‘ஹிப்ஹாப் தமிழா’ நாயகனாக அறிமுகமாகும் படம் ‘மீசைய முறுக்கு’!
ஆரம்பத்தில் தனி இசை ஆல்பம் மூலம் உலகெங்கும் வாழும் தமிழ் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி. பின்னர் இவர் சுந்தர்.சி இயக்கத்தில், விஷால் நடிப்பில் வெளியான ‘ஆம்பள’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆனார்.
அதனை தொடர்ந்து ‘தனி ஒருவன்’, ‘அரண்மனை 2’, ‘கதகளி’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அத்துடன், தனிப்பட்ட முறையில் ஜல்லிக்கட்டை ஆதரித்து அற்புதமான தனி இசை ஆல்பம் ஒன்றை தயாரித்து வெளியிட்டு, பாராட்டுக்களை அள்ளிக் குவித்தார்.
தற்போது அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி தயாரிக்கும் படத்தில் நாயகனாக அறிமுகமாவதோடு, இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை மற்றும் பாடல்கள் என முக்கிய பொறுப்புகளையும் ஏற்றியிருக்கிறார் ஹிப்ஹாப்’ தமிழா ஆதி. இப்படத்துக்கு ‘மீசைய முறுக்கு’ என பெயர் வைத்துள்ளார்கள்.
‘மீசைய முறுக்கு’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்க இருக்கிறது படக்குழு.