ஜெயலலிதாவுக்கு சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை?
ஆசியாவிலேயே மிகச் சிறந்த தனியார் மருத்துவமனை என சொல்லப்படுவது சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை. சில ஆண்டுகளுக்குமுன் நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை மோசமடைந்தபோது, இந்த மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டு, பூரண குணம் அடைந்தார். இந்த மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர்கள் குழுவினர், தற்போது சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. எனினும், இதை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் உறுதிப்படுத்தவில்லை.
இது குறித்து tamil.thehindu.com வெளியிட்டுள்ள செய்தி:
முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதை அடுத்து, கடந்த மாதம் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாச உதவியுடன் நுரையீரல் சிகிச்சை, நோய் தொற்றுக்கான மருந்துகள், எதிர்ப்பு சக்தி மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. ஊட்டச்சத்து, பிசியோதெரபி சிகிச்சைகளும் தொடர்ந்து அளிக்கப்படுகின்றன.
முதல்வரின் உடல்நிலையை அப்போலோ மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையில், 3வது முறையாக சென்னை வந்துள்ள லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நுரையீரல் சிகிச்சை நிபுணர் ஜி.கிலானி, மயக்க மருத்துவ நிபுணர் அஞ்சன் த்ரிக்கா, இதய சிகிச்சை நிபுணர் நிதிஷ் நாயக் ஆகியோர் கொண்ட குழுவினரும் முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
நேற்று மாலை 6.15 மணி அளவில் எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினர் மருத்துவமனைக்குள் சென்றனர். முதல்வரின் உடல்நிலையை பரிசோதனை செய்த அவர்கள், அடுத்தகட்ட சிகிச்சைகள் குறித்து டாக்டர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். மாலை 6.45 மணி அளவில் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டனர்.
மேலும், சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையின் டாக்டர்கள் குழுவினர் முதல்வருக்கு பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதை மருத்துவமனை நிர்வாகம் உறுதிப்படுத்தவில்லை. தொடர் சிகிச்சையில், முதல்வரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முதல்வரின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து அப்போலோ மருத்துவமனை தரப்பில் கடந்த 10-ம் தேதி செய்திக்குறிப்பு வெளியிட்டது. அதன்பிறகு எந்த தகவலும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.