தனுஷ் இயக்கும் ‘பவர் பாண்டி’யில் ராஜ்கிரணின் மகனாக பிரசன்னா: படப்பிடிப்பு துவங்கியது!

தமிழ் படவுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் தனுஷ். அத்துடன் ஹிந்தி திரையுலகிலும் பிரவேசித்திருப்பவர். ஹாலிவுட் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியிருப்பவர்.

நடிகர் என்பதையும் தாண்டி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர் தனுஷ். அனைத்து தளங்களிலுமே வெற்றி வாகை சூடி, தன்னுடைய முத்திரையை அழுத்தமாக பதித்திருப்பவர். தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்

ராஜ்கிரண் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘பவர் பாண்டி’ படத்தை இயக்குகிறார் தனுஷ். நகைச்சுவையுடன் சாகசமும் கலந்த இப்படத்தில் ராஜ்கிரணின் மகனாக பிரசன்னா நடிக்கிறார். இவர்களுடன் சாயாசிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

‘பவர் பாண்டி’ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியது. துவக்க நிகழ்ச்சியில் ராஜ்கிரண், பிரசன்னா, தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினரும், இயக்குனர் செல்வராகவன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.

‘என் ராசாவின் மனசிலே’ படத்தின் மூலமாக நடிகராக ராஜ்கிரணும், இயக்குனராக தனுஷின் தந்தை கஸ்தூரிராஜாவும் திரையுலகிற்கு அறிமுகமானார்கள். தற்போது அதே ராஜ்கிரண் நடிக்கும் படத்தின் மூலம் தனுஷும் இயக்குனராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.