இயக்குனர் ராஜூமுருகன் – டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஹேமா சின்ஹா திடீர் திருமணம்!
பத்திரிகையாளரான ராஜூமுருகன், தினேஷ் – மாளவிகா நடித்த ‘குக்கூ’ படத்தின் மூலம் திரைப்பட இயக்குனராக அறிமுகமானார். பார்வையற்ற இருவரின் காதலை மையமாகக்கொண்ட அந்த படம், பார்வையற்றவர்களின் உலகத்தை நெருக்கமாக வித்தியாசமான கோணத்தில் சித்தரித்ததால், அதன் இயக்குனர் ராஜூமுருகன் கவனிக்கத் தக்க இயக்குனர் ஆனார்.
இதனையடுத்து, கார்த்தி – நாகார்ஜூனா நடித்த ‘தோழா’ படத்துக்கு ராஜூமுருகன் வசனம் எழுதினார். அவரது வசனத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதன்பின்னர் குரு சோமசுந்தரம் – ரம்யா பாண்டியன் நடித்த ‘ஜோக்கர்’ படத்தை இயக்கினார் ராஜூமுருகன். சமீபத்தில் வெளியான இப்படம் சமகால அரசியலை பகடி செய்து தோலுரித்துக் காட்டியது. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது.
ராஜூமுருகனின் நீண்டகால தோழி ஹேமா சின்ஹா. மதுரையில் பிறந்து வளர்ந்தவர். சென்னை வந்து ‘சன் மியூசிக்’ தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகி பிரபலமாக திகழ்ந்தவர். சில ஆண்டுகளுக்குமுன் வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்துகொண்டு, வெளிநாட்டில் போய் குடியேறினார். ஆனால், குறுகிய காலத்திற்குள்ளாகவே கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து பெற்று, பிரிந்துவிட்டார்கள்.
இதற்கிடையே ராஜூமுருகன் – ஹேமா சின்ஹா நட்பு, காதலாக மலர்ந்தது. இவர்களது காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனால் காதும் காதும் வைத்தாற்போல் ரகசியமாக ஏற்பாடு செய்து, சென்னை பெசண்ட் நகர் முருகன் கோவிலில் இன்று (செப்டம்பர் 4ஆம் தேதி) ஹேமா சின்ஹாவை திடீர் திருமணம் செய்துகொண்டார் ராஜூமுருகன்.
இயக்குனர் பாலா தலைமையில் மிக எளிமையாக நடைபெற்ற இத்திருமணத்தில், ஆனந்தவிகடன் ஆசிரியர் கண்ணன், எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், கவிஞர் யுகபாரதி உள்ளிட்ட நெருக்கமான நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டார்கள்.