அப்போலோவில் செய்தியாளர்களை சந்திக்காமல் அருண் ஜேட்லி, அமித் ஷா ஓட்டம்!
கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி இரவு காய்ச்சல் மற்றும் நீர்ச் சத்து குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அப்போலோ மருத்துவர்கள், எய்ம்ஸ் மருத்துவர்கள், லண்டன் மருத்துவர் ரிச்சர்டு ஆகியோர் கடந்த 22 நாட்களாக தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாது, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன், அம்மாநில ஆளுநர் சதாசிவம் போன்ற தலைவர்களும் அப்போலோ மருத்துவமனைக்கு நேரில் வந்து, ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து சென்றுள்ளார்கள்.
அப்போலோவுக்கு ராகுல் காந்தி வந்து சென்ற நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து ஜெயலலிதாவின் உடல் நலம் பற்றி கேட்டறியாதது ஏன்? என்ற கேள்வி எழுந்தது.
இதனால், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகிய இருவரும் இன்று சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு வந்து மருத்துவர்களிடமும், அதிமுகவின் மூத்த தலைவர்களிடமும் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.
அருண் ஜேட்லியிடமும், அமித் ஷாவிடமும், காவிரி விவகாரத்தில் கர்நாடக பா.ஜ.க.வினர் வன்முறை வெறியாட்டம் நடத்தியது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுப்பது, ரூ.570 கோடியுடன் கண்டெய்னர்கள் பிடிபட்டது, தமிழகத்தில் ஆளுநர் ஆட்சியையும், ராணுவ சட்டத்தையும் அமல் செய்ய வேண்டும் என்று தமிழின பகைவன் சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்தது உள்ளிட்ட பல பிரச்சனைகள் குறித்து கேள்வி கேட்பதற்காக ஏராளமான செய்தியாளர்கள் அப்போலோ மருத்துவமனை வாசலில் குழுமி இருந்தார்கள்.
செய்தியாளர்களை சந்தித்தால் சிக்கல் என எண்ணிய அருண் ஜேட்லியும், அமித் ஷாவும், மருத்துவமனையைவிட்டு வெளியே வந்ததும், செய்தியாளர்களைச் சந்திக்காமல் விருட்டென கிளம்பிச் சென்றுவிட்டனர்.