நெடுஞ்சாலை பயண கதை ‘பீரங்கிபுரம்’: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
வெறும் பொழுதுபோக்குக்காக மட்டும் தான் சினிமா என்ற நிலை மாறி, சினிமாவிலும் பல பரிசோதனை முயற்சிகள் நடக்கின்றன. அதிலும் சமீபகாலமாக தென்னிந்திய மொழி சினிமாக்களில் படையெடுக்கும் நவீன இளைஞர்கள் சினிமா மொழியையே மாற்றும் அளவுக்கு சாதிக்கின்றனர். மலையாளம், தமிழ் போலவே கன்னடத்திலும் அது போன்ற புது முயற்சிகளுக்கு ஆதரவு பெருகி வருகிறது.
அப்படி ஒரு புது முயற்சியாக தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று உருவாகிறது ‘பீரங்கிபுரம்’. இந்த படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் ஜான் ஜானி ஜனார்த்தனா. இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டை சேர்ந்த திருத்தணியில் தான். தமிழின் மூத்த இயக்குனர்களையே ரோல்மாடலாக கொண்டு களம் இறங்கியிருக்கும் ஜான் ஜானி ஜனார்த்தனாவுக்கு தமிழ் சினிமா மீதுதான் தீவிர காதல்.
‘பீரங்கிபுரம்’ என்கிற இத்திரைப்படம் நெடுஞ்சாலை வழியாக செல்லும் கதை. சென்னையிலிருந்து ராஜஸ்தான் வரை செல்லும் பயணத்தில், வாழ்க்கை என்றால் எப்படி வாழ வேண்டும் என்று சொல்லும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முதன்முறையாக ராஜஸ்தான் மற்றும் பாலைவனப் பகுதிகளில் திரைக்கதை நகர்கிறது. உலக சினிமாவில் டாட்டூவை மையப்படுத்தி எடுக்கப்படும் முதல் திரைப்படம் இது.
புதுவிதமான கதை அம்சம் கொண்ட இப்படத்தில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்கள் அனைத்தும் மேடை நாடக பின்புலத்திலிருந்து வந்தவர்கள். முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பவர் கன்னட நடிகர் சஞ்சாரி விஜய். கடந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றவர். கடந்த ஆண்டு ‘நானு அவனுள்ள அவளு’ என்ற கன்னட படத்தில் பாண்டிச்சேரியை சேர்ந்த ஒரு திருநங்கையாக நடித்து இந்திய அளவில் பாராட்டுகளையும், விருதுகளையும் குவித்தவர் சஞ்சாரி விஜய். இவருக்கு இதுவே முதல் தமிழ் படம். தேசிய விருது வாங்கியபோதே “தமிழில் நடிக்க ஆசை” என்று சொன்னவருக்கு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது பீரங்கிபுரம்.’
இப்படத்தில் இவருக்கான கதாபாத்திரத்தின் தோற்றத்திற்காக மேக்கப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. முப்பதுகளில் இருக்கும் இளைஞனான சஞ்சாரி விஜய், இந்த படத்தில் ஏற்றிருப்பது வயதான முதியவர் வேடம். இவருடன் சுகுமார், சந்திரகலா மோகன், ராணா, கிரிஷ் ஜத்தி, கோபால் தேஷ்பாண்டே, ஜெய்கார், கானவி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீட்டு விழா, சென்னை வடபழனி ஆர்.கே.வி ஸ்டூடியோவில் இன்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக நடிகை நமீதா, நடிகர் ஸ்ரீகாந்த் கலந்துகொண்ட இவ்விழாவில், படக்குழுவினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஒளிப்பதிவு – அத்வைத்தா குருமூர்த்தி
இசை – ஸ்யாம் L ராஜ்
காஸ்டிங் இயக்குனர் – சுகுமார்
கலை – செல்லபதி
சண்டை பயிற்சி – கவி
மேக்கப் – உமா மகேஷ்வர்
உடைகள் – நிகாரிக்கா
ஊடகத்தொடர்பு – வி.கே.சுந்தர்