“இப்ப சொல்லுங்க, சட்டம் அனைவருக்கும் சமம் என்று…!?!” – ஆளூர் ஷாநவாஸ்
சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியும், கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜும், சுவாதி கொலை வழக்கில் ராம்குமாரும் கைது செய்யப்பட்டனர். மூன்று பேரும் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களே தவிர, குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டவர்கள் அல்ல. அப்படியெனில், வழக்கில் தீர்ப்பு வரும் வரை மூன்று பேரும் சமமானவர்களே. ஆனால், நடந்தது என்ன?
1) சங்கராச்சாரி கைதானவுடன் விடுமுறை நாளில் கூட திறந்தன நீதிமன்றக் கதவுகள். சுவாமிகளை சிறையில் வைக்காமல் நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள ஏதேனும் ஒரு பங்களாவில் வைக்கலாமே என்றார் நீதிபதி. சிறையில் மலம் கழிக்க வாழை இலை தரப்பட்டது. ஜாமீன் கிடைத்தது. நீதிபதியிடம் சங்கராச்சாரி பேரம் பேசிய ஆடியோ வெளியானது. சாட்சிகள் பல்டி அடித்தனர். சங்கராச்சாரி விடுதலை ஆனார். வழக்கில் மேல்முறையீடு செய்யாமல் அப்படியே விட்டது அரசு.
“சங்கரராமனை என் பக்தர்கள் கூட கொலை செய்திருக்கலாம்” என வெளிப்படையாக சங்கராச்சாரி பேட்டி கொடுத்த பிறகும், அந்த பக்தர் யாரென்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
2) கோகுல்ராஜை அழைத்துச் சென்றது யுவராஜ் என்பது சிசிடிவியில் பதிவான பிறகும் கூட, கோகுல்ராஜ் தற்கொலையே என்றது அதிகார வர்க்கம். பின்னர் போராட்டத்தின் மூலம் கொலை வழக்கானது. யுவராஜை கைது செய்யாமல் காலம் கடத்தியது காவல்துறை. அவர் வாட்சப்பிலும் ஊடகத்திலும் பேசிக்கொண்டே இருந்தார். பின்னர், அவரே காவல்துறை மீது பரிதாபப்பட்டு சரணடைந்தார். அதிலும், நேரம் காலம் இடம் அனைத்தையும் சொல்லிவிட்டே செய்தார். அதற்கும் காவல்துறை கைகட்டி நின்றது. சிறையிலிருந்தும் வாட்சப்பில் பேசினார். ஆனாலும், ஜாமீன் கிடைத்தது. வெளியே வந்தும் பேட்டிகள் கொடுத்தார். வாட்சப்பில் சாதி வெறியை தூண்டினார். வேறு வழியின்றி மீண்டும் கைது செய்துள்ளனர்.
3) ராம்குமார் கழுத்தறுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டார். அவர் தரப்பு கருத்தை வாட்சப்பிலோ ஊடகத்திலோ எதிலும் சொல்ல வாய்ப்பு தரப்படவில்லை.
சி.பி.ஐ விசாரணை கேட்டும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஜாமீன் வழங்கப்படவில்லை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டிய நேரம் நெருங்கியதும் உயிரிழப்பு. எப்படி இறந்தார் என்பதற்கும் தெளிவான பதில் இல்லை. உடற்கூறாய்வில் தமது தரப்பு மருத்துவர் ஒருவரை அனுமதியுங்கள் என வைக்கப்பட்ட கோரிக்கையும் அந்தரத்தில் தொங்குகிறது. உடலைப் பார்ப்பதற்கு கூட எவருக்கும் அனுமதியில்லை.
மேலும், கில்லர் ராம்குமார், கொடூரன் ராம்குமார், கொலையாளி ராம்குமார் என்று தலைப்புச் செய்திகள் வேறு. கில்லர் சங்கராச்சாரி என்றோ, கொடூரன் யுவராஜ் என்றோ ஒரு பெட்டிச் செய்தி கூட வரவில்லை.
இப்ப சொல்லுங்க; சட்டம் அனைவருக்கும் சமம் என்று!?!
துணை பொதுச்செயலாளர், விசிக.