சாக்கோபார் – விமர்சனம்
மனிதர்களுக்கு பசி, தாகம் மட்டுமல்ல, பயம், செக்ஸ் ஆகியவையும் அடிப்படை உணர்ச்சிகளாக இயற்கையாகவே உள்ளுக்குள் உறைந்திருக்கின்றன. திரைப்பட பார்வையாளர்களுக்குள் இருக்கும் இந்த பயம், செக்ஸ் ஆகிய உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு, அவற்றுக்கு தீனி போடும் வகையில், கலை நயத்துடன், அதிநவீன தொழில்நுட்பத்தில் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா எடுத்த ‘ஐஸ்க்ரீம்’ என்ற தெலுங்குப்படத்தின் தமிழ் டப்பிங் தான் ‘சாக்கோபார்’.
முகேஷ் அம்பானியின் ஆடம்பர பங்களா போன்ற மிக பிரமாண்டமான பங்களா. மருத்துவக்கல்லூரி மாணவியான நாயகி தேஜஸ்விக்கு சொந்தமான அந்த பங்களாவில் அவர் மட்டும் ஒத்தையில் இருக்கிறார். அவரது பெற்றோர்கள் ஒரு திருமணத்தில் கலந்துகொள்வதற்காக வெளியூர் சென்றுவிட, தேர்வு நெருங்குவதால் படிப்பதற்காக அந்த பங்களாவில் தனியே இருக்கிறார் தேஜஸ்வி.
தனிமையில் இருக்கும் தேஜஸ்வியுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும் நோக்கத்துடன் அங்கு வருகிறார், அவரது காதலரும் சக மாணவருமான நவ்தீப். தவளையை ஒத்த ஒரு வினோத பொம்மை அந்த பங்களாவில் இருக்கிறது. “பங்களாவை கட்டியவர்கள் வாஸ்து செண்டிமெண்டுக்காக அந்த பொம்மையை வைத்திருக்கிறார்கள்” என்று விளக்கம் கொடுக்கிறார் தேஜஸ்வி. செண்டிமெண்டில் நம்பிக்கை இல்லாத நவ்தீப், அந்த பொம்மையை அலட்சியமாக காலால் எட்டி உதைக்கிறார். அதன்பின், திகிலூட்டும் அமானுஷ்ய சம்பவங்கள் அரங்கேற தொடங்கிவிடுகின்றன.
பங்களாவைவிட்டு நவ்தீப் போய்விட, தனிமையில் இருக்கும் தேஜஸ்விக்கு, யாரோ பியானோ வாசிக்கும் இசை கேட்கிறது. போய் பார்த்தால் பியானோ அருகில் யாருமில்லை. வெளியிலிருந்து காலிங் பெல் அடிக்கடி ஒலிக்கிறது. போய் கதவை திறந்தால் வெளியே யாரும் இல்லை. சூன்யக்காரி போன்ற ஒரு கிழவி திடீர் திடீரென தோன்றி மறைகிறாள்…. இத்யாதி… இத்யாதி!
அச்சத்தில் வெலவெலக்கும் தேஜஸ்வி, தன் காதலன் நவ்தீப்புக்கு போன் பண்ணி இது பற்றி சொல்ல, “அது ஒண்ணுமில்ல; எல்லாம் உன் கனவு” என்று சொல்லுகிறார் நவ்தீப். அச்சம் நீங்கி தைரியமாக தனிமையில் இருக்கும் தேஜஸ்வி, மீண்டும் அதே அமானுஷ்ய சம்பவங்கள் நிகழ்வதை அறிந்து திகிலடைகிறார். நவ்தீப்பை தன்னுடனே தங்குமாறு கேட்டுக்கொள்கிறார்.
அதன்படி அதே பங்களாவில் தங்கும் நவ்தீப், “நீ ஐஸ்க்ரீம் அதிகம் சாப்பிடுவதால் தான் இது மாதிரி கெட்ட கனவு வருகிறது” என்கிறார். ஆனால், தேஜஸ்விக்குத் தெரிந்த அமானுஷ்ய உருவங்களும், சம்பவங்களும் இப்போது நவ்தீப்புக்கும் தெரிய ஆரம்பிக்க, அவர் அச்சத்தில் அலறுகிறார். அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக, கோரமுகம் காட்டும் தேஜஸ்வி, கத்தியை எடுத்து நவ்தீப்பை குத்திச் சாய்த்து, “இதுவும் கனவு தானே…” என்று கொடூரக்குரலில் நவ்தீப்பிடமே கேட்கிறார்.
என்ன நடந்தது… ஏது நடந்தது… என்று புரியாமல் திரைப்பட பார்வையாளர்கள் தடுமாறிக்கொண்டிருக்க, படம் முடிந்து விடுகிறது. ”சில சம்பவங்கள் காவல்துறைக்கே புரியாத புதிராக உள்ளது. அப்படி ஆந்திராவில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவம் தான் இந்த படம்” என்று படத்தின் ஆரம்பத்தில் இயக்குனர் ராம்கோபால் வர்மா ஏன் குறிப்பிட்டார் என்பது மட்டும் இந்த கிளைமாக்ஸால் புரிந்துபோகிறது.
ஒரே பங்களாவுக்குள் நடக்கும் கதையையும், ஹீரோ, ஹீரோயின், வேலைக்காரி, அவளது மகன், பிளம்பர், கிழவி என ஆறே கதாபாத்திரங்களையும் கொண்ட இப்படத்தின் ஆரம்பத்தில் வரும் திகில் காட்சிகள், படத்தில் என்னமோ இருக்கிறது என்று நம்மை நிமிர வைத்தாலும், அடுத்தடுத்து வரும் காட்சிகள் ஒரே மாதிரியாக இருப்பது சோர்வடையச் செய்கிறது.
கல்லா கட்டுவதில் சூரரான ராம்கோபால் வர்மா இயக்கும் திகில் படங்களில், திகிலைவிட தொடை சொறியும் கிளாமர்தான் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து தூக்கலாக இருக்கும் என்பது செவ்வாய் கிரகம் வரை சென்று சேர்ந்துள்ள செய்தி. இந்த படமும் அதற்கு விதிவிலக்கல்ல. உச்சபட்ச கிளாமர் காட்டும் நாயகி தேஜஸ்வியும், அவரது மேற்பரப்பு, கீழ்பரப்பு, இண்டு, இடுக்கு என சகலத்தையும் பிரித்து மேய்ந்திருக்கும் அஞ்சியின் ஒளிப்பதிவும் ராம்கோபால் வர்மாவின் வக்கிர கலையுணர்ச்சிக்கு மிகப் பெரிய பக்கபலம்.
இருப்பினும், இந்த படம் வெறும் இரண்டேகால் லட்சம் ரூபாயில், ஆறே நாள் படப்பிடிப்பில் எடுத்து முடிக்கப்பட்டது என்று சொல்லுகிறார்களே… அப்படி எடுக்கப்பட்ட படம் எப்படி இருக்கிறது என தெரிந்துகொள்வதற்காக இப்படத்தை ஒரு முறை பார்க்கலாம்.