தமிழகத்தில் 450 திரையரங்குகளில் வெளியாகும் ‘இருமுகன்’ – முன்னோட்டம்!

விகரம் முதல்முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் என்பதால், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘இருமுகன்’, உலகமெங்கும் நாளை (8ஆம் தேதி) திரைக்கு வருகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 450 திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.

வழக்கம் போல இதிலும் வித்தியாசமான கெட்டப்புகளுக்காக நிறையவே மெனக்கெட்டிருக்கும் விக்ரமுக்கு ஜோடியாக முதல்முறையாக நயன்தாரா நடித்திருக்கிறார். இரண்டாவது கதாநாயகியாக நித்யா மேனன் நடித்துள்ளார்.

0a3c

‘அரிமா நம்பி’ படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இதனை இயக்கியுள்ளார். “இருமுகன் கதையை டைரக்டர் எங்கிட்ட சொன்னதும், இதை மிஸ் பண்ணவே கூடாதுன்னு தோணுச்சு. உடனே தயாரிப்பில் இறங்கிட்டேன். இதுவரைக்கும் தமிழில் இப்படியொரு கதை வந்ததில்லன்னு உறுதியா சொல்வேன்” என்கிறார், மிகுந்த பொருட்செலவில் இப்படத்தை தயாரித்திருக்கும் ஷிபு தமீன்ஸ்.

இப்படத்தின் படப்பிடிப்புக்காக சென்னையில் எட்டு பிரமாண்ட செட்டுகளை அமைத்திருந்தார்கள். அத்துடன் வெளிநாடுகளிலும் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது.

0a1c

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானபோதே ரசிகர்களிடம் பெரும் ஆர்வமும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டுவிட்டது. காரணம், விக்ரம் ஏற்றுள்ள இரண்டு கதாபாத்திரங்களில், ஒன்று, அகிலன் என்ற பெயர் கொண்ட ரா உளவுத்துறை அதிகாரி கதாபாத்திரம். அது துணிச்சலான சாகசநாயகனுக்குத் தேவையான அனைத்து அம்சங்களுடனும் இருக்கிறது. லவ் என்ற பெயர் கொண்ட இன்னொரு கதாபாத்திரம்  தோற்றத்திலும், நடை, உடை, பாவனையிலும் மிகுந்த பெண் தன்மையுடன் இருக்கிறது. ஆனால் அது பேசும் வசனங்கள் வில்லத்தனமாக இருக்கிறது. அது திருநங்கையா என்று கேட்டால், “சஸ்பென்ஸ்” என்கிறது படக்குழு. அது வில்லியா என்று கேட்டால், அதற்கும் “சஸ்பன்ஸ்” என்பது தான் பதில். இதனால் தான் எதிர்பார்ப்பு எகிறிவிட்டது.

யு/ஏ சான்றிதழ் பெற்றிருக்கும் இப்படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். அவரது இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஏற்கெனவே ஹிட்.

‘ஆரா சினிமாஸ்’ நிறுவனம் சார்பில் மகேஷ் பிரமாண்டமாக வெளியிடும் ‘இருமுகன்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.