குற்றமே தண்டனை: நாசர் கதாபாத்திரம் கவனம் ஈர்த்தது ஏன்?
‘குற்றமே தண்டனை’ – கடந்த மூன்று ஆண்டுகளில் எனக்கு முழு திருப்தி தந்த மிகச் சில தமிழ்ப் படங்களுள் ஒன்று.
ஒரு குற்றத்தில் நேரடியாகத் தொடர்புடையர்களை மட்டுமே சமூகமும் அமைப்புகளும் கண்டுகொள்கிறது. ஆனால், ஒரு குற்றத்தில் மறைமுகமாகத் தொடர்புடையவர்களையும், பெரியக் குற்றமாக இருப்பினும் – அதற்குக் காரணமான கிளைக் குற்றமாக இருப்பினும் – ப்ரொஃபஷனல் கிரிமினல் அல்லாதவர்களுக்கு ‘குற்றம் புரிவதே தண்டனை தரவல்லது’ என்பதையும் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்த சினிமா இது.
99 நிமிடங்கள் ஓடக் கூடிய சினிமா என்பது இதன் முதல் கெத்து. தேவையற்ற காட்சிகள் எதுவும் இல்லாதது சிறப்பு. ஒவ்வொரு காட்சிகளும் கதை நகர்வது சில நொடிகள் கூட கவனத்தைச் சிதறச் செய்யாமல் திரை மீது ஈடுபாடுகொள்ள வைப்பது செம்ம!
சினிமாவில் ப்ரொட்டாகனிஸ்டை மையமாக வைத்தே கதையைச் சொல்வது படைப்பாளிக்கும் பார்வையாளர்களுக்கும் வசதியானது. எனவேதான் உறுதுணைக் கதாபாத்திரங்கள் மீது போதுமான அளவு மட்டும் கவனத்தைக் குவிக்கவைப்பது முழுமையான அனுபவத்துக்கு உதவும். அது இங்கே கூடுதல் கவனத்துடன் கையாளப்பட்டதை உணர்கிறேன். உறுதுணைக் கதாபாத்திரங்களின் பின்னணியையும், அவர்களது உளவியலைக் காட்சி ரீதியிலும் முழுமையாக விவரிக்காமல், அனைவரையுமே கதையின் போக்குக்கு மட்டுமே பயன்படுத்தியிருப்பதால் ப்ரொட்டாகனிஸ்ட் பற்றியும், அவன் செய்கைகள் குறித்தும் மட்டுமே நம்மால் சிந்திக்க முடிகிறது.
ஐஸ்வர்யாவின் கதாபாத்திரம் மேலோட்டமாகக் காட்டப்பட்டதன் மூலம் அந்தக் கதாபாத்திரத்தை பார்வையாளர்கள் தங்கள் எண்ணத்துக்கு ஏற்றபடி எப்படி வேண்டுமானாலும் உள்வாங்கிக் கொள்ளலாம். மாறாக, அவள் செய்தது சரியானது என்று நியாயப்படுத்தும் வகையிலோ அல்லது அவள் செய்தது மோசம் என்ற வகையிலோ காட்சிகளாலும் வசனங்களாலும் விவரிக்கப்பட்டிருந்தால், இந்தப் படத்தின் மையத்தின் மீதான கவனம் சிதறியிருக்கலாம். அதைப் போலவே பூஜா கதாபாத்திரமும் கையாளப்பட்டிருந்தது.
ஒரு படத்தில் தன் ப்ரொட்டாகனிஸ்ட்டின் செயல்பாடுகளை கொண்டாடவோ அல்லது கேவலப்படுத்தவோ செய்யாமல், புறச்சூழலுக்கு ஏற்றபடி அவன் செயல்பட வேண்டியதன் கட்டாயத்தை கரெக்ட்டாக சொன்ன விதம், தான் உருவாக்கும் கதாபாத்திரத்தையே விலகி நின்று தெளிவாகப் பார்க்கும் படைப்பாளிகளால் மட்டுமே முடியும். அதேபோல், இயல்பு மீறாத நடிப்பை வெளிப்படுத்திய நடிகர்களின் பங்களிப்பு இந்தப் படத்தைத் தூக்கி நிறுத்துகிறது.
ஒளிப்பதிவு, சவுண்ட் மிக்ஸிங், எடிட்டிங், காஸ்ட்யூம், கலை அமைப்பு என அனைத்து உறுதுணைத் துறைகளின் பங்களிப்பும் மிகச் சிறப்பாக இருப்பதைப் பார்க்கிறேன். குறிப்பாக, ஒலி அமைப்பும் எடிட்டிங்கும் பக்கா. க்ரைம் – த்ரில்லர் சினிமாவுக்கே உரிய ‘கெஸ்ஸிங்’குக்கான ஸ்கோப்புகளைத் தரக் கூடிய சில ஷாட்களை நொடிப் பொழுதுகளில் அலையவிட்ட விதத்தில் எடிட்டிங் செம்ம.
இசையைப் பொருத்தவரை, ஒரு படத்தின் காட்சிகள் மீதான அழுத்தத்தைத் கூட்டுவதற்கு பின்னணி இசை உறுதுணை புரியும் என்பது தெளிவு. அதேவேளையில், சில காட்சிகளின் தன்மையால் பார்வையாளரின் மனம் ஏதோ ஒரு வகையில் பாதிக்கக் கூடும் என்பதால், கவனத்தை சற்றே திருப்பிவிட்டு, அதன் வீரியத்தைக் குறைக்கும் வேலையையும் பின்னணி இசை மூலம் செய்ய வைப்பது நியாயமான படைப்பாளிகளின் வேலை. இந்த இரண்டையுமே ‘குற்றமே தண்டனை’ படம் மூலம் கண்டேன்.
