குற்றச்செயல்களுக்காக காத்திருக்கும் சில தனிநபர்களின் கூட்டுச் செயல்பாடுகள்!

உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்பட்டதால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கர்னாடக விவசாயிகள், கட்சிகள், அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒவ்வொரு முறையும் தமிழகத்திற்கு நீர் அளிக்கப்படும்போதும் ஏதோ சில அமைப்புகள் போராட்டம் என்ற பெயரில் வன்முறைகளில் ஈடுபடுவதை வழக்கமாகவே கொண்டுள்ளனர். இம்முறை பல அமைப்புகள், பல குழுக்கள் தம் இருப்பைக் காட்ட ஆயுதங்களைக் கையில் எடுத்துள்ளனர்.

கர்நாடகத்தில் தமிழர்கள் பாதிக்கப்படுதல், தமிழகத்தின் காவிரி உரிமை பாதிக்கப்படுதல் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்திலும் பல அமைப்புகள், குழுக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இன்றுள்ள நிலையை இப்படி மட்டும் குறிப்பிட முடியாத சூழல்தான் உள்ளது.

இவை இரண்டுமே போராட்டங்கள் மட்டுமல்ல; வன்முறைகள், தாக்குதல்கள், அழிபாடுகள் கொண்டவை.

மக்களின் எதிர்ப்புணர்வு, தம் நலன் காக்கும் போராட்டம் என்ற வகையில் மட்டும் இவை அடங்கிவிடுவதில்லை.

இவை குற்றச் செயல்களுக்காக காத்திருக்கும் சில தனிமனிதர்களின் கூட்டுச் செயல்பாடுகள்.

கொலையுணர்வுகளின் முகமூடியணிந்த சமூக அக்கறைகள் அரசியலற்ற, மக்கள் மீதான அக்கறையற்ற அழிவுக்குணம் கொண்டவர்கள் சாதி, மதம், மொழி, இனம், தேசியம் என்ற ஏதாவது ஒரு தளத்தில் பிரச்சினைகள், சிக்கல்கள் உருவாகுமா என்று காத்துக்கொண்டிருப்பார்கள்.

அதற்கான நேரம் வரும்பொழுது தம் வெறிச்செயல்களை, கொடுஞ்செயல்களை கட்டவிழ்த்துவிடுவார்கள்.

மற்ற நேரங்களில் பொதுச் சமூகமும், அரசு – நீதித்துறையும் இது போன்ற செயல்களைக் கண்டிக்கும். இவர்கள் சட்டத்தின் வழியாக தண்டிக்கப்படுவார்கள்.

ஆனால் இது போன்ற கொந்தளிப்பான நேரங்களில் கொடுஞ்செயல்கள் அனைத்தும் சாட்சிகள் அற்று, குழுக்களின் பாதுகாப்பில் செய்யப்படும்.

எதிரிகள் என அடையாளம் காட்டி மக்களைத் தாக்குதல், வீடுகளை சூறையாடுதல், படுகொலைகள் செய்தல், பெண்கள் மீதான வன்கொடுமைகள் என அனைத்தையும் தம் சமூகத்திற்காகச் செய்வதான தோற்றத்தை உருவாக்கிவிட முடியும்.

இதற்கு அரசியல் தோற்றமும் கிடைத்துவிடும். இந்த நிலைதான் பெருங்கொடுமைகளையும் கொண்டாட்டத்துடன் செய்வதற்கான வாய்ப்புகளை இந்தப் பதுங்கித் திரியும் கொலைகாரர்களுக்கு வழங்கிவிடுகிறது.

பாகிஸ்தான் உருவாக்கப்பட்டபோது நிகழ்ந்த படுபாதகங்கள், கொலைகள், கொடூரங்கள் அனைத்தையும் மதம் என்ற அடையாளத்தின் கீழ் செய்தவர்கள் வன்கொடுமைகளுக்காக காத்திருந்தவர்கள்தான்.

மக்கள் என்ற அடையாளம் அப்போது வெறும் முகமூடிகளே.

சேரிகளை எரிக்கக் காத்திருக்கும் ஆட்கள் அதற்கான நேரத்தைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். தம் சாதியினரின் அறிவு, தயக்கம் இரண்டையும் குழப்பிவிட்டு தமது சாதிக்காக தாமே முன்னின்று போர் தொடுப்பதாக அறிவித்து தம் வன்கொடுமை உணர்வுகளை செயலாக்கிக் கொள்வார்கள்.

தனிப்பட்ட பகைமைகள், வஞ்சங்கள், கொள்ளையடிப்பதற்கான திட்டங்கள் அனைத்தையும் தீர்த்துக்கொண்டு தியாகிகள், வீரர்கள் என்ற பட்டத்தையும் பெற்றுக்கொள்வார்கள்.

மக்கள் மௌனமாக்கப்படுதல்தான் இவர்களின் பலம்.

கலவரங்களி்ன்பொழுது முன் செல்பவர்கள் மக்களுக்காக வேறு எதனையும் மற்ற நேரங்களில் செய்வது பற்றிச் சிந்திக்கவும் மாட்டார்கள்.

இவர்கள் மூளைக்குள் குற்றத்திற்கான வெறி, கொலை வக்கிரம், மனித வெறுப்பு இவைதான் குவிந்து கிடக்கும்.

