எம்.எஸ்.தோனி – விமர்சனம்
‘குப்பை பொறுக்குபவராக இருந்து கோடீஸ்வரராக (from rag to rich) உயர்ந்தவர்களின் நிஜ வாழ்க்கைக் கதைகள் எப்போதுமே சுவாரஸ்யமானவை. அதுபோல, ஓர் எளிய, சாதாரணமான மனிதன் முன்னேறி உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் வாழ்க்கைக் கதைகளும் படுசுவாரஸ்யமானவை தான். (உதாரணம்: சாதாரண கிராமத்துச் சிறுவனாய் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சதாம் உசேன் முன்னேறி, ஈராக் அதிபராகி, அமெரிக்க வல்லரசையே குலை நடுங்கச் செய்த வரலாறு.)
இவற்றில், இரண்டாவது வகைப்பட்ட வாழ்க்கை வரலாற்று திரைப்படமான ‘எம்.எஸ்.தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி’ என்ற ஹிந்தி திரைப்படம் தான் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, ‘எம்.எஸ்.தோனி’ என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது. மிகவும் பின்தங்கிய மாநிலமான அன்றைய பீகார் / இன்றைய ஜார்கண்டில், ஒரு சின்னஞ்சிறு நகரத்தில், சாதாரண நடுத்தட்டு குடும்பம் ஒன்றில் பிறந்த மகேந்திரசிங் தோனி, இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்று, கேப்டனாகி, உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது பற்றிய வாழ்க்கைக் கதை இது.
பம்ப் ஆபரேட்டர் வேலை, சிறிய அப்பார்ட்மெண்ட் வீடு, அன்பான குழந்தைகள் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார், மகேந்திரசிங் தோனியின் அப்பா பான்சிங் தோனி. “நன்றாக படிக்க வேண்டும், என்னைப் போல பம்ப் ஆபரேட்டர் வேலை பார்க்க கூடாது” என தன் மகனான தோனிக்கு சிறிய வயதிலேயே அறிவுரை கூறுகிறார்.
ஆனால், சிறுவன் தோனிக்கு விளையாட்டு என்றால் ரொம்ப பிரியம். பள்ளியில் கால்பந்தாட்டத்தில் கோல் கீப்பிங்கில் கலக்குவதை பார்த்த பள்ளி பயிற்சியாளர் பானர்ஜி, தோனியை கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பிங் செய்ய சொல்கிறார். அங்கிருந்து தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை ஆரம்பிக்கிறது.
கிரிக்கெட் ஆட வந்த பிறகு, கூச் பீகார் டிராபி, துலீப் டிராஃபி என அடுத்தடுத்து பெரிய பெரிய டோர்னமெண்ட்களில் ஆடும் அளவுக்கு விறுவிறுவென வளர்கிறார் தோனி. அவர் மைதானத்தில் இறங்கினால் எதிரணி மிரள்கிறது. பந்து சிக்ஸர்களாக பறந்து காணாமல் போகிறது. அவரது ஆட்டத்தை கண்டு களிக்க கூட்டம் திரள்கிறது.
ஒரு கட்டத்தில் ரயில்வே கிரிக்கெட் அணிக்காக ஆட வாய்ப்பு கிடைக்கிறது போனஸாக ரெயில்வே வேலை கிடைக்கிறது. மகன் நிரந்தர வேலை பார்த்து சம்பாதிக்க வேண்டும் என கவலைப்படும் அப்பாவுக்காக ரயில்வே வேலையில் சேருகிறார் தோனி. ஆனால் அந்த வேலையில் மனம் ஒட்டாததால், அதை ராஜினாமா செய்து விடுகிறார்.
அதன் பின்னர் தோனி எப்படி இந்திய கிரிக்கெட் அணிக்குள் நுழைந்தார்? தோனியின் முதல் காதல் (பிரியங்காவுடனான காதல்) என்ன ஆனது? அதன்பின், மனைவி சாக்ஷியை கரம் பிடித்தது எப்படி? கேப்டனாக என்னவெல்லாம் செய்தார்? உலகக் கோப்பையை எப்படி வென்றார்? எனபது மீதிக்கதை.
மருத்துவமனையில் பிறந்தது முதல், 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது வரையிலான தோனியின் வாழ்க்கை வரலாற்றை நுணுக்கமாக ஆராய்ந்து, விறுவிறுப்பாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் நீரஜ் பாண்டே. 3 மணி 10 நிமிடம் ஓடும் படம் என்றாலும், கொஞ்சம்கூட போரடிக்காமல், ரசிகர்களை திரைக்கதையால் கட்டிப்போட்டு, சுவாரஸ்யமாக படத்தை நகர்த்திச் சென்றிருக்கும் இயக்குனர் பாராட்டுக்கு உரியவர்.
படத்தில் தோனி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுஷாந்த் சிங் ராஜ்புட் அசத்தியிருக்கிறார். இவரது நடை, உடை, பாவனை, செய்கை, மேனரிஸம் என ஒவ்வொன்றும் நிஜ தோனியை ஒத்துப்போவது ஆச்சரிம் அளிக்கிறது. சாகசக் காட்சிகளில் நம்மை குஷிப்படுத்தும் இவர், செண்டிமென்ட் காட்சிகளில் நம்மையும் கண் கலங்க வைத்துவிடுகிறார். விளையாட்டு தொடர்பான காட்சிகளில், தோனி விளையாடும் அசல் காட்சிகளில் அவருடைய முகத்தில் கதாநாயகன் சுஷாந்த்சிங் ராஜ்புட் முகத்தை ஒட்டி மார்பிங் செய்திருப்பது சிறப்பு. கிராபிக்ஸ் என்று தெரியாத அளவுக்கு அந்த காட்சிகள் அமைந்துள்ளன.
படத்தில் நடித்த ஒவ்வொரும் தங்கள் பாத்திரம் உணர்ந்து, குறை சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக, தோனியின் அப்பாவாக வரும் அனுபம் கெர் நடிப்பில் எதார்த்த முத்திரை. தோனியின் முதல் காதலி பிரியங்காவாக வரும் ‘டைரிமில்க்’ திஷா படானியும், மனைவி சாக்ஷியாக வரும் நடிகையும் கொள்ளை அழகு. நடிப்பிலும் சிக்ஸர் அடித்திருக்கிறார்கள்.
அமல் மாலிக் இசையில் பாடல்கள் அருமை. சஞ்சய் சௌத்ரியின் பின்னணி இசையும், சந்தோஷ் துண்டியாயில் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம்.
‘எம்.எஸ்.தோனி’ – கிரிக்கெட் பிரியர்கள் மட்டுமல்ல, கிரிக்கெட் பிடிக்காதவர்களும்கூட கண்டு களிப்பதற்கான் படம்!