“கமர்ஷியல் படத்தில் நடிப்பதில் ஒரு போதை இருக்கிறது!” – விஜய்சேதுபதி

விஜய்சேதுபதி, லட்சுமிமேனன், கிஷோர், ஹரிஷ் உத்தமன், கே.எஸ்.ரவிக்குமார் சதீஷ் நடித்துள்ள  படம் ‘றெக்க’. ‘காமன்மேன்’ பி.கணேஷ் இப்படத்தை தயாரித்துள்ளார். ரத்தின சிவா இயக்கியுள்ளார்.

வருகிற அக்டோபர் 7ஆம் தேதி ‘றெக்க’ வெளியாவதையொட்டி, இப்படத்தின் செய்தியாளர்கள்  சந்திப்பு சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

r2

நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி கலந்துகொண்டு பேசியதாவது:

இந்த ஆண்டு ‘றெக்க’ எனக்கு ஆறாவது படம். இதை பார்க்கும்போது, இரண்டு வாரத்துக்கு ஒரு படம் வீதம் என் படம் வருவது போலத் தோன்றும். ஆனால் ஒரு படத்தில் நடிக்க குறைந்தது மூன்று மாதங்களாவது தேவை. ஆண்டுக்கு ஆறு படம் என்று என்னைப் பற்றி இப்படிச் சொல்கிறார்கள் ஆனால் இந்த சதீஷ் நடித்து ஒரே நாளில் ‘றெக்க’, ‘ரெமோ’ ‘,தேவி’ என மூன்று படங்கள் வருகிறதே… அதை யாராவது கேட்கிறார்களா?

என் பார்வையில் ‘றெக்க’ படத்தை ஒரு பேண்டஸி படமாகத்தான் பார்க்கிறேன். பேண்டஸியையும்  யதார்த்தமாகத்தான் பார்க்கிறேன். இப்படித்தான் சொல்லித் தப்பித்துக்கொள்கிறேன். நிஜமாக என்னை நாலு பேர் அடிக்க வந்தால் ஓடிவிடுவேன். நானே நாலு பேரை அடிக்கிறேன் என்றால் அது நம்ப முடியுமா? இப்படத்தில் நானே ஹரீஷ் உத்தமனை தூக்கி அடிக்கிறேன் என்றால் அது  முடியுமா?அதுதான் பேண்டஸி.

ரத்தின சிவா இயக்கிய  ‘வா டீல்’ படத்தின் ட்ரெய்லரை பார்த்துப்  பிடித்துப் போய்தான் இந்தப்படத்தில் நடிக்கச் சம்மதித்தேன். ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு படத்தில் நடித்தேன். இன்னின்ன மாதிரியான படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று ஒரு  என்னைச் சுற்றி ஒரு கட்டம் போட்டுக்கொள்ள விரும்பவில்லை. ஒரே மாதிரி நடித்தால் எனக்கே போரடித்துவிடும். பார்க்கிறவர்களுக்கும் போரடித்துவிடும்.

படம் நன்றாக இருந்தால் பாராட்டுவார்கள். இல்லையென்றால் கழுவி கழுவி ஊற்றுவார்கள். இந்தப் படம் ஒரு மாஸ் படமாக உருவாகியுள்ளது. இப்படி ஒரு கமர்ஷியல் படத்தில் நடிக்கும்போது செமயா இருந்தது. ஜாலியாக இருந்தது. அதில் ஒரு போதை இருந்தது .’தர்மதுரை’யும், ‘ஆண்டவன்  கட்டளை’யும் கூட கமர்ஷியல் படங்கள்தான்..’ஆண்டவன்  கட்டளை’ படத்தை நாங்கள்கூட அந்த அளவுக்கு ரசிக்கவில்லை. செய்தியாளர்களாகிய நீங்கள் பாராட்டிய எழுத்தில் உங்கள் ரசனையைக் கண்டு வியந்தேன்.

’றெக்க’ விறுவிறுப்பான பரபரப்பான ஜாலியானபடம் .

விஜய் சேதுபதி நடிப்பது ஒரு கமர்ஷியல் படமா என்று கேட்சிறார்கள் .கமர்ஷியல் படம் என்றால் சாதாரணம் இல்லை. கமர்ஷியல் படத்துக்கும் கதை தேவை. வெறுமனே கதாநாயகன் முகத்தை பார்த்துக்கொண்டிருக்க முடியாது . அதற்கும் கதை வேண்டும்.

பேண்டஸி  என்றால் நம்ப முடியுமா என்று கேட்கிறீர்கள்.

இது ஒரு கற்பனை. அவ்வளவுதான்..நானும் சூப்பர்மேன், ஸ்பைடர் மேன் மாதிரி நினைத்துப் பார்த்திருக்கிறேன். நாம்கூட ஒருவனை அடித்து துவைப்பது போல கனவு காண மாட்டோமா? அது இயல்பாக சாத்தியமில்லை என்றாலும் கனவு காண மாட்டோமா? அதுபோல்தான் இந்தப் படமும்.

என் எல்லா சினிமாவையும் ஒரு அனுபவமாக மட்டுமே பார்க்கிறேன். நாளைக்கு எனக்கும் அசை போட அனுபவம் ஒன்று வேண்டாமா?

‘றெக்க’ என்  முந்தைய எந்தப்பட சாயலும் இல்லாத படம்.

இவ்வாறு விஜய் சேதுபதி பேசினார்.