“சுவாதியை கொன்ற 4 பேர் சிக்கும்வரை விட மாட்டேன்”: ட்ராபிக் ராமசாமி ஆவேசம்!
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் ஸ்வாதி வெட்டி கொல்லப்பட்டார். இக்கொலைக்கு ஒருதலைக்காதல் காரணம் என்று கூறி, நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
ஆனால், சமூக செயல்பாட்டாளர் திலீபன் மகேந்திரனும், பிரான்சில் வசிக்கும் தமிழச்சியும் தனிப்பட்ட முறையில் தகவல்கள் திரட்டி, “இது ஆணவக்கொலை. இதில் 4 பேர் குற்றவாளிகள். இக்கொலையில் இந்துத்துவா அமைப்பினருக்கு தொடர்பு இருக்கிறது” என்று முகநூல், யு ட்யூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார்கள்.
இந்நிலையில், திலீபன் மகேந்திரனை போலீசார் திடீரென கைது செய்து, திருச்சி சிறையில் அடைத்துள்ளனர். போலீசாரின் இச்செயல், சமூக செயல்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பிரபல சமூக செயல்பாட்டாளர் ட்ராபிக் ராமசாமி, தனது முகநூல் பக்கத்தில் ஆவேசமாக பதிவிட்டுள்ள பதிவு வருமாறு:
தமிழச்சியும் விடவில்லை. திலீபன் மகேந்திரனும் விடவில்லை நானும் விடப்போவது இல்லை.
இது அவர்களுக்கு ஆதரவாக மட்டும் இல்லை. உண்மையான நான்கு குற்றவாளிகள் போலீசாரிடம் சிக்கும்வரை நீங்கள்கூட இதனை விட்டு விடாதீர்கள்.
முன்பெல்லாம் செய்தித்தாள்களில் வரும் செய்திதான் முகநூலில் பரபரப்ப்பாக பேசப்படும். ஆனால் தற்பொழுது முகநூலில் என்ன பரபரப்பாகிறதோ அதுதான் மறுநாள் செய்தித்தாள்களில் செய்திகளாக வலம் வருகிறது. அப்பேற்பட்ட சமூக வலைத்தளங்களில் தங்களின் சொந்த கருத்தை பதிவிடுபவர்களை கைது செய்ய நாடினால், முகநூலில் இருக்கும் அனைத்து நபர்களையும் கைது செய்யும் சூழ்நிலை அல்லவா வரும்?
ஏனென்றால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் பல பல கருத்துக்களை பதிவு செய்துவருகிறோம் கருத்துக்களை பகிர்வதில்கூட பல கட்டுப்பாடுகளை விதித்துவிட்டு, இதற்கு பெயர்தான் கருத்துச் சுதந்திரம் என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
அப்படியான நிகழ்வுதான் சமீபத்தில் சத்தமில்லாமல் நிகழ்ந்துள்ள மகேந்திரனின் கைது.
ராம்குமாரின் முகநூலை சோதனை செய்த மகேந்திரன், ஒரு அதிர்ச்சியான தகவலை ஒரு வீடியோவாக முகநூலில் வெளியிட்ட மறுநாளே மகேந்திரனின் முகநூல் பக்கத்தை முடக்கி, அவரை அவசர அவசரமாக கைது செய்துள்ளது தமிழ்நாடு காவல்துறை.
எதற்காக கைது செய்தார்கள்? கருத்து சுதந்திரம் பேசியதற்காகவா? இல்லவே இல்லை. உண்மையான நான்கு குற்றவாளிகளை மக்களிடம் பிரபலப்படுத்த முயற்சித்ததால்!
யார் அந்த நான்கு பேர்? எதற்காக அவர்களை காப்பாற்ற தமிழக காவல்துறை மும்மரப்போடு செயல்பட வேண்டும்?
பகிர்ந்தால் மட்டுமே இதை மீண்டும் வெடிக்க வைக்க முடியும்.
இவ்வாறு ட்ராபிக் ராமசாமி கூறியுள்ளார்.