“அத்தையை பார்க்க அனுமதி இல்லை”: ஜெயலலிதா அண்ணன் மகள் கண்ணீர்!
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு ஏற்பட்டு, கடந்த (செப்டம்பர்) மாதம் 22ஆம் தேதி முதல் சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 15 நாட்களாக அவருடன் சசிகலா, இளவரசி ஆகியோர் மட்டுமே இருந்துவருகிறார்கள்.
ஜெயலலிதாவை நேரில் பார்க்க வெளியார் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் மட்டும் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருக்கும் வார்டு வரை போய் வந்திருக்கிறார்.
ஆனால், சசிகலா, இளவரசி ஆகியோரின் உறவினர்களான மன்னார்குடி சொந்தங்களுக்கு இந்த தடையெல்லாம் இல்லை. அவர்கள் கடந்த செவ்வாயன்று குடும்பம் குடும்பமாக அப்போலோ மருத்துவமனைக்கு வந்து ஜெயலலிதாவைப் பார்த்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் ரத்த சொந்தங்கள் அவரை பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாடு எழுந்துள்ளது.
ஜெயலலிதாவின் உடன்பிறந்த சொந்த அண்ணன் ஜெயகுமாரின் மகள் தீபா. இவர் சென்னை தியாகராயர் நகரில் வசித்து வருகிறார். ஆங்கில இலக்கியம் மற்றும் இதழியல் படித்துள்ளார். இவரது சகோதரர் தீபக், எம்.பி.ஏ முடித்துவிட்டு, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தீபா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
என் மீது எனது அத்தைக்கு அளவு கடந்த பாசம் உள்ளது. அவரது கையைப் பிடித்து, ‘உங்களுக்கு ஒன்றும் ஆகாது. நீங்கள் விரைவில் குணமடைந்து விடுவீர்கள்’ என்று கூற நான் ஆசைப்படுகிறேன். ஆனால், அவரை பார்க்க என்னை யாரும் அனுமதிக்கவில்லை.
எனது அத்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட விஷயத்தை நான் பத்திரிகை வாயிலாகத் தான் தெரிந்துகொண்டேன். தெரிந்த பின்னர் தினமும் தொடர்ந்து மூன்று நாட்கள் அப்போலோ மருத்துவமனை வாயிலுக்குச் சென்று நின்றுகொண்டிருந்தேன். அனுமதி கேட்டேன். ஆனால், அத்தையைப் பார்க்க என்னை அனுமதிக்கவில்லை. அங்கு இருந்தவர்களும் நான் யாரோ என்று நினைத்துக்கொண்டனர்.
”என்னை உள்ளே விட்டால் தான் நான் இந்த இடத்தை விட்டுப் போவேன். இல்லையென்றால் போக மாட்டேன்” என்று கூறி நின்றுகொண்டேயிருந்தேன். அப்படி கூறியும், என்னை அனுமதிக்கவில்லை. என்னை உயர்அதிகாரிகள் தொடர்பு கொள்வார்கள் என்று கூறினார்கள். ஆனால், இதுவரை யாரும் என்னை அழைக்கவில்லை.
எங்களுடைய அப்பா (ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார்) கடந்த 1995ஆம் ஆண்டு மரணம் அடைந்தபோது, எனது அத்தை எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். அதன்பின் சிலர் எனது அத்தையை எங்களது சொந்த பந்தத்தில் இருந்து விலக்கி வைத்துவிட்டனர். கடந்த 2012ஆம் ஆண்டு எனது அம்மா விஜயலட்சுமி உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோது, என்னால் எனது அத்தையை தொடர்புகொள்ள முடியவில்லை.
எனது அத்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இரண்டு வாரங்களாகியும் அவருக்கு என்ன நடந்தது என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை. இது மிகவும் மோசமான சூழ்நிலை. இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். யார் இந்த ரகசியத்துக்குப் பின்னணியில் உள்ளனர் என்பதை கண்டறிய வேண்டும்.
இவ்வாறு தீபா கண்ணீருடன் கூறியுள்ளார்.