கி.பி.1700ல் நடந்த உண்மைக்கதை ‘இளமி’: நாயகன் ‘சாட்டை’ யுவன்!
கி.பி.1700-ம் ஆண்டு வாக்கில் நடந்த உண்மைக் கதையை மையக்கொண்டு ‘இளமி’ என்ற பெயரில் ஒரு திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை ஜோ புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கிறது.
‘சாட்டை’ படத்தில் நடித்த யுவன் இதில் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அனுகிருஷ்ணா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் கிஷோர் நடிக்கிறார். ‘கல்லூரி’ அகில் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் ரவிமரியா, தவசி, வெள்ளைபாண்டித் தேவர், பரளி நாகராஜ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஜூலியன் பிரகாஷ். இவர் இயக்குனர் ரவிமரியாவின் உதவியாளர். இவர் இயக்கும் முதல் படம் இது.
படம் பற்றி இயக்குனர் ஜூலியன் பிரகாஷ் கூறுகையில், “ஆண்களின் அடையாளமாக கருதப்பட்டது வீரம். அந்த வீரத்தின் வெளிப்பாடாக ஜல்லிக்கட்டு விளையாடுவார்கள் அந்த காலத்தில். அதுவும் 300, 400 ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு தான் முதன்மையான வீர விளையாட்டு. எதையும் தியாகம் செய்து ஜல்லிக்கட்டில் ஜெயிக்க வேண்டும் என்று போராடுவது வழக்கம்.
அப்படி தங்கள் உயிரே போனாலும் பரவாயில்லை என்கிற போர் குணம் கொண்ட இளைஞர்கள் பற்றிய கதை இது. மறக்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஜல்லிக்கட்டை மீண்டும் திரையில் புதுப்பிக்கிறோம். இது இளமை ததும்பும் காதல் கதையாகவும், அதிரடி ஆக்ஷன் படமாகவும் உருவாகிறது.
கி.பி.1700-ம் ஆண்டு காலகட்டத்தில் வாழ்ந்த இளைஞனின் தோற்றம் வர வேண்டும் என்பதற்காக, இதன் நாயகன் யுவன் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். ஜிம்முக்குப் போய் பயிற்சி எடுத்து வலுவேற்றிக் கொண்டிருக்கிறார்.
இது பீரியட் ஃபிலிம் என்பதால், மின் கம்பங்கள், செல்போன் டவர் போன்ற நவீன அம்சங்கள் இல்லாத இடங்களாக தேடி அலைந்து, படப்பிடிப்புக்கான இடங்களை தேர்வு செய்தோம். தேனி மாவட்டம் குரங்கணியிலும், தலக்கோணத்தில் நரபைலு என்ற இடத்திலும் இரண்டு ஊர் அரங்குகளை அமைத்து பிரமாண்டமாக படப்பிடிப்பை நடத்தி உள்ளோம்” என்றார் இயக்குனர் ஜூலியன் பிரகாஷ்.
ஒளிப்பதிவு – யுகா.எம்
இசை – ஸ்ரீகாந்த் தேவா
பாடல்கள் – பழனிபாரதி, ஜீவன்மயில், ராஜாகுருசாமி
கலை – ஜான்பிரிட்டோ
நடனம் – நோபல்
ஸ்டண்ட் – ராக்பிரபு
எடிட்டிங் – என்.சுதா
தயாரிப்பு மேற்பார்வை – எ.பி.ரவி
ஊடகத்தொடர்பு – மௌனம் ரவி