இந்தப் படத்துக்குப் பின்னணி இசை ஏதுமின்றி, வெறும் சப்தங்களால் நிரப்பி மட்டுமே உருவாக்கியிருக்க முடியும். அதன் அழுத்தத் தாக்கம் வேற லெவலுக்குப் போயிருக்கும். ஆனால், அப்படிப்பட்ட உத்திகளுடன் கூடிய சினிமாவை அணுகும் அளவுக்கு நம் மூத்த சினிமா படைப்பாளிகள் நம்மை இன்னமும் தயார்படுத்தவில்லை என்பதால் இயக்குநர் மணிகண்டனுக்கு கச்சிதமாக உறுதுணை புரிந்திருக்கிறார் இசையமைப்பாளர் இளையராஜா.
சினிமாவில் சமூகத்துடன் அங்கம் வகிக்கும் துறைகளைச் சேர்ந்தவர்கள் மீது வெறுப்புணர்வைத் தோற்றுவிக்கும் வகையில் நேரடியாக விளாசாமல், அந்த அமைப்புகளின் நடவடிக்கைகளை அப்பட்டமாகக் காட்டி விமர்சிப்பதில் மணிகண்டனின் சமூக அக்கறையைப் பார்க்க முடிகிறது.
குறிப்பாக, எல்லா துறைகளிலும் பணி – கடமை என்பது 8 மணி நேரத்தைக் கடத்துவது என்பதாகிவிட்டது. ‘ஷோவை ரன் பண்ணினா போதும்’ என்ற மனோபாவம். அது, காவல் துறையில் அதிகரிப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை இப்படம் அழுத்தமாகச் சொல்கிறது. ஒரு குற்றம் நிகழ்ந்தால், அதன் ஆணிவேர் பற்றிய எந்தக் கவலையையும் இல்லாமல் அந்தக் கேஸை க்ளோஸ் பண்றது ஒன்று மட்டுமே போலீஸின் கடமை என்றாகிவிட்டதை இதைவிடச் சிறப்பாகக் குத்திக் காட்ட முடியாது. அதேபோல், உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக மருத்துவத் துறையில் நடக்கும் உள்ளடி வேலைகளைச் சொல்லி, மருத்துவத் துறை சார்ந்த அமைப்புகளும் அம்பலப்படுத்தப்படுகிறது. இவை அனைத்துமே நாடகத்தனமாக அல்லாது திரை மொழியிலேயே அணுகப்பட்டிருக்கிறது.
எல்லாவற்றையும் விட, ஒரு சோஷியல் க்ரைம் த்ரில்லர் கதையில், சமூக நிலையைக் கண்டு மேம்போக்காக பொங்கிக் கொண்டு, உண்மையில் பொத்திக்கொண்டும் வாழும் பொதுஜனத்தை குறிப்பால் தாக்கிய விதம்தான் என்னை வியக்க வைத்தது. ஆம், நாசர் கதாபாத்திரத்தை பொழுதுபோக்குக்காக பொங்கல் வைக்கும் பொதுஜனமாகவே பார்க்கிறேன்.
நாசர் கதாபாத்திரத்தைப் பொருத்தவரையில், தான் உண்டு – தன் வேலை உண்டு என்று இருப்பார். ரவியும் ரவியைச் சுற்றி நடக்கும் சம்பவங்களும்தான் செய்தி – தகவல் எல்லாம். ரவி தான் சமூகம் என்றால், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றுக்கும் நாசர் கதாபாத்திரம் ரியாக்ட் செய்யும். தப்பென்றால் திட்டும்; சரியென்றால் பாராட்டும்; அவ்வப்போது நக்கல் செய்து கலாய்க்கும்; எப்போதும் எங்கேஜிங்காக வைத்துக் கொள்ளும்; எல்லாவற்றுக்குமே அறிவுரை சொல்லும்; எதிர்க்கேள்வி கேட்டு திக்குமுக்காடச் செய்யும்போது யோசிக்காமல் விரட்டிவிட்டு பொத்திக்கொண்டு தன் வேலையைப் பார்க்கப் போய்விடும். ரவி கேட்கும் பதில் கேள்வி ஒன்றில், “நீங்க கண்தானம் பண்ணியிருக்கீங்களா? நீங்க பண்ணியிருந்தா நாங்க ஏன் வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்குறோம்?” என்பதுபோல் பேசியதும், நாசர் கதாபாத்திரம் காட்டும் ரியாக்ஷன்தான் மிஷ்டர் பொதுஜனத்தின் எக்ஸாக்ட் மனநிலை.
இறுதியாக, ‘குற்றமே தண்டனை’ பற்றி சொல்வதற்கு ஒரு விஷயம் மட்டும்தான் உள்ளது. இப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் பார்வையாளர்களில் பெரும்பாலானவர்கள் நல்ல சினிமா அனுபவத்தைப் பெறுவது உறுதி. அந்த வாய்ப்பை சாத்தியப்படுத்துவதில் அடங்கியிருக்கிறது நாளைய தமிழ் சினிமாவின் ‘நிலை’!
Kuttrame Thandanai – A Perfect Social Crime Thriller | Not to be missed.
– சரா
ஊடகவியலாளர்