“மூலிகை பெட்ரோல்” மோசடி: ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டுகள் சிறை!
“மூலிகை பெட்ரோல்”தயாரிப்பதாக கூறி பொதுமக்கள் பலரிடம் ரூ.2.27 கோடி வசூல் செய்து மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், ராமர் பிள்ளை உள்ளிட்ட 5 பேருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து எழும்பூர் சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த ராமர் பிள்ளை கடந்த 1999ஆம் ஆண்டு “மூலிகை மூலம் பெட்ரோல் தயாரிக்கும் முறை”யை கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தியா முழுவதும் இந்த செய்தி அதிர்வலைகளை கிளப்பியது. கூடவே, மூலிகை மூலம் பெட்ரோல் தயாரிக்க முடியுமா என்ற சந்தேகமும் ஏற்பட்டது.
ஆனால், தனது புதிய கண்டுபிடிப்பை எந்த அதிகாரிகள் முன்னிலையிலும் செய்துகாட்டி நிரூபிக்கத் தயார் என்று ராமர் பிள்ளை அறிவித்தார். அதன்படி ஐ.ஐ.டி விஞ்ஞானிகள் முன்னால் செய்தும் காட்டினார். ஆனால், அதை விஞ்ஞானிகள் நம்ப மறுத்தனர். மூலிகையில் இருந்து பெட்ரோல் தயாரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் அறவே இல்லை என்று அவர்கள் தெரிவித்து விட்டனர்.
இதனால் ராமர் பிள்ளை தனது கண்டுபிடிப்பை “மூலிகை எரிபொருள்” என்று பெயர் மாற்றம் செய்து விற்பனையில் இறங்கினார். அதற்காக சென்னையில் 15 விற்பனை நிலையங்களையும் துவக்கினார். முன்பணம் பெற்றுக்கொண்டு விற்பனை ஏஜெண்டுகளை நியமித்தார். ஆனால், அவரால் விற்பனை செய்யப்பட்ட எரிபொருளை பயன்படுத்திய பெரும்பாலான வாகனங்கள் பழுதாகின. இது தொடர்பான புகாரை அடுத்து சிபிஐ மேற்கொண்ட அதிரடி சோதனையில் ராமர் பிள்ளை கைது செய்யப்பட்டார்.
சாதாரண பெட்ரோலில் கலப்படம் செய்து “ராமர் பெட்ரோல்” என்ற பெயரில் விற்பனை செய்ததாக ராமர் பிள்ளை உள்ளிட்ட 5 பேர் மீது எழும்பூர் சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அத்துடன் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதாக கூறி பொதுமக்கள் பலரிடம் ரூ.2.27 கோடி மோசடி செய்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை எழும்பூர் சிபிஐ நீதிமன்றம் இன்று ராமர் பிள்ளை உள்ளிட்ட 5 பேருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது..