விஷால் – வரலட்சுமி காதல் முறிவு நாடகம் அம்பலம்!

பிரபல நடிகர் சரத்குமாருக்கும், அவரது முன்னாள் மனைவி சாயாவுக்கும் பிறந்தவர் வரலட்சுமி சரத்குமார். ‘போடா போடீ’, ‘தாரை தப்பட்டை’ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர். இவரும், சரத்குமாரின் நடிகர் சங்க எதிரியான விஷாலும் காதலிக்கிறார்கள் என்றும், இருவரும் தனிவீடு பிடித்து, கடந்த சில ஆண்டுகளாக ‘லிவ்விங் டுகெதர்’ முறையில் காதலை வளர்த்து வருகிறார்கள் என்றும் அவ்வப்போது செய்திகள் வெளியாவது வாடிக்கை.

இச்செய்திகளை அவர்கள் மறுக்காததோடு, அவற்றை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் பொதுநிகழ்ச்சிகளில் ஜோடியாக பங்கேற்று வந்தார்கள். சமீபத்தில் நடந்த விஷாலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கூட வரலட்சுமி உற்சாகமாக கலந்துகொண்டார். விஷால் தன் பங்குக்கு ஒரு பேட்டியில், “லெட்சுமிகரமான பெண்ணுடன் என் திருமணம் நடைபெறும். நடிகர் சங்க கட்டிடமும், அதில் திருமண மண்டபமும் கட்டும் பணிகள் முடிவடைந்தவுடன், அந்த திருமண மண்டபத்தில் எங்கள் திருமணம் நடக்கும்” என்று கூறினார்.

இந்நிலையில், வரலட்சுமி நேற்று (புதன்கிழமை) தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஒரு ட்வீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. “சேர்ந்து இருப்பவர்கள் பிரியும் முறை இதைவிட மோசமாக இருக்க முடியாது. ஒரு நபர் தனது 7 ஆண்டுகால உறவை தன் மேனேஜர் மூலமாக முறித்துக்கொண்டார். உண்மையான காதல் எங்கே? (Breakups hv reached a new low… a guy broke up a 7yr relationship thru his manager… lol what’s has the world come too… whr is the true love?!)” என்று அதில் குறிப்பிட்டிருந்தார் வரலட்சுமி. இதனால், விஷாலுடனான அவரது காதல் முறிந்துவிட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

ஆனால், விஷாலுக்கும் வரலட்சுமிக்கும் நெருக்கமான வட்டாரம், இது ஒரு நாடகம் என்று கூறுகிறது. “வரலட்சுமியின் ட்வீட்டில், அவருக்கும் விஷாலுக்கும் இடையிலான உறவு முறிந்துவிட்டது என்பது போன்ற பொருள் பொதிந்திருக்கிறது. ஆனால், இருவருக்கும் இடையில் நல்ல புரிதல் இருக்கிறது. தங்கள் உறவு எதை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்பதும் அவர்களுக்கு நன்றாக தெரியும். தங்கள் உறவு மீது மீடியா வெளிச்சம் பாய்வதை தவிர்ப்பதற்காக, திட்டமிட்டு இந்த ட்வீட் வெளியிடப்பட்டிருக்கலாம்” என்கிறது அது.

விஷால் – வரலட்சுமி காதல் முறிவு பற்றிய ட்வீட்டை பெரும்பாலான ஊடகங்களும், திரைத்துறையினரும் நம்பவில்லை என்பதை புரிந்துகொண்ட வரலட்சுமி, “அந்த ட்வீட்டில் நான் என்னைப் பற்றி சொல்லவே இல்லை. அதற்கும் என் வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லை” என்று இப்போது கூறிவருகிறார்.

‘கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு’ என்பார்கள். ஆனால், கெட்டிக்காரியின் புளுகு எட்டு மணி நேரம் கூட தாக்குப் பிடிக்கவில்லை!

அதான் முடிஞ்சு போச்சே…! பஞ்சாயத்தை கலைங்கப்பா…!