பாரதிராஜா, விதார்த் நடிப்பில் அப்பா – மகன் பாசத்தை சொல்லும் ‘குரங்கு பொம்மை’!
![](http://www.heronewsonline.com/wp-content/uploads/2016/09/k6-2.jpg)
பாரதிராஜா, விதார்த் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘குரங்கு பொம்மை’. கலைஞர் தொலைக்காட்சியின் ‘நாளைய இயக்குனர்’ நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற நித்திலன் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
ஸ்ரேயாஸ்ரீ மூவிஸ் எல்எல்பி தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக, விதார்த்துக்கு ஜோடியாக டெல்னா டேவிஸ் நடித்திருக்கிறார். இவர் கேரள புதுவரவு. பி.எல்.தேனப்பன், குமரவேல், கஞ்சா கருப்பு, பாலாசிங், கிருஷ்ணமூர்த்தி, ரமா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இப்படம் குறித்து இயக்குனர் நித்திலன் கூறுகையில், “மனிதனுடைய மனம் குரங்கு போன்று தாவிக்கொண்டே இருக்கும். அதன் குறியீடாக வைத்து ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கியிருக்கிறேன். இப்படம் என்னுடைய முதல் குறும்படமான ‘புதிர்’ படத்தின் தாக்கத்தின் காரணமாக இப்படம் உருவானது.
விதார்த் என்னுடைய ‘புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்’ என்ற குறும்படத்தை பார்த்துவிட்டு என்னை அழைத்தார். என்னை பாராட்டிவிட்டு, ‘ஒரு படம் பண்ணலாம்’ என்று கூறினார். நான் ‘குரங்கு பொம்மை’ கதையை கூறினேன். கதையை கேட்ட அவர், சிறப்பாக இருக்கிறது என்று கூறியதை அடுத்து படத்தை இயக்க ஆரம்பித்தோம்.
இதில் விதார்த்துக்கு அப்பாவாக இயக்குனர் பாரதிராஜா நடித்திருக்கிறார். முதலில் பாரதிராஜா சாரிடம் நான் கதையைச் சொல்ல தங்கினேன். பின்னர் அவரை சந்தித்து கதையைச் சொன்னேன். கதையை கேட்டவுடனே நன்றாக இருக்கிறது என்றார். எனக்கு சந்தோஷமாக இருந்தது. என்னுடைய குறும்படத்தை பாரதிராஜா சார் ஏற்கனவே பார்த்து பாராட்டியிருக்கிறார்.
‘குரங்கு பொம்மை’ திரைப்படத்தில் அப்பாவுக்கும், மகனுக்கும் இடையிலான பாசத்தை அழுத்தமாக சொல்லியிருக்கிறோம். ஒரு நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் இடையே இருக்கும் நட்பை கதைக்கருவாக வைத்து படம் இயக்கியுள்ளேன். இதன் படப்பிடிப்பு 59 நாட்கள் நடந்தது. சென்னையை சுற்றியே படம் நகரும்.
படத்தில் மொத்தம் 3 பாடல்கள். இதில் அமரர் நா.முத்துக்குமார் 2 பாடல்களை எழுதி இருக்கிறார். ‘பீச்சு காத்து பார்சல் என்ன வெல…’ என்ற பாடலும், ‘அண்ணமாரே அய்யாமாரே…’ என்ற பாடலும் நா.முத்துக்குமார் எழுதியவை. இப்படத்தின் மூலம் அஜனீஷ் லோக்நாத் என்பவர் இசையமைப்பாளராக தமிழுக்கு அறிமுகமாகிறார். இவருடைய இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்திருக்கிறது” என்றார் இயக்குனர் நித்திலன்.
ஒளிப்பதிவு – என்.எஸ்.உதயகுமார்
படத்தொகுப்பு – அபினவ் சுந்தர் நாயக்
வசனம் – மடோன் அஸ்வின்
நடனம் – ராதிகா
சண்டை பயிற்சி – மிராக்கல் மைக்கேல்
ஊடகத்தொடர்பு – குமரேசன்