“சிப்பெட் நிறுவனத்தை டெல்லிக்கு மாற்றுவது ஏற்புடையது அல்ல”: மோடிக்கு கருணாநிதி கடிதம்
சென்னை கிண்டியில் இயங்கிவரும் சிப்பெட் நிறுவனத்தின் தலைமையகத்தை டெல்லிக்கு மாற்றும் முடிவைத் திரும்பப் பெறுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
சென்னை கிண்டியில் உள்ள சிப்பெட் நிறுவனத்தின் தலைமையகத்தை டெல்லிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த முடிவானது தமிழக மக்கள் மத்தியில், குறிப்பாக தொழிற் சங்கங்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய அரசின் இந்த முடிவின் பின்னணியில் தர்க்கரீதியாக ஏற்புடைய காரணம் ஏதும் இல்லை.
மத்திய அரசின் ரசாயனம் மற்றும் உரத்தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் சென்னை கிண்டியில் இயங்கி வரும் மத்திய பிளாஸ்டிக் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனமான சிப்பெட் 1968-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
பிளாஸ்டிக் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் கல்வி மையமாகத் திகழும் சிப்பெட், உலகளாவிய நிறுவனங்களுக்கு இணையாக வளர்ச்சி பெற்றுள்ளது. உற்பத்தித் தொழில்துறையில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளதாக செயல்படுகிறது.
இந்நிறுவனம் தொடர்ந்து லாபத்தில் இயங்கி வருகிறது. இதன் காரணமாகவே சென்னையில் உள்ள இந்த மையத்தின் தலைமை அலுவலகம் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை கிண்டியில் இயங்கிவரும் சிப்பெட் நிறுவனத்தின் தலைமையகத்தை டெல்லிக்கு மாற்ற முயற்சிப்பது ஏற்புடையது அல்ல.
இதற்கு முந்தைய காலகட்டத்தில், மத்தியில் பாஜக ஆட்சியில் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நான் தமிழக முதல்வராக இருந்தேன்.
அப்போதும் இதேபோல் சிப்பெட் மையத்தை டெல்லிக்கு மாற்றுவது தொடர்பாக பேசப்பட்டது. ஆனால், நான் அந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அப்போதைய பிரதமர் வாஜ்பாய்க்கு கடிதம் எழுதினேன். அதற்கு அப்போதைய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, சிப்பெட் மாற்றப்படாது என உறுதியளித்து பதில் கடிதம் அனுப்பியிருந்தார்.
அதுபோலவே, இப்போதும் இப்பிரச்சினையில், பிரதமராகிய தாங்கள் தலையிட்டு சென்னை கிண்டியில் இயங்கிவரும் சிப்பெட் நிறுவனத்தின் தலைமையகத்தை டெல்லிக்கு மாற்றும் முடிவைத் திரும்பப்பெற வேண்டும். தங்களின் நேர்மறையான முடிவுக்கு என்றும் நன்றியுடன் இருப்பேன்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் கருணாநிதி கூறியுள்ளார்.