தனுஷின் ‘வடசென்னை’யில் மீனவப்பெண் – அமலா பால்!
விருதுகள் குவித்த ‘விசாரணை’ படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வடசென்னை’. இப்படத்துக்காக சென்னை மத்திய சிறைச்சாலையை அரங்கமாக அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். மூன்று பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகத்துக்கான பெரும்பகுதி படப்பிடிப்பை இந்த சிறைச்சாலை அரங்கில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.
தனுஷ், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துவரும் இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் நிறுவனமும், லைக்கா நிறுவனம் இணைந்து தயாரித்து வருகின்றன. கதாநாயகியாக முதலில் தேர்வு செய்யப்பட்ட நடிகை சமந்தா விலகிவிட்டதால், அந்த வேடத்தில் அமலாபால் நடித்து வருகிறார். மேலும், இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
‘வடசென்னை’ படத்தின் மூன்று பாகங்களிலும் நாயகி அமலா பால் கதாபாத்திரம் வருவது போன்று வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன். இதில் அமலா பாலுக்கு மீனவப்பெண் கதாபாத்திரம் என்பதால், மீனவப் பெண்களுடைய பேச்சு மொழியை கற்றுக்கொண்டு நடித்து வருகிறார் அமலா பால்.
இப்படத்தின் முதல் பாகம் அடுத்தாண்டு வெளியாக இருக்கிறது. இப்படத்தின் கதைக்களம் 40 ஆண்டுகளை உள்ளடக்கியது என்பதால் மொத்த படக்குழுவினருமே கடுமையாக உழைத்து வருகிறார்கள்.