இவர்கள் காத்திருக்கும் கொலை ஆயுதங்கள். இவர்களை வைத்து அரசியல் செய்பவர்கள் படுகொலைகளின் மொத்த உருவங்கள்.

1984-இல் சீக்கியர்கள் மீதான டெல்லித் தாக்குதலில் ஈடுபட்டவர்கள், ஈடுபடுத்தப்பட்டவர்கள் அனைவரும் ஆயுதங்களை ஒருமுறையாவது மனித உடலில் செலுத்திப் பார்க்க வேண்டும் என்று காத்திருந்த கொடுஞ்செயல் மோகம் கொண்டவர்கள்.

சீக்கியர்கள் மீதான வெறுப்பைப் பயன்படுத்திக்கொண்டு அக்டோபர் 31 முதல் இரண்டு மாத காலம் பஞ்சாபியப் பெண்கள் மீதான வன்கொடுமைகளை செய்த ஆண்நோய் கூட்டங்களும், கொள்ளையில் தொடர்ந்து ஈடுபட்ட கும்பல்களும் இந்திரா காந்தி கொலை, காங்கிரஸ் பக்தி என்பதை ஒரு கேடயமாகத்தான் பயன்படுத்தினார்கள். காவல்துறை கண்களை மூடிக்கொண்டிருந்தது, ஆட்சியில் இருந்தவர்களின் அனுமதி கிடைத்தது.

ஆயுதங்களை உணவுப் பொட்டலங்கள் போல வழங்கிய கட்சித் தலைவர்கள் கொலை செய்வதற்கான வெறியில் காத்துக் கிடந்தவர்கள்.

தன்னுடன் படித்த சீக்கியப் பெண்ணின் வீட்டிற்குக் கும்பலாகச் சென்று வன்கொடுமை செய்த இளைஞன், தான் வேலை செய்த கடையின் முதலாளியின் குடும்பத்தை கும்பலாகச் சென்று எரித்த வேலையாட்கள் என ஆயிரக்கணக்கான நிகழ்வுகள் பதிவாகி உள்ளன.

2002 குஜராத் படுகொலையின்போது இளம் சிறார்கள் பலர் ஈடுபடுத்தப்பட்டார்கள். அவர்களுக்குத் தலைமை தாங்கியவர்கள் பயிற்சி பெற்ற குற்றவாளிகள்.

கஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும், ஆதிவாசி மண்டலங்களிலும் ஆயுதப்படை என்ற அடையாளத்துடன் பல குற்றவாளிகள் தம் கொலைவெறியைத் தீர்த்துக்கொள்கின்றனர்.

மனிதர்கள் வன்கொடுமைக்காக காத்திருக்கிறார்கள் என்று பொதுவில் சொல்லிவிட்டு நாம் தப்பிக்க முடியாது.

அதே மனிதர்கள்தாம் அமைதிக்காக, இணக்கமான வாழ்வுக்காக ஏங்கிக்கொண்டு காத்திருப்பவர்களும்.

இந்த இரண்டு நிலைக்கும் இடையில் செயல்பட வேண்டியவைதான் அரசியல்-சமூக இயக்கங்கள்.

அரசியலடைதல் என்பது தனிமனிதர்களின் உள்ளடைந்துள்ள வன்முறைகள் ஒரு சமூகத்தைப் பாதிக்காத, பாதிக்க முடியாத நிலையை உருவாக்குவதில்தான் தொடங்குகிறது.

உடன் பிறந்த இரு குழந்தைகள் ஒரு பொம்மைக்காக ரத்தம் சொட்ட மோதிக்கொள்வதை பார்க்க முடியும். தான் விரும்பிய பெண்ணை அண்ணன் மணம் செய்து கொண்டதால் இருவரையும் கொலை செய்துவிட்டு சிறை சென்ற தம்பிகள் பற்றிய பதிவுகள் உள்ளன.

குற்றங்களைச் செய்து கொண்டாடுவதற்கும், கொலைவெறியை தீர்த்துக் கொள்வதற்கும் நதி நீர் பங்கீடு மட்டுமல்ல, குளத்து நீர் பங்கீடும் காரணமாக அமைய முடியும்.

கர்நாடக விவசாயிகளிடம், “காவிரி நீர் கைவிட்டுப் போய்விட்டது” என்று வெறியைக் கிளப்புவதும், தமிழக விவசாயிகளிடம் “நம் வீட்டுப் பெண்களையெல்லாம் ‘அந்த பயல்கள்’ கொண்டு போய் விடுவார்கள்” என்று கொதிப்பை மூட்டுவதும் ஒரேவிதமான வன்கொடுமை அரசியல்தான்.

தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள், கன்னடர்களை நொறுக்குங்கள் என்று வெறிக்கூச்சல் எழுப்பும் யாரும் தமிழ்ச் சமூகத்திற்காக வாழ்பவர்கள் இல்லை, இவை வெறும் குற்றவெறிக் குடைச்சல்கள்.

காவிரி நீர் பங்கீடு, தமிழக விவசாயம் பாதிப்படைவது, குடிநீர் அற்ற தமிழகம் என்பவை சூளுரைகளால், சூறையாடல்களால் தீர்க்கப்படும் பிரச்சினைகள் அல்ல.

[போராட்டங்களில் ஈடுபடும் மக்கள், இயக்கங்கள் தனியே அறியப்பட வேண்டியவர்கள்.]

– பிரேம்

எழுத்தாளர்