், “நான் உங்களிடம் உதவிகள் கேட்கவில்லை. எங்களை வேலை செய்ய விடுங்கள் என்று தான் கேட்கிறேன்” என்று கண்ணீர் மல்க கூறினார்.
சிவகார்த்திகேயனின் இந்த உருக்கமான பேச்சு, திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நடிகர் சங்க செயலாளர் விஷால் மற்றும் சிம்பு உள்ளிட்ட பல நடிகர்கள் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். அப்போது, கட்டப்பஞ்சாயத்தால் முன்னர் தானும் பாதிக்கப்பட்டதாக கூறினார் விஷால்.
விஷாலின் இந்த கூற்றுக்கு, பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். “கட்டப்பஞ்சாயத்து’ என்று சொல்வது மிகவும் தவறு. படங்கள் வெளியாக எங்களால் முடிந்த அளவுக்கு பேச்சுவார்த்தை நடத்துகிறோம். யாரையும் நாங்கள் மிரட்டவில்லை” என்று அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், இப்பிரச்சனை குறித்து நடிகர் சங்க நிர்வாகிகள் வட்டாரம் கூறுகையில், “சிவகார்த்திகேயன் பிரச்சனை குறித்து புகார் வந்துள்ளது. இதற்கு நிரந்தரத் தீர்வு காண திட்டமிட்டு இருக்கிறோம். இது தொடர்பாக அனைத்து நடிகர்களுடன் கலந்து பேசி பொதுவான ஒரு திட்டம் வகுக்க இருக்கிறோம். இப்பேச்சுவார்த்தையில் ரஜினி, கமல் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களின் கருத்துக்களும் இடம்பெறும். எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் எழாத வகையில் தான் எங்களுடைய திட்டம் இருக்கும். இப்போதைக்கு மட்டும் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எங்களுடைய பேச்சுவார்த்தை இருக்காது” என்றது.
மேலும், நவம்பர் 27ஆம் தேதி நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற இருக்கிறது. அதற்குமுன் இப்பேச்சுவார்த்தை முடிக்கப்பட்டு, பொதுக்குழுவில